அரைநூற்றாண்டை கடந்து நிற்கும் திருச்சி 'கெயிட்டி'.. ரசிகர்களுடன் பிணைந்த தியேட்டரின் கதை!Sponsoredஇன்றைய காலகட்டத்தில், புதுப்படங்கள்  திரையரங்குகளிலும் இணையதளத்திலும் ஒருசேர வெளியாகின்றன. இதனூடே, பல லோக்கல் சேனல்களிலும் கூட புதுப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இவைகளாலும் இது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களாலும் ஐந்தடுக்குகள் கொண்ட பிரமாண்ட திரையரங்குகளே மூடுவிழாக்கள் கண்டு வருகின்றன. ஆனாலும், இதையெல்லாம் தாண்டி அரை நூற்றாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகரமாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது திருச்சியின் பழமையான தியேட்டர்களில் ஒன்றான 'கெயிட்டி' தியேட்டர்!

திருச்சி சிங்காரத்தோப்பு காமராஜர் வளைவுக்கு அருகில் இன்றும் பழைமை மாறாமல் கம்பீரமாக நிற்கிறது இந்த 'கெயிட்டி' தியேட்டர். பகல் வேளையில் நாம் இங்கு செல்லும்போது கார்த்திக் - சௌந்தர்யா நடித்த 'முத்துகாளை' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நூறுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையரங்கில் ரசிகர்கள் உட்கார்ந்திருந்தனர். இங்கு முதல் வகுப்பு கட்டணம் முப்பது ரூபாய், இரண்டாம் வகுப்பு கட்டணம் இருபத்தைந்து ரூபாய், மூன்றாம் வகுப்பு கட்டணம் இருபது ரூபாய் (பெண்களுக்கு மட்டும்) என இங்கு கட்டணங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

Sponsored


மேலே சென்று டிக்கெட் கவுன்டரை ஒரு நோட்டம் விட்டோம். மிஷினுக்கு மாறிவிட்ட இந்தக் காலத்தில் இன்றும் டிக்கெட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்தத் திரையரங்கில், மொத்தம்  375 சீட்டுகள் இருக்கின்றன.

Sponsored


இந்தத் திரையரங்கின் மேலாளர் இக்பாலை சந்தித்தோம். அவரிடம், “ரொம்ப வருசமா உங்க தியேட்டர்ல பழைய படங்களை மட்டுமே போடுறீங்களே... நல்லா ஓடுதா?” என்றோம். “அதென்னங்க அப்படி கேட்டுட்டீங்க... வாரத்துக்கு ரெண்டு படம் போடுவோம். இப்போதான் 'முத்துகாளை' படம் போட்டோம். கூட்டம் தொடர்ந்து வந்துட்டு இருக்குதுங்க. இதுக்கு முன்னாடி ஒருதடவை 'கரகாட்டக்காரன்' படம் போட்டுருந்தோம். நல்லா ஹவுஸ் ஃபுல்லா 14 நாள் ஓடுச்சு. இந்த மாதிரி பழைய தியேட்டர்லலாம் அத்தனை நாள் ஓடுறது பெரிய சாதனைங்க.  இங்கே டி.டி.எஸ், க்யூப், அதெல்லாம் கிடையாதுங்க. சிங்கிள் புரொஜெக்டர்ல கார்பனை எரிச்சுதான் படத்தை ஓட்டுறோம். தியேட்டர் மேற்கூரைக்கு ஸீலிங் போட்டிருக்கோம். ரசிகர்கள் நல்லா வசதியா படம் பாக்குறதுக்காக பன்னிரண்டு மின்விசிறிகள் பொருத்தியிருக்கிறோம். தரை பெஞ்ச், பெஞ்ச் என  நிறைய சீட்டுகள் இருக்குதுங்க இந்தத் தியேட்டர்ல. 

எப்போதாவது  எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவங்க அணுகும்போது அவங்க படங்களைப் போட்டுருவோம்.  எம்.ஜி.ஆர், சிவாஜி படம் ஓடுறப்ப பெரிய கூட்டம் கிடைக்கும். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சப்போ இந்த தியேட்டர்ல போட்ட எம்.ஜி.ஆர் படத்துக்கு அத்தனை கூட்டம். அது பெரிய ரெகார்டு சார். இப்போ இந்தத் தியேட்டர்ல  டிக்கெட் கொடுக்க ஒருத்தர், இரண்டு ஆபரேட்டர், ஒரு துப்புரவு வேலை செய்றவர் அப்புறம் ஒரு மேலாளர்னு மொத்தம் அஞ்சு பேரு இருக்கோம். 

என்கிட்ட நிறைய பேர் கேட்குறாங்க. 'முன்னபோல இங்கே தரையில் மணலைக் குவிச்சு காலை நீட்டி - மடக்கிப் படம் பார்க்க முடியலை'ங்கறாங்க. அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும். அரசு உத்தரவிட்டதுபடி எல்லாத்தையும் சின்னதும், பெருசுமா பெஞ்சாவே மாத்திட்டோம்." என்றார்.

அவரிடம் விடைபெற்றுவிட்டு அரங்கின் உள்ளே நுழைந்தோம். உள்ளே, திரையில் கார்த்திக் நடித்துக்கொண்டிருந்தார். ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர். நாமும் கார்த்திக்கை சிறிது நேரம் ரசித்துவிட்டு ரசிகர்களுக்குத் தொல்லை தராத வண்ணமாக அமைதியாக வெளியில் வந்தோம். 

இதுபோன்ற பழைய தியேட்டர்களில் அன்றும் சரி, இன்றும் சரி  புரொஜெக்டர் ரூமை எட்டிப் பார்ப்பது ஒரு மிகப்பெரிய சாகசம்தான். அந்த ஆசையையும் நிறைவேற்றிவிட்டு வந்தோம். எத்தனையோ கேளிக்கைகள் வந்தாலும் பொழுதுபோக்கின் தவிர்க்க முடியாத அம்சம் சினிமாதான் என்பதை அறுதியிட்டு உணர்த்துகின்றன 'கெயிட்டி' போன்ற பழைய திரையரங்குகள்! Trending Articles

Sponsored