``அப்பா நீங்க எனக்குக் கடவுள்தான்!” - மறைந்த தந்தையைப் பற்றி உருகிய மஞ்சு வாரியர்!Sponsoredபிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் தந்தை மாதவன் வாரியர் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இரண்டு வருடங்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், கேரளாவின் திருச்சூரில் அவரது வீட்டில், ஞாயிற்றுக்கிழமை (10.06.18) மதியம் 3 மணியளவில் மறைந்தார். மஞ்சு வாரியரின் முன்னாள் கணவர் திலீப், மகள் மீனாட்சி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 2016-ம் ஆண்டு, சமுத்திரகனி இயக்கி வெளியான 'அப்பா' திரைப்படத்தின் புரமோஷனுக்காக, தன் அப்பா பற்றி மலையாளத்தில் ஒரு வீடியோவில் மனநெகிழ்ந்து பேசியிருந்தார் மஞ்சு வாரியர். அந்த வீடியோவிலிருந்து...

``நான் பிறந்து வளர்ந்தது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில். என் அப்பாவுடனான நினைவுகளும் அங்கிருந்துதான் தொடங்கியது. என் அப்பா ஒரு சிட்ஃபண்ட் நிறுவன வேலையில் இருந்தார். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. நானும் என் அண்ணனும் எங்கள் குட்டி வீட்டில் இருக்கும் கேட் முன்னாடி அப்பாவின் வண்டிச் சத்தம் கேட்கிறதுக்காக ஒவ்வொரு நாள் மாலையிலும் காத்திருப்போம். ஒவ்வொரு நாளும் அவரோட பைக் சத்தம் கேட்கவே செம்ம த்ரில்லிங்கா இருக்கும்.

Sponsored


அப்புறம், என் அண்ணன் திருவனந்தபுரத்தில் தங்கி, அங்கே இருக்கும் சாய்னிக் பள்ளியில் படிச்சுட்டிருந்தான். நாங்க ஒவ்வொரு வாரமும் அவனைப் பார்க்கப் போவோம். திரும்ப பஸ்ஸில் வரும்போது, அண்ணன் இல்லாமல் திரும்ப வீட்டுக்குப் போகணுமே என அழுகையா வரும். அப்போ, ‘கடனினக்கரே போனோரே' பாட்டை அப்பா பாடி சிரிக்கவைப்பார். இல்லையென்றால், தமிழ்ப் பாட்டு பாடி சந்தோஷப்படுத்துவார்.

Sponsored


மஞ்சு வாரியரின் தந்தை மாதவன் வாரியர் மற்றும் தாய் கிரிஜா வாரியர்

அப்பா எங்களைச் சிரிக்கவைக்கிறதுக்காக, அவரின் கண்ணீரை மறைத்து வாழ்ந்துட்டிருந்தார். அவர் அதிகம் சம்பாதிக்கலை. ஆனால், நாங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கிற மாதிரி பார்த்துக்கொண்டார். அவர் நிறைய  இடங்களுக்கு நடந்தே போவார். காரணம், அந்தப் பயணத்துக்கான செலவை குறைத்தால், எங்களுக்குப் பயன்படுமே என நினைத்தார். நான் டான்ஸ் ஆடுறதுக்காக வாங்கிக்கொடுத்த கொலுசு, அவரின் வியர்வை. இதை நான் எப்பவுமே நினைச்சுப்பேன். ஆனால், அவரின் நிலைமை அப்போ எனக்குத் தெரியாது. அவர் என்னை அடிக்கடி கட்டி அணைப்பார். அவருடைய வலிகளை நான் இப்போதுதான் புரிஞ்சுக்கிறேன்.

பல்வேறு சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என அப்பா கற்றுக்கொடுத்திருக்கிறார். நான் வளர்ந்த பிறகு, என்னுடைய வாழ்க்கையில் எடுத்த சொந்த முடிவுகள் பற்றி அவர் என்றுமே குறை சொன்னதில்லை. அதற்குப் பதில், எனக்கு எப்போது உறுதுணையாக நின்றிருக்கிறார். அவர் என்னோடு இருப்பதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பலம். அவர் ஒரு மலையைப்போல, மரத்தைப்போல இருந்து எங்களைப் பார்த்துக்கொண்டார். அவருக்குப் புற்றுநோய் வந்தபின்தான் சோர்ந்துபோவதைப் பார்த்தேன். அவர் எங்களை எப்படிப் பார்த்துக்கொண்டாரோ அப்படித்தான் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அம்மா கடல் எனில், அப்பா மிகப்பெரிய வெளி. இன்னும் சொல்லனும்னா... அப்பா நீங்க எனக்குக் கடவுள்தான்!”

சில ஆண்டுகள் முன்பு, ஒரு மலையாள தொலைக்காட்சி செய்திக்கு, மாதவன் வாரியரும் அவரின் மனைவி கிரிஜா வாரியரும் அளித்த பேட்டியில், மஞ்சு வாரியர்தான் அவர்கள் இருவரையும் புற்றுநோயிலிருந்து  மீட்க, மனதளவிலும் உடலளவிலும் உதவி செய்துவருவதாக நெகிழ்ந்து கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored