ஹோண்டா சிட்டி விலையில் பி.எம்.டபிள்யூ. 320D... யூஸ்டு கார் சந்தையின் ஹாட் டீல்!



Sponsored



கார்களை வாங்கும் முறை, கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அமேசானில் கார் விற்பனை செய்கிறார்கள். பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால், 5,000 முதல் 30,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. சீனாவில் ஒரு நிறுவனம் கார்களை விற்பனை செய்ய, வெண்டிங் மெஷினையே கொண்டுவந்துவிட்டது. புதிய கார்கள்தாம் இப்படியென்றால், யூஸ்டு கார் விற்பனையும் இணையத்தில்தான் அதிகம் நடப்பதாகச் சொல்கிறார்கள். யூஸ்டு கார் சந்தையில் லக்ஸூரி கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக OLX நிறுவனம் சமீபத்தில்  கூறியுள்ளது. 

யூஸ்டு கார் சந்தையில், 77 சதவிகித கார்கள் OLX மூலம் வாங்கப்படுகின்றன. விற்பனையான மொத்த கார்களில் 45 சதவிகிதம் ஹேட்ச் பேக் கார்கள்தாம். 38 சதவிகிதம் சொகுசு கார்கள் விற்பனையாகியுள்ளன. சொகுசு கார்களில்கூட 80 சதவிகிதத்துக்கு அதிகமாக விற்பனையானது செடான் கார்கள்தாம். லக்ஸூரி கார்களைப் பொறுத்தவரை பி.எம்.டபிள்யூவின் செடான் மாடல்களான 320d, 520d மற்றும் 730d கார்கள் அதிகம் தேடப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்கள். சென்னைப் போன்ற மெட்ரோ சிட்டியில் இரண்டு கார் விற்பனையானால், செக்கானூரணி போன்ற கிராமத்திலும் இரண்டு லக்ஸூரி கார்கள் விற்பனையாகின்றன என்று குறிப்பிடுகிறார்கள் யூஸ்டு கார் விற்பனையாளர்கள்.

Sponsored


புதிய கார் விற்பனையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை விற்பனையான கார்களின் எண்ணிக்கை 11,40,925. புதிய கார்களின் விற்பனை பழைய கார்களைவிட குறைவாகவே உள்ளது. செக்மன்ட் வரிசையில் பார்க்கும்போது, ஹேட்ச்பேக் 52 சதவிகிதமும், செடான் 18 சதவிகிதமும், எஸ்யூவி மற்றும் எம்யூவி 20 சதவிகிதத்திலும் உள்ளன. விற்பனையாகும் டாப் 20 கார்களில் டிசையர், சியாஸ் தவிர எந்த செடான் காருமே இல்லை.

Sponsored


புதிய கார்களைவிட பழைய லக்ஸூரி கார்கள் அதிகம் விற்பனையாக, பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது விலை. சொகுசு கார்கள் அதன் பாதி விலையைவிட 25 சதவிகிதம் குறைவான விலையிலேயே கிடைப்பதாக OLX நிறுவனம் சொல்கிறது. ஒரு புது பிஎம்டபிள்யூ 320d காரின் விலை 40 லட்சம் ரூபாய். யூஸ்டு கார் மார்க்கெட்டில் இதன் விலை 9 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய். பிஎம்டபிள்யூ ஷோரூமிலேயே 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் இந்த கார்கள் விலைக்கு உள்ளன. 2010 மாடல் ஹோண்டா சிட்டியை எடுத்துக்கொண்டால், அதன் விலை 10 லட்சம் ரூபாய் முதல் 16 லட்சம் ரூபாய் வரை உள்ளது. யூஸ்டு கார் சந்தையில் இது 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.

16 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கும் சிட்டியில் 1.5 லிட்டர் இன்ஜின்தான். ஆனால், இதே விலைக்குக் கிடைக்கும் பி.எம்.டபிள்யூவில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வருகிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் இருக்கிறது. சிட்டியில் உள்ள எல்லா வசதிகளுமே பிஎம்டபிள்யூ 3  series காரில் இருக்கின்றன. 5 சீரில்,  X1 கார்களில் அதைவிட அதிகமான வசதிகளே வருகின்றன. மேலும், காரில் ப்ரீமியம் குவாலிட்டியும், அதிக இடவசதிகளையும் கிடைக்கின்றன. யூஸ்டு காரை வாங்கிய உடனேயே அதில் இருக்கும் குறைகளைச் சரிசெய்துவிடவேண்டும். ஓரளவுக்கு நல்ல கண்டிஷனில் இருந்தால் இரண்டு ஆண்டுகள் காரை எந்த லாங் டிரைவுக்கும் கொண்டுபோகாமல் அருகிலேயே ஓட்டிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்து பிறகு முழுவதுமாகப் பயன்படுத்தலாம்.

கஸ்டமைஸ் செய்யும் கார்களைவிட சொகுசு கார்கள் ஸ்டாக் கண்டிஷனில் இருந்தால்தான் அதன் மதிப்பு அதிகம். சொகுசு கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து கார்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பதால் பழைய கார்களின் விலை வேகமாகக் குறைந்துவிடுகிறது. யூஸ்டு கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், காரின் விலை குறைவாக இருக்கவேண்டும், வசதிகள் மற்றும் பர்ஃபாமன்ஸ் வேண்டும், நல்ல ஓட்டுதல் தரம் வேண்டும், சமூக மதிப்பு அதிகரிக்கவேண்டும். மைலேஜ் பற்றி கவலையில்லை என யோசித்தால், லக்ஸூரி கார்களை வாங்கலாம். சர்வீஸ் செலவுகளும் எகிறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!



Trending Articles

Sponsored