``நிலம் எங்கள் உரிமை..!" - தன்னாட்சி நடத்தும் தான்சானியா பழங்குடிகள்Sponsoredமனிதன் தோன்றிய காலம் தொட்டு வலியவர்களிடமிருந்து தம் வாழிடங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பெரும் போராட்டங்களைச் சந்தித்துக்கொண்டே வந்திருக்கின்றனர் சிறுபான்மையின மக்கள்.  காட்டையும் அதன் இயற்கையான உற்பத்திகளையுமே முழுமையாகச் சார்ந்து வாழும் பழங்குடிகள் தங்களது வாழ்வாதாரத்தைத் தற்காத்துக்கொள்ள உலகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழல் இது.

Photo Courtesy: Norbert Sonne/WWF

Sponsoredகாட்டின் செயற்பாடுகளையும் அதன் பயன்களையும் புரிந்துகொள்ளத் தொடங்கிய பின்னர் அவற்றைப் பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன அல்லது நீர்த்துப்போகின்றன. ஒருசிலவே சாத்தியப்படுகின்றன. நாம் புரிந்துகொள்வதற்கு முன்னரே அதனோடு இயைந்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பழங்குடிகள். அவர்களிடம் அதை ஒப்படைத்தாலே சரியான முறையில் செயல்பட்டு அதன்மூலம் லாபமும் இயற்கையைச் சீர்குலைக்காத வாழ்வையும் மேற்கொள்ளக்கூடிய திறன் கொண்டவர்கள். இது நடைமுறைச் சாத்தியமற்றதாகச் சிலர் லாபநோக்கத்தோடு பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் இச்சூழலில், காடுகளைப் பராமரித்து அதன்மூலம் பல்வேறு நாடுகளுக்கு மரப்பொருள்களை ஏற்றுமதியும் செய்து தங்கள் கிராமங்களைத் தரமான முறையில் நிர்வாகம் செய்துகொண்டிருக்கிறார்கள் தான்சானியாவின் கில்வா ( Kilwa) மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.

Sponsored


இசைக் கருவிகளின் தயாரிப்பில் பெரும்பங்கு வகிப்பவை மரப்பொருள்கள் தான். அதிலும் கருவைர மரங்கள் என்றால் தனிச்சிறப்பு. தெற்கு ஆப்பிரிக்காவில் கிடைக்கும் கருவைர மரத்துக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உண்டு. தான்சானியா நாட்டின் கில்வா என்ற மாவட்டத்தின் 75% பகுதி காடு. அங்கு பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்தோடு கருவைர மரங்கள் அதிகமாக வளரக்கூடிய பகுதி. யானைகள், நீர்யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற பெரு உயிரினங்கள் வாழக்கூடிய பகுதி. கில்வா மாவட்டத்தில் 13 பழங்குடி கிராமங்கள் இருக்கின்றன. தான்சானிய அரசாங்கம் அவர்களின் மூலம் கருவைர மரங்களை வாங்கி அதை இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 

Photo Courtesy: Huma Khan/WWF

உலகளாவிய நிதி (World wide fund) என்ற அமைப்பு அந்தக் கிராமங்களுக்குச் சென்று அவர்களிடம் காடழிப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த முயன்றது. அந்த அரசாங்கம் அவர்களைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதோடு எப்படி அவர்களின் மூலாதாரமான காடுகளை அழித்துக்கொண்டிருந்தது. அதைப்பற்றி அவர்களிடம் புரியவைக்கப் போன அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களால் அங்கே எதையும் மாற்ற முடியவில்லை. அதற்கான காரணம் அந்த மக்கள் அவர்களின் தேவைகளையும் வேலைவாய்ப்பையும் கருவைர மரங்களை வெட்டிக்கொடுப்பதன் மூலமே ஈடுகட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அன்றாடப் பிழைப்புக்காகச் செய்துகொண்டிருந்த மரம் வெட்டும் தொழிலைக் கைவிட முடியவில்லை. அதுவும், நிலக்கரி வெட்டுவதுமே அவர்களுக்குப் பொருளீட்ட உதவிக் கொண்டிருந்தது. ஓர் இனம் தங்கள் எதிர்காலத்துக்கான வளங்களைக் கைவிடுவதன் மூலமே தமது வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய சூழல் அமைவதைவிடக் கொடுமை வேறெதுவும் இருக்கமுடியாது. அதை அவர்கள் செய்யவேண்டிய சூழலில் இருந்தார்கள்.

Photo Courtesy: Norbert Sonne/WWF

அந்தச் சர்வதேச அமைப்பு இம்பிங்கோ (Mpingo) என்ற உள்ளூர் அமைப்போடு இணைந்து ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். அதாவது சில நிறுவனங்கள் இவர்களின் மூலம் தேவையான சரக்குகளை வாங்கி லாபம் பார்த்தார்கள். அதை ஏன் இவர்களே நேரடியாகச் செய்துகொண்டு வரியை மட்டும் அரசாங்கத்துக்குச் செலுத்தக்கூடாது? அதன்மூலம் இவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாமே!

Photo Courtesy: Norbert Sonne/WWF

தொடக்கத்தில் தங்கள் நிலத்தை ஆக்கிரமிக்கத்தான் இவர்கள் முயல்கிறார்கள் என்ற எண்ணத்தில் உள்ளூர் மக்கள் ஒத்துழைக்கவில்லை. இவர்களின் விடாமுயற்சி அவர்களுக்கு உண்மையைப் புரிய வைத்ததோடு மக்களே இதைப் பற்றிக் கிராம அதிகாரிகள் மூலமாக அரசாங்கத்திடம் பேசினார்கள். முதலில் முரண்டுபிடித்த அரசாங்கம், கிராம மக்களின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் மக்களின் நலனை உணர்ந்து அதற்கு ஒப்புக்கொண்டது. தற்போது அவர்கள் கருவைர மரம் மட்டுமின்றி கருங்காலி, செம்மரம் போன்றவற்றையும் காடுகளில் வளர்த்து உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். 2004-ம் ஆண்டிலிருந்து நடந்துகொண்டிருந்த முயற்சி தற்போது முடிவுக்கு வந்து காடுகளை யார் பொறுப்பில் ஒப்படைத்தால் பாதுகாக்கப்படுமோ அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. தங்கள் மண்ணை அறிந்தவர்களால் மட்டுமே அதன் தன்மை உணர்ந்து அனுபவம் கலந்த அறிவியலோடு செயல்பட முடியும் என்பதற்குத் தான்சானியப் பழங்குடிகள் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

Photo Courtesy: Norbert Sonne/WWF

சுமார் 22,000 மக்கள் வாழும் கில்வா பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களின் வருவாய் முன்பைவிட 50% அதிகரித்துள்ளது. 461,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி அவர்களின் பாதுகாப்பில் தற்போது பராமரிக்கப்படுகிறது. அதில் கால்பகுதி மட்டுமே வியாபார அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம் அவர்கள் எண்ணற்ற பயன்களை அடைந்துள்ளனர். அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் வருவாய் மூலமாகக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மேம்படுத்தவும் அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, கில்வா மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் இருப்பது நஞ்சிரிஞ்சி கிராமம். மாவட்ட மையத்துக்குச் செல்ல அவர்களுக்கு இருப்பதோ ஒரேயொரு சாலை, அதுவும் அவர்களது கிராமத்திலிருந்து சில மைல்களுக்குக் காட்டுச் சாலைதான். அதுவும் மழைக்காலங்களில் போக்குவரத்துக்கு உகந்ததில்லை. எத்தனைப் பெரிய வாகனமாக இருந்தாலும் மழைக்காலங்களில் அந்தப் பாதையைக் கடக்கமுடியாத அளவுக்கு நீர்நிரம்பி நிற்கும். அத்தகையதொரு கிராமத்தின் கடினமான சாலையைக் கடந்துசென்றால் உள்ளே ஒரு குறுநகரமே இருக்கின்றது.

Photo Courtesy: Norbert Sonne/WWF

கான்கிரீட் வீடுகள், அதில் இரும்புக்கூரைகள் என்று வாழும் மக்களுக்கென்று தனி சந்தையே நடக்கிறது. அங்கே கைப்பேசிகள் வரை அவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. கடினமான காட்டுப்பாதையைக் கடந்து சில மணல் வீடுகளைக் கடந்து உள்ளே சென்றால் அவர்களுக்கென்று ஒரு தன்னாட்சியே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் நஞ்சிரிஞ்சி மக்கள். 2 லட்சம் ஏக்கர் காடு அவர்களின் பாதுகாப்பில் இருக்கிறது. 5000 பேர் வசிக்கும் நஞ்சிரிஞ்சி கிராமத்துக்கு மரப்பொருள்களின் மூலம் கிடைக்கும் வருவாய் தான்சானிய நாணயப்படி 13 கோடி. அதுவே எதிர்காலத்தில் 20 கோடியாக உயரலாமென்று அந்நாட்டு அறிஞர்கள் கணித்துள்ளனர். இதைப்போல் நிர்வகித்துக்கொண்டிருக்கும் 13 கிராமங்களின் வருவாய் 150 கோடி ரூபாய்.

சமூக வன நிர்வாகம் ( Community forest management) என்பதைச் சரியான முறையில் கையாண்டு வெற்றியடைந்துள்ளனர் தான்சானியப் பழங்குடிகள். அதற்கான முழுமுதற் காரணம் உலகளாவிய நிதியமைப்போ இம்பிங்கோ என்ற உள்ளூர் அமைப்போ அல்ல; 13 கிராமங்களில் வசிக்கும் பல்வேறு பழங்குடி மக்கள் அவர்களின் இன வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இந்தத் திட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டுசெல்வதுதான்.

ஒரு கிராமத்தைச் சீரமைப்பதாக இருந்தாலும் அங்கு இருக்கும் மரங்களை வெட்டிச்சாய்த்து முதலில் சாலைகள் போடுவதே முதன்மையான வேலையாகச் செய்யும் அரசுகளுக்கு இடையில் அவசியமானது சாலைகள் இல்லை, அதைவிட முக்கியமானவை இருக்கின்றன என்று காட்டுக்குள் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் தான்சானிய மக்களே பழங்குடி மக்களின் நிர்வாகத் திறனுக்கும், காடறிவுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் காடுகளைப் பராமரிக்கத் தொடங்கியபின் யானைகள் உட்பட வனவிலங்குகளின் வரத்து கில்வா வனப்பகுதிக்குள் அதிகமாகி வருவதால் அதன் பல்லுயிர்ச்சூழலும் பெருகியுள்ளது. அத்தோடு வெறும் வியாபார மரங்களை மட்டும் விதைக்காமல் காட்டின் தன்மைக்குத் தகுந்த மரங்களை வளர்த்துவிட்டதன் மூலம் வனத்தின் செயற்பாட்டுக்குப் பேருதவி புரிந்துள்ளனர் தான்சானியப் பழங்குடிகள்.

அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தான்சானிய அரசாங்கம் சுமார் 1 கோடி ஏக்கர் பரப்பளவு வனப்பகுதியை 1400 கிராமங்களிடம் தற்போது ஒப்படைத்துள்ளது. நடைமுறைச் சாத்தியமற்றதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியிலிருக்கும் ஒரு சின்ன நாடு செய்துகாட்டிக் கொண்டிருக்கிறது. இதையே இந்தியாவிலும் செய்தால் நாட்டின் வனப்போர்வையை அதிகரிப்பதில் பெருமளவு நிதி ஒதுக்கவேண்டிய தேவையே இருக்காது.Trending Articles

Sponsored