”இனி உங்கள் தகவல்கள் கடலுக்கடியில்தான் இருக்கும்!” - மைக்ரோசாஃப்ட்டின் திட்டம் என்ன?Sponsoredமற்ற நிறுவனங்கள் இது வரை முயற்சி செய்யாத ஒரு விஷயத்தைச் செயல்படுத்திப் பார்க்க தயாராகியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்களது டேட்டா சென்டர்களை நிலத்துக்கு மேலே அமைத்துக்கொண்டிருக்க, தனது டேட்டா சென்டரை கடலுக்குக் கீழே அமைக்க முடிவு செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

இந்தத் துறையில் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்படும் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைந்தால் எதிர்காலத்தில் மற்ற நிறுவனங்களின் டேட்டா சென்டர்களின் அமைவிடங்களும் கடலுக்கு அடியில் செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும். 

Sponsored


இணையத்தின் அடித்தளம்

Sponsored


புதிய திட்டம் எல்லாம் இருக்கட்டும். முதலில் டேட்டா சென்டர்கள் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு அதைப் பற்றிய சிறிய அறிமுகம். ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவத்தின் டேட்டா மற்றும் வாடிக்கையாளர்களின் டேட்டாவைச் சேமித்து வைக்கும் ஓர்  இடம்தான் டேட்டா சென்டர். எடுத்துக்காட்டாக ஜிமெயிலில் இருக்கும் ஒரு படத்தை டவுன்லோடு செய்ய வேண்டும் என வைத்துக் கொள்வோம். லாகின் செய்தால் அந்தப் படத்தை எளிதாக டவுன்லோடு செய்து விடலாம். நீங்கள் லாகின் செய்யும் யூசர் நேம், பாஸ்வேர்டு  முதல் அந்தப் புகைப்படம் வரை அனைத்துமே அமெரிக்காவில் இருக்கும் டேட்டா சென்டரிலோ, நெதர்லாந்தில் இருக்கும் ஒரு டேட்டா சென்டரிலோ சேமித்து வைக்கப்பட்டிருக்கக்கூடும். கூகுளிடமிருந்து ஒரு தகவலைப் பெற வேண்டும் என்றால் அந்த டேட்டா கடல் கடந்து பயணித்துதான் ஒருவரைச் சென்றடையும். இந்த மொத்தச் செயல்பாடுமே ஒரு நொடியின் சில பங்கு நேரத்தில் நடக்கிறதென்றால் இதன் வேகத்தையும், இணையத்தின் வலிமையையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். கூகுள், ஃபேஸ்புக் மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களிடமும் டேட்டா சென்டர்கள் இருக்கின்றன தேவைக்குத் தகுந்தவாறு அதன் அளவு வேறுபாடும்.

கடலுக்கடியில் எதற்காக டேட்டா சென்டர் ?

மைக்ரோசாஃப்ட்டும் தனது டேட்டா சென்டர்களை வழக்கமாக மற்ற நிறுவனங்களைப் போல நிலத்துக்கு மேல்தான் அமைத்து வந்தது. ஆனால் கடந்த 2015-ம் ஆண்டில் இந்தப் புதிய முயற்சியை ப்ராஜெக்ட் நேட்டிக் (Project Natick) என்ற பெயரில் சிறிய அளவில் செயல்படுத்திப் பார்த்தது. அதன் பிறகு கடந்த சில வருடங்களாகவே இதற்கான ஆராய்ச்சியில் இருந்த மைக்ரோசாஃப்ட் தற்பொழுது அதனைப் பெரிய அளவில் விரிவுபடுத்தியிருக்கிறது. உலகில் அவ்வளவு நிலப்பகுதிகள் இருக்கையில் மைக்ரோசாஃப்ட் கடலுக்கடியில் தனது டேட்டா சென்டரை காரணமில்லாமல் ஒன்றும் அமைக்கவில்லை. எந்த ஒரு டேட்டா சென்டரையும் விரும்பும் இடத்தில் எல்லாம் நிறுவிட முடியாது. அதற்கான இடத்தைப் பல விஷயங்களை ஆய்வு செய்த பின்னர்தான் முடிவு செய்வார்கள். முக்கியமாக டேட்டா சென்டர்களின் உள்ளே அதிக வெப்பம் உருவாகும் சூழல் காணப்படும். அதைக் குறைக்கும் இயந்திரங்கள் இயங்குவதற்கு மின்சாரம் அந்த இடத்தில் தடை இல்லாமல் கிடைக்க வேண்டும், அவசர உதவிக்குப் போக்குவரத்து வசதிகள் இருக்க வேண்டும் எனப் பல விஷயங்களை ஆராய்ச்சி செய்த பிறகே இடத்தை முடிவு செய்வார்கள்.

கடலுக்கு அடியில் இருக்கும் நீர் எளிதாக வெப்பத்தை வெளியேற்றிவிடும் என்பதால் குறைவான அளவு மின்சாரமே தேவைப்படும். இடத்தின் குளிர்சாதன விஷயங்களுக்காகத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவை இந்தப் புதிய திட்டத்தின் மூலமாகக் குறைக்க முடியும் என்கிறது மைக்ரோசாஃப்ட். மேலும், இந்த டேட்டா சென்டர் இயங்கத் தேவையான மின்சாரம் முற்றிலும் சூரிய ஒளி, காற்று மற்றும் கடல் அலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்படுவதால் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பங்களிக்கும். தண்ணீருக்கும் மின்னணுச் சாதனங்களுக்கும் ஒத்து வராது என்பதால் நீர் புக முடியாத அளவில் இந்த கன்டெய்னர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு தீவின் கடல்பகுதியில் தற்பொழுது இந்த டேட்டா சென்டர் பகுதி கடலில் இறக்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் காணப்படும் ஒரு கன்டெய்னர் அளவில் இது இருக்கிறது. இதனுள்ளே 12 அடுக்குகளில் 864 சர்வர்களும் 27.6 பீட்டாபைட் அளவுள்ள தகவல்கள் சேமிக்கும் டிஸ்க்குகளும் இருக்கின்றன. இது 5 மில்லியன் திரைப்படங்களைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. 90 நாள்களில் இதை உருவாக்கிக் கடலில் இறக்கி விட முடியும். 5 வருடங்களுக்கு இது எந்த வித பராமரிப்பும் இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டதனால் இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என நம்புகிறது மைக்ரோசாஃப்ட்!Trending Articles

Sponsored