காய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது?



``ஏலே... திணை மாவு அடுப்பங்கரையில் வெச்சிருக்கேன். சாயங்காலமா சாப்டுங்க" காலையில் கிளம்பும்போதெல்லாம் கிராமத்து அம்மாவின் குரல் முன்பு இதுவாகத்தான் இருக்கும். கொள்ளுத் துவையல், குதிரை வாலி கஞ்சி, கம்மஞ்சோறு இன்னும் நிறைய... இப்படிச் சிறு வயதில் ஏறக்குறைய நிறையச் சிறுதானியங்களை அறிமுகப்படுத்தி வைத்தது அம்மாதான். ஒரு காலத்தில் சிறுதானியங்கள்தாம் முக்கிய உணவாக இருந்த தமிழ்ச்சூழலில் இப்போது அவை அரிதான உணவு வகைகள். பயிரிட்டு அறுவடை செய்வதிலேயே சிறுதானியங்களின் பங்கு குறைந்துவிட்டது. இப்படி நிறைய பயிர் வகைகளும் காய்கறிகளும் தாவரங்களும் கூட தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் ஒரேடியாகக் காணாமல் போயிருக்கின்றன. ஏற்கெனவே காலநிலை மாற்றத்தினால் தொடர்ந்து பல்வேறு விளைவுகளைக் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த விளைவுகளில் இன்னொன்றும் சேர்ந்துள்ளது. அது என்னவென்றால் தற்போதிருக்கும் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் நிலை தொடர்ந்தால் 2050 க்குள் உலகக் காய்கறி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிடும் என்னும் ஆய்வறிக்கை. 

உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் அளவு குறைவது மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், பயிறு வகைகள் போன்றவற்றின் உற்பத்திகளும் குறையும் ஆபத்தும் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பூமியின் வெப்ப உயர்வு, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றின் விளைவால் இந்தப் பிரச்னையின் விளைவு உலகம் முழுவதும் தீவிரமாக இருக்கும் எனக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். ``எங்களுடைய ஆய்வின் படி சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களான புவி வெப்பமயமாதல், பருவசுழற்சி மாறுபாடு, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவை உலக வேளாண் உற்பத்திக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். உணவுப் பாதுகாப்பிலும் மக்களின் ஆரோக்கியத்திலும் இவை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்", என்கிறார் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பவுலின் ஷீல்பிக் (Dr Pauline Scheelbeek). காய்கறிகளும் பருப்பு வகைகளும்தாம் மக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. உலகம் முழுவதும் பரவலான மக்கள் தங்கள் அன்றாட உணவில் இவற்றைச் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த விளைவால் ஊட்டச்சத்து சமநிலையும் குறைந்துவிடும் என்கின்றனர். 

Sponsored


Sponsored


இதற்கு முந்தைய ஆய்வுகளின்படி பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பால் உலகின் வேளாண் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறினார்கள் ஆய்வாளர்கள். ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு அதிகரிப்பால் உற்பத்தித் திறனும் பெருகும் என்று நினைத்தனர். ஆனால், அதனை மறுத்துள்ளது இப்போது வெளிவந்திருக்கும் ஆய்வு. 1975லிருந்து 2016 வரை நீண்டகாலத்துக்கு வேளாண் உற்பத்தியை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட 174 ஆய்வுகள், 40 நாடுகளில் நடத்தப்பட்ட 1540 சோதனைகள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாற்றங்களால் காய்கறிகள், பருப்பு வகைகளில் ஏற்படும் தாக்கங்களுக்கான ஆதாரங்களை ஆய்வாக முதன்முறையாகக் கொண்டுவந்துள்ளனர். உடனடியான செயல்பாடுகளை முன்னெடுப்பதுதான் இதற்கான முதல் தீர்வாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்த தாமதமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட வேண்டியது எல்லோருடைய கடமை. உலகம் அனைத்துக்குமான உணவு உற்பத்தியே இதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. 

Sponsored


பசுமை இல்ல வாயுக்களின் விளைவாகப் பூமியின் வெப்பம் 7.2 பாரன்ஹீட்டாக உயர்ந்துள்ளது. மேலும், வெப்பக் காற்றலைகள் மேலும் மேலும் அந்தப் பகுதியை வறண்டதாக மாற்றுகிறது. வருடா வருடம் இந்த நிகழ்வு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் 2050 க்குள் காய்கறிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவிகிதமும் பயிறுவகை உற்பத்தியில் சராசரியாக 9 சதவிகிதமும் குறையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இதனால், தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும்பாலான இடங்கள், தெற்காசியப் பகுதிகள் ஆகிய இடங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இங்கிருக்கும் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு தானியங்களையும் காய்கறிகளையும் உற்பத்தி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தான் பல்வேறு சிறுதானியங்களும் காய்கறிகளும் அரிதாகிப் போயின. அதேபோன்று இப்போது கூறப்பட்டிருக்கும் விளைவுகள் உலகச் சந்தையிலும் கூடப் பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்போதே நாளொன்றுக்குப் பல குழந்தைகள் ஊட்டச்சத்துகள் இல்லாமலும் சரியான உணவு கிடைக்காமலும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில். ஒருவேளை இந்த ஆய்வின்படி காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்யாமல் இருந்தால் இன்னும் அதிகமான பாதிப்புகள்தாம் இருக்கும்..

.



Trending Articles

Sponsored