விண்வெளிக்குப் போறோம்... பூமி கூட செல்ஃபி எடுக்கறோம்! - செலவு 338,02,50,000 ரூபாய் மட்டுமேSponsoredமைக் சஃப்ரெடினி (Mike Suffredini) நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருந்தவர். 2015-ம் ஆண்டு ஓய்வுபெற்றவர், தனது நீண்டநாள் கனவான விண்வெளிச் சுற்றுலா ஏற்பாடு செய்வதையும் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதையும் சாத்தியப்படுத்த வேண்டுமென்று நினைத்தார். ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சீ.ஈ.ஓ-வாக இருக்கும் மைக் தனது கனவு நிஜமாகப் போவதைக் கண்கூடாகப் பார்க்கும் நாள் வெகுதூரமில்லை. புதுவிதமான, வித்தியாசமான இடங்களுக்குப் பயணிப்பது, காதில் கேட்டபோது ஏற்பட்ட சுவாரஸ்யத்தை உடல் மற்றும் மனதளவில் நேரடியாக அனுபவிக்கத் துணிச்சலான பயணத்தை எதிர்நோக்கிச் செல்வது போன்றவை ஆதியிலிருந்தே மனிதர்களின் ஆசைப் பட்டியல்களில் முதலிடத்தைப் பிடித்து வருகின்றன.

பூமியின் சுவாரஸ்யங்களில் அலுத்துப்போன மனிதர்கள், விண்வெளியை நாடிச்செல்லும் காலத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் விண்வெளிச் சுற்றுலா செல்லவும், அங்கே எடுக்கும் செல்ஃபிக்களால் தங்களது சமூக வலைதளக் கணக்குகளை நிரப்பவும் காலம் கனிந்துவிட்டது. இருப்பினும் இந்தக் காலமென்னும் கடவுள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் அருள்புரிவதில்லை. மிகவும் குறைவான விகிதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மகா கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே இந்த விண்வெளிச் சுற்றுலா சாத்தியம். இந்திய மதிப்பில் 338 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகுமென்றால் அப்படித்தானே. 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 8 நாள்கள் நடைபெறும் இந்தச் சுற்றுலாவுக்குப் பூர்வாங்கமாக 15 நாள்கள் விண்வெளியில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிப் பயிற்சி வகுப்புகளும் நடைபெறும்.
இந்தப் புதிய முயற்சிக்குத் தலைமை தாங்கும் மைக் புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர். ப்ளூ ஒரிஜின் (Blue Origin) என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த முயற்சிக்குத் தலைமை தாங்கும் மைக், முட்டை வடிவத்தில் ஒருவர் மட்டும் தங்கக்கூடிய அறையை வடிவமைத்தார். வியாபார ரீதியில் கட்டப்படும் விண்வெளிக் கப்பலில் முட்டை வடிவிலான இந்த அறைகள் பொருத்தப்பட்டிருக்கும். சுற்றுலாப் பயணிகள் அதில் தங்கிக் கொள்ளலாம். தற்போது அதைப்போன்ற மாதிரியை மட்டுமே வடிவமைத்திருக்கும் ஆக்ஸியம் நிறுவனம் 2020-க்குள் தனது விண்வெளிச் சுற்றுலாக் கப்பலின் கட்டமைப்பு வேலைகள் முடிந்துவிடுமென்றும் 2022-ல் வணிக ரீதியான பயணம் தொடங்கிவிடுமென்றும் உறுதியளித்துள்ளார்.

Sponsored


Sponsored


Photo Courtesy: Axiom Space

பூமியிலிருந்து 13,20,000 அடி உயரத்தில் முகாம் அமைத்துத் தங்கள் விடுமுறைகளைக் கொண்டாட மக்களுக்கொரு வாய்ப்பு கிடைத்துள்ளது மைல்கல்லாகக் கருதப்படவேண்டிய அறிவியல் சாதனைதான். அந்த முட்டை வடிவ அறைக்குள் பயணிகளுக்குத் தேவையானவற்றை வடிவமைப்பதற்காக பிரெஞ்சு வடிவமைப்பாளரான பிலிப் ஸ்டார்க் என்பவரை மைக் தேர்வு செய்துள்ளார். உட்புறக் கட்டமைப்புக்கான வடிவமைப்பும் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது.
சிறிய மானிடர்களில் தொடங்கி பஞ்சுபோன்ற மென்மையான சுவர்களை அமைத்து அதில் எல்.ஈ.டி லைட்டுகளைப் பொருத்தி ஏதோ பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பதைப் போன்றதோர் அனுபவத்தைத் தர முனைந்துள்ளார் ஸ்டார்க். எல்.ஈ.டி லைட்டுகள் பகல், இரவு வித்தியாசங்களுக்கு ஏற்ப அதன் வெளிச்சங்களை மாற்றிக்கொள்ளும் திறனோடு அமைக்கப்படும். சுற்றியும் இருட்டாயிருக்கும் அங்கு, பகல் இரவெல்லாம் தெரியாதல்லவா! அதனால்தான் பூமியின் நேரத்தையும் தட்பவெப்ப நிலையையும் உணர்ந்துகொள்ளச் செய்யும் ஏற்பாடு இது. அதே சமயம் விண்வெளியில் இருக்கும் ஈர்ப்பு விசையற்ற தன்மையையும் பயணிகள் உணர்ந்துகொள்ள அதற்கு ஏற்றாற்போன்ற வசதிகளும் செய்யப்படும். ஆக விண்வெளிக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் தேவைகளைப் போதுமான வரையிலும் பூர்த்திசெய்து வணிகரீதியில் அவர்களுக்கான சொகுசுகளை ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதே சமயம் விண்வெளியில் இருக்கிறோம் என்பதை உடல் மற்றும் மனதளவில் உணரவேண்டுமென்பதே சுற்றுலாவின் நோக்கம். அதற்காக விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைகளில் ஜன்னல் வசதிகள் வைப்பதன் மூலம் விண்வெளியை ரசிக்க வைப்பதோடு, சராசரி விண்வெளிக் கப்பலில் இருப்பதைப் போலவே ஜீரோ கிராவிட்டியில் அதாவது ஈர்ப்புவிசையற்ற சூழ்நிலையில் பயணிகள் மிதந்துகொண்டும் இருப்பார்கள் என்பதே இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.

Photo Courtesy: New York Times

இவற்றோடு மற்றுமொரு முக்கியமான குறிப்பிடக்கூடிய அம்சம் உண்டு. அதுதான் வைஃபை. நீங்கள் உங்கள் விண்வெளிச் சுற்றுலாவின்போது செல்ஃபி எடுக்கலாம். அதை உங்கள் முட்டை வடிவ அறையிலிருக்கும் வைஃபை வசதியைப் பயன்படுத்திச் சமூக வலைதளத்தில் பகிரலாம்.
ஒரு விண்வெளிச் சுற்றுலாக் கப்பலில் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரரோடு சேர்த்து எட்டுப் பேர் பயணிக்கலாம். அதற்காக ஒவ்வொருவரும் செலுத்தவேண்டிய கட்டணம் 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. 15 நாள்களுக்கான பயிற்சி வகுப்புகளும் அதில் அடக்கம். ஆக்ஸியம் நிறுவனத்தின் தலைமைச் செயலகத்திலிருந்து 10 நிமிடப் பயண தூரத்தில் ஜான்சன் விண்வெளி மையத்தில்தான் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இதுவரைக்கும் மூன்றுபேர் இந்தப் பதினைந்து நாள்கள் பயிற்சிக்கு மட்டும் தலா ஒரு மில்லியன் டாலர்கள் செலுத்திப் பதிவு செய்திருக்கிறார்கள். 

``ஆம், விலை மிகவும் அதிகமாகத்தான் வைத்திருக்கிறோம். என்ன செய்வது? ராக்கெட் பயணம் எளிமையான பொருள்செலவில் செய்யமுடியாதே!" என்கிறார் மைக் சஃப்ரெடினி.
போக்குவரத்து வணிகத்தில் அடுத்த மைல்கல்லாக இது இருக்குமென்று எதிர்காலத்தைச் சில அறிவியலாளர்கள் கணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஓரியான் ஸ்பான் என்ற வணிக நிறுவனம் அரோரா (Arora Station) என்ற பெயரில் விண்வெளி ஹோட்டல் ஒன்றைப் பூமியின் சுழல்வட்டப்பாதையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. நானோ ராக்ஸ் ( Nano Rocks) என்ற நிறுவனமும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தைப் போலவே மக்களுக்கான வாழிடங்களையும் ஏற்படுத்தப் போவதாகவும், அவர்களுக்கென்றே விண்வெளிப் புறக்காவல் நிலையங்களும் ஏற்படுத்தப்படுமென்றும் ஏதோ அறிவியில் புனைகதைகளைப் போல் திட்டங்களைத் தீட்டிக்கொண்டே போகிறார்கள்.

Photo Courtesy: Axiom Space

இதில் எந்த நிறுவனத்தின் திட்டம் ஏட்டுச் சுரைக்காயாகும் எந்த நிறுவனம் விண்வெளிப் போக்குவரத்தில் முன்னோடியாகும் என்பதையெல்லாம் இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.Trending Articles

Sponsored