மாட்டு வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம்... நாட்டு மாடுகள், பாரம்பர்யத்தை காக்கும் வேலா குமாரசாமி!Sponsoredமாப்பிள்ளை ஊர்வலம், பெண் அழைப்பு போன்ற சடங்குகளுக்குப் புகை கக்கும் அலங்கார வாகனங்களைப் பயன்படுத்தி மனதுக்கும் சூழலுக்கும் ஒவ்வாமையையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேலா குமாரசாமி என்பவர் ஸ்பீக்கர்கள், கலர் லைட்டிங், செல்போனுக்கு சார்ஜ் போட பிளக் பாயின்ட், வண்டிக்குள் இருபுறங்களிலும் சாய்ந்து அமர மெத்தை அமைப்பு உள்ளிட்ட வசதிகளோடுகூடிய மாட்டுவண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம், பெண் அழைப்பு உள்ளிட்ட சடங்குகளை நடத்தும் தொழிலைச் செய்து, தமிழ்ப் பாரம்பர்யத்தைக் காத்துவருகிறார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் மாப்பிள்ளையை தனது மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்தார். அங்கே இருந்தவர்கள் அனைவரும் அதை வியந்து பார்த்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் வேலா குமாரசாமியிடம் பேசினோம்...

Sponsored


"எனக்குச் சொந்த ஊர் அரச்சலூர் பக்கத்துல கண்ணம்மாள்புரம். சொந்தமா பத்து ஏக்கர் நிலம் இருக்கு. அதுல சோளம், கம்பு, நெல், காய்கறில்லாம் பயிர்செய்றேன். எனக்கு இப்போ 45 வயசு. 20 வருஷமா நாட்டுமாடுகளை வளர்க்கிறேன். காங்கேயம் காளைகள், பொலிக்காளைகள், பூச்சிக்காளைகள்னு பல நாட்டு ரகங்களை வளர்க்கிறேன்.

Sponsored


என்கிட்ட இப்போ இருபதுக்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கு. அதோடு, காங்கேயம் பசுக்களுக்கு காளைகளைக்கொண்டு இனவிருத்தியும் செய்றேன். பாரம்பர்ய மாடுகளை காபந்துபண்ணணும், அதை அழியவிடக் கூடாதுங்கிற கொள்கையை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கிறேன். அதோடு, ரேக்ளாவண்டிகள், மாட்டுவண்டிகளும் வெச்சிருக்கேன். காங்கேயம் காளைகளைக்கொண்டு, தமிழகம் முழுக்க நடக்கும் பல ரேக்ளா ரேஸ்கள்ல கலந்துக்கிட்டு, பல பரிசுகளை வாங்கியிருக்கேன். 

கடந்த 2010-ல் இருந்து தமிழகம் முழுக்க நடக்கும் நாட்டுமாடுகள் ஷோக்களில் கலந்துகிட்டு, அழகு மாடுகளுக்கான விருதை பலமுறை வாங்கியிருக்கேன். காங்கேயம், ஈரோடு, வெள்ளக்கோயில், திருப்பூர்னு பல இடங்கள்ல என் மாடுகள் பரிசு வாங்கியிருக்கு. பொள்ளாச்சிக்குப் பக்கத்துல உள்ள சமத்தூர் ஜமீன் நடத்துற `கால்நடைத் திருவிழா'வுல தொடர்ந்து நாலு வருஷம் சிறந்த பூச்சிக்காளைக்கான விருதை வாங்கியிருக்கேன். போன வருஷம் நடிகர் கார்த்திக் கையால் அந்த விருதை வாங்கினேன்.

Photo Courtesy: Studio KCT

கடந்த ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி அந்தியூர் சந்தையில 30,000 ரூபாய் கொடுத்து பழைய சவாரி மாட்டுவண்டி ஒண்ணு வாங்கினேன். அதை சொந்தப் பயன்பாட்டுக்கு வெச்சுக்க நினைச்சேன். வீட்டுல கார் வாங்கச் சொன்னாங்க. அதுக்கு மாற்றாவும் நம்ம பாரம்பர்யத்தை நிலைநாட்டவும், வெளியூர்ல நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு இந்த மாட்டுவண்டியில போய் வரவும் ஆரம்பிச்சோம். இந்த வண்டிக்கு, ரெண்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கிய காங்கேயம் காளைகளைப் பயன்படுத்தினேன். இதைப் பார்த்த என் உறவினர் ஒருவர், தனது வீட்டு திருமணத்துக்கு மாப்பிள்ளை அழைப்பை இந்த வண்டியில நடத்த கேட்டார்.

நானும் வண்டியைக் கொடுத்தேன். அதுக்கு செம ரெஸ்பான்ஸ். அதைப் பார்த்ததும், 'இதை ஏன் நாம ஒரு தொழிலா செய்யக் கூடாது?'னு தோணுச்சு. உடனே, மேற்கொண்டு ஒரு லட்சம் ரூபாய் செலவுபண்ணி இந்த வண்டியை அலங்காரப்படுத்தினேன். கலர்ஃபுல் லைட்டுகள், வண்டிக்குள் அமர்வதற்கும் இருபுறமும் சாய்ந்துகொள்வதற்கும் வசதியா மெத்தை அமைப்புகள், ஸ்பீக்கர்கள், செல்போன் சார்ஜ் போட பிளக் பாயின்ட்னு வண்டியை இழையோ இழைன்னு இழைச்சேன். ரெண்டு வருஷம் ஆச்சு. மாசத்துக்கு நாலஞ்சு சவாரி கிடைக்குது. பெரும்பாலும் நானே ஓட்டுவேன். 24 மணி நேரம், 12 மணி நேரம், 3 மணி நேரம்னு சவாரி எடுப்பாங்க. குறைந்த சார்ஜ்தான் வாங்குறேன்.

திருமண வீடுகள்ல மாப்பிள்ளை ஊர்வலம், பெண் அழைப்பு, திருமணம் முடிஞ்சு மணமக்களை ஊர் வரைக்கும் அழைத்துச் செல்ல, பெண் சடங்கு, சீர்வரிசை கொண்டு போக, தேர்தல், பொது நிகழ்ச்சிகள்னு எல்லா நிகழ்வுகளுக்கும் இந்த வண்டியை எடுக்குறாங்க. இன்னும் பலர், இந்த வண்டியை மாடுகளோடு திருமண மண்டபத்துல சும்மா நிறுத்தி வெச்சிருப்பாங்க. பாரம்பர்ய முறையில திருமணம் செய்றவங்க இதை விரும்பி செய்வாங்க. அதோடு, திருமண வீடுகளுக்கு வர்றவங்க இந்த வண்டியையும் காங்கேயம் காளைகளையும் பார்த்து ஆர்வமாகி, இதுக்கு முன்னாடி நின்னு செல்ஃபி எடுத்துக்குவாங்க.

 

இன்னும் சில இடங்கள்ல, என்னை இறக்கிவிட்டுட்டு பொண்ணை மட்டும் உட்காரவெச்சு மாப்பிள்ளையே ஓட்டிக்கிட்டுப் போவார். அப்போ, வண்டியில் உள்ள ஸ்பீக்கரில், 'வண்டி மாடு எட்டுவெச்சு முன்னே போவுதம்மா... வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா...'ங்கிற மாதிரியான டைமிங் பாடல்களை ஒலிக்கவிட்டு அந்த மாப்பிள்ளை - பெண்ணுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்துவோம்.  திருமணம் முடிஞ்சதும், `திருமணத்துக்கு வந்தவர்கள்ல முக்கால்வாசி பேர் `இந்தப் பாரம்பர்ய வண்டியில் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்த நிகழ்வைத்தான் மெச்சிப் பேசினாங்க'னு திருமண வீட்டார் சொல்வாங்க. பெருமையா இருக்கும். இன்னும் பலர், திருமண வீடுகள்ல என் வண்டியையும் காளைகளையும் பார்த்துட்டு, 'நாங்களும் இதே மாதிரி வண்டி வாங்கி, நாட்டுக்காளைகளை வண்டியில பூட்டி, நல்லது கெட்டதுகளுக்குப் போய் வரணும்'னு சொல்லிட்டுப் போவாங்க. 

ஆமாம், என்னதான் நாம மாடர்னா மாறினாலும், மாப்பிள்ளைக்கு வேட்டியும், பெண்ணுக்குப் புடவையும்தானே கட்டுறோம். பெண் கழுத்துல தாலிதானே கட்டவைக்குறோம். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள்ல நமது பாரம்பர்யச் சடங்குகளைத்தானே செய்றோம். ஆனா, நமது முன்னோர்கள் பயன்படுத்திய மாட்டுவண்டிகளைத் தவிர்த்துட்டு, இன்னிக்கு கார், வேன்னு இயற்கைக்குக் கேடு விளைவிக்கிற வாகனங்களைப் பயன்படுத்துகிறோம்.

இன்றைய இளைய தலைமுறை, நாட்டுமாடுகளை காபந்து பண்ண ஆர்வப்படுது. அவர்களை இன்னும் ஊக்கப்படுத்ததான், இதுமாதியான நாட்டுமாடுகளை வெச்சு பாரம்பர்ய மாட்டுவண்டியில நமது சுப நிகழ்வுகளை நடத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்திக்கிட்டிருக்கேன். நமது பாரம்பர்ய விஷயங்களும், கலாசாரத் தொன்மங்களும் உலக நாடுகளுக்கே சவால்விடக்கூடியவை. ஆனா, அந்தப் பாரம்பர்யங்களை அழிச்சுட்டு, வெளிநாட்டு மோகத்துல திரியுறோம். நம்ம பாரம்பர்யத்தை அழியவிடக் கூடாதுங்கிறதை ஒவ்வொருத்தரும் உணரவேண்டிய தருணம் இது. அந்த உணர்வை ஏற்படுத்த என்னாலான சின்ன முயற்சிதான் இந்த மாட்டுவண்டியும் காங்கேயம் காளைகளும்" என்றார் தமிழர்களுக்கே உரிய தன்னடக்கத்துடன்.Trending Articles

Sponsored