வேதனையிலிருப்பவர்களுக்கு என்ன தேவை தெரியுமா? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStorySponsored`ரோஜாவைக் கொடுப்பவரின் கரங்களில் எப்போதும் அந்த நறுமணம் தேங்கியிருக்கும்’ - க்யூபாவைச் சேர்ந்த நடிகை ஹடா பிஜார் (Hada Béjar) சொன்ன பொன்மொழி இது. இதன் மூலமாக பிறருக்கு உதவி செய்வதன் மகத்துவத்தை, பிறரிடம் அன்பாக இருப்பவரின் பெருமையை, கருணையின் உயர்வைச் சொல்கிறார் ஹடா பிஜார். அதனால்தான் `அன்பின் வழியது உயிர்நிலை’ என்கிறார் திருவள்ளுவர். ஆக, அன்புள்ளம் கொண்டவர்கள்தான் உயிருள்ளவர்கள்; அது இல்லாதவர்கள் வெறும் எலும்பையும் தோலையும் போர்த்திய உடம்பைக் கொண்டவர்கள் என்பது வள்ளுவர் வாக்கு. பிறரின் துயரம்போக்க நீள்கிற கைகளை வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இயற்கையும் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். மற்றவர்களின் வேதனையைப் போக்கப் பல நேரங்களில் பெரியதாக எதுவும் தேவைப்படுவதில்லை... ஆறுதலான வார்த்தைகள், அன்பான அரவணைப்பு, ஏன்... முதுகில் தட்டிக் கொடுப்பதுகூட சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய பலத்தைக் கொடுத்துவிடும். ஆனால், அதற்குக்கூட நம்மில் பலருக்கு நேரமிருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அன்பின் அருமையை எடுத்துச் சொல்லும் கதை இது! 

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. லண்டன் நகரம்... கிறிஸ்துமஸ் மாலை... ஓர் இளம் வயது ராணுவ வீரன் தன் முகாமில் உட்கார்ந்திருந்தான். `எவ்வளவு முக்கியமான நாள்?! இன்றைக்குக்கூட குடும்பத்தோடு இருக்க முடியவில்லையே!’ தனிமையும் சோகமும் அவனை வாட்டியெடுத்தன. வெகு தூரத்தில், அவனுடைய சொந்த ஊரிலிருக்கும் அம்மாவையும் அப்பாவையும் தன் மனைவியையும் மகனையும் நினைத்துக்கொண்டான். இந்த நேரத்தில் அவர்களும் தன்னைத்தான் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதை நினைக்க நினைக்க அவனை வருத்தம் கவ்விக்கொண்டது. `முதலில் இங்கிருந்து எங்கேயாவது வெளியே போய்விட்டு வந்தால்தான் நன்றாக இருக்கும்’ என்றும் தோன்றியது. 

Sponsored


Sponsored


ஆனால், வெளியே போவதென்றால் எங்கே போவது? தேவாலயங்கள் உள்பட பல பொது இடங்கள் மூடப்பட்டிருந்தன அல்லது போரில் சேதமடைந்திருந்தன. சூழ்நிலை அவ்வளவு நன்றாக இல்லை. அந்த கிறிஸ்துமஸ் நாளில் மனிதர்கள் நடமாட்டமே குறைந்துபோயிருந்தது. ஆனாலும் எங்கேயாவது கிளம்பிப் போக வேண்டும் என்கிற அவனின் வேட்கை மட்டும் குறையவில்லை. சக போர் வீரர்களில் சில நண்பர்களை அழைத்துக்கொண்டான். வெளியே போவது, கண்ணில் எது படுகிறதோ அந்த இடத்தில் கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துக்கொண்டார்கள். 

அவர்கள் ராணுவ முகாமிலிருந்து வெளியே வந்தார்கள். ஆள் நடமாட்டம் அருகிப்போயிருந்த லண்டன் வீதிகளில் மெள்ள நடந்தார்கள். சற்று தூரத்தில் ஒரு சாம்பல் நிற பழைய கட்டடம் தெரிந்தது. வெளியே, அதன் முகப்பில் `ராணி ஆன் அனாதை இல்லம்’ (Queen Anne's Orphanage) என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து பார்க்கலாம் என்று அந்த இளம் போர் வீரனும் அவன் சகாக்களும் முடிவுசெய்துகொண்டார்கள். 

அந்தக் கட்டடத்தின் கதவைத் தட்டினான் இளம் வீரன். அவன் மனம் அடித்துக்கொண்டது. `உள்ளே எத்தனை குழந்தைகள் இருப்பார்கள், அவர்களோடு கிறிஸ்துமஸை கொண்டாட முடியுமா?’ என்றெல்லாம் அவன் யோசித்தான். ஒரு வயதான பெண்மணி கதவை லேசாகத் திறந்து, யார் கதவைத் தட்டியது என்று பார்த்தார். அவர் கண்களில் பயம் தெரிந்தது. இளைஞனும் அவன் நண்பர்களும் கோரஸாக அந்தப் பெண்மணிக்கு ``மெர்ரி கிறிஸ்துமஸ்!’’ சொன்னார்கள். பிறகு அந்த இளைஞன் ``உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா?’’ என்று கேட்டான். அவர் பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். 

``மேடம்! கொஞ்ச நேரம் நாங்க உள்ளே வந்து இங்கேயிருக்குற குழந்தைகளோட பேசிக்கிட்டு இருக்கலாமா?’’ இளைஞன் கேட்டான். முதிய பெண்மணி இப்போது அவன் மேல் நம்பிக்கை வந்தவராக கதவை நன்றாகத் திறந்து, அவனையும் அவன் நண்பர்களையும் உள்ளே வரச் சொன்னார். அவர்கள் உள்ளே நுழைந்ததும், மாடியிலிருந்து படிகளில் ஆரவாரத்தோடு சிறுவர், சிறுமிகள் இறங்கிவரும் சத்தம் கேட்டது. `அவர்களுக்கும் கதவைத் தட்டியது யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்திருக்கும்’ என்று நினைத்துக்கொண்டான் இளம் போர்வீரன். 

அந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள் இளைஞனும் அவன் சகாக்களும். இங்கே குழந்தைகள் இருப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மலர்ந்த முகத்தோடிருக்கும் அவர்களைப் பார்த்தால் தங்களுக்கு ஆறுதல் கிடைக்குமே என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், நிஜம் வேறாக இருந்தது. குழந்தைகள் அத்தனைபேரும் வாடிய மலர்களாக இருந்தார்கள். ஒருவர் கண்ணிலும் ஒளியில்லை. வறுமை உடலோடும் உடையோடும் இழையோடியிருந்தது. அங்கே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஓர் அறிகுறியும் தெரியவில்லை. கிறிஸ்துமஸ் மரம், அலங்காரங்கள்... ஏன்... ஒரு பலூன்கூட அங்கே தொங்கவிடப்பட்டிருக்கவில்லை. ஒளிக்குப் பதிலாக அங்கே இருள் சூழ்ந்திருந்தது மாதிரி ஒரே ஒரு விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. 

இளைஞனும் அவன் சகாக்களும் தங்களை திடப்படுத்திக்கொண்டார்கள். தாங்கள் வந்த காரியத்தைச் செய்தே தீருவது என்று முடிவெடுத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு குழந்தையாக அழைத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொன்னார்கள். அவர்களுடன் பேசினார்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டார்கள். இவர்களும் கதைகள் சொன்னார்கள். ஆர, அமர ஆதரவாக குழந்தைகளுடன் உரையாடினார்கள். பபிள் கம், சாக்லேட், நாணயங்கள், ரிப்பன், விசில்... என்று தங்கள் பாக்கெட்டில் என்னவெல்லாம் இருந்ததோ அவற்றையெல்லாம் பரிசாகக் கொடுத்தார்கள். சமூகம் மறந்துபோன அந்த அப்பாவிக் குழந்தைகளுடன் அவர்கள் முழு மனதாக, ஆர்வமாக, அன்பாக அந்த நேரத்தைச் செலவழித்தார்கள். இளைஞனுக்கும் அவன் நண்பர்களுக்கும் அந்தக் குழந்தைகளுடன் தங்களிடமிருப்பதைப் பகிர்ந்துகொள்வதும், எதையாவது கொடுப்பதும், பேசுவதும் மிகுந்த மனநிறைவைத் தந்தது. 

அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. முதிய பெண்மணியிடமும் மற்ற குழந்தைகளிடமும் விடைபெற்றுக்கொண்டு இளைஞனும் அவன் நண்பர்களும் கிளம்பினார்கள். அவர்கள் வெளியே நடக்க முற்பட்டபோது ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் அவர்களைத் தாண்டி ஓடி, வாசலில் அந்த இளைஞனை வழிமறித்து நின்றுகொண்டான். அவன் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. இளைஞனுக்கு ஊரிலிருக்கும் தன் மகனின் நினைவு வந்தது. அவனுக்கும் இவனின் வயதுதான் இருக்கும். 

இளைஞன் அந்தச் சிறுவனின் அருகே போனான். ஒரு காலை மடித்து அமர்ந்து, சிறுவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தான். சிறுவனின் கண்ணீர் கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது. 

``குட்டிப் பையா! உனக்கு கிறிஸ்துமஸ் பரிசாக இன்னும் வேற ஏதாவது வேணுமா?’’ என்று கேட்டான் இளம் போர்வீரன். 

அந்தச் சிறுவன் கொஞ்சம்கூடத் தயங்கவில்லை. ``உங்க மகனா என்னை நினைச்சு அணைச்சுக்கங்க!’’ என்றான். 

இளைஞன் அவனை வாரியெடுத்து அணைத்துக்கொண்டான். அந்தச் சிறுவன் சொன்னான்... ``இன்னும் இறுக்கமா...’’Trending Articles

Sponsored