மன்சூர் அலிகான், பியூஷ், வளர்மதி... தொடர் கைதுகளும் வலுக்கும் கண்டனக் குரல்களும்!



த்திய அரசின் நிதி உதவியோடு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சேலம் முதல் சென்னை வரை 8 வழி சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு முனைப்போடு செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. மொத்தமாக 277.3 கி.மீ தொலைவு கொண்ட சாலை அமையவிருக்கும் இத்திட்டத்தில் 5 மாவட்டங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ தொலைவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ தொலைவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீ தொலைவும், தர்மபுரி மாவட்டத்தில் 56 கி.மீ தொலைவும், சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோமீட்டர் தொலைவும்,  நிலம் கையகப்படுத்தப் பட்டுவருகிறது. மொத்தம் இத்திட்டத்துக்கு 8,000 ஏக்கர் நிலங்கள் தேவை. 8 வழிச் சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கையகப்படுத்தப்படும் நிலங்களில் விவசாய நிலங்களும், வனப்பகுதிகளும் அதிகமாக அழிக்கப்படும். இதனால் இத்திட்டமானது மக்களுக்கு அழிவினைக் கொடுக்கும் என மக்களும், பியூஷ் மனுஷ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்புகளைக் காட்டி வருகிறார்கள்.

Sponsored


இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளையும், மக்களையும் தொடர்ச்சியாகக் காவல்துறை கைது செய்து வருகிறது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னர் சேலத்தில் 8 வழிச் சாலை பற்றிப் பேட்டியளித்த நடிகர் மன்சூர் அலிகான், ``சேலத்தில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே விமான நிலைய விரிவாக்கமும், 8 வழிச் சாலையும் போடுகிறார்கள். பசுமையை அழித்து பசுமைச் சாலை போடுகிறார்கள். 8 வழிச் சாலை வந்தால் 8 பேரை வெட்டுவேன்'' என்று கூறினார். அவரை சேலம் காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல 8 வழிப் பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நில அளவை செய்யப்பட்டபோது தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு நில அளவை செய்ய அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்த 11 விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர். 

Sponsored


நில அளவீடு செய்யும்போது காவல்துறை குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்ற நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காகவும், 8 வழிப் பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகவும் மக்களைத் தூண்டிவிட்டுப் போராட்டம் செய்ய சதித்திட்டம் தீட்டி வருவதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் நேற்று கைது செய்யப்பட்டார். அடுத்ததாக சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக மக்களைத் திசைதிருப்புவதாக சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி கைது செய்யப்பட்டார். இத்திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்யும் தமிழக அரசைக் கண்டித்துப் பூவுலகின் நண்பர்கள், மக்கள் சிவில் உரிமைக் கழகம், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

Sponsored


பூவுலகின் நண்பர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பில், ``அரசு கொண்டுவரக்கூடிய திட்டங்களை எதிர்த்து பிரசாரம் செய்வதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறது. அமைதி வழியில் பிரசாரம் செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசுகள் பொய் வழக்குகள் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் சமயங்களில் அரசுகள் கொண்டுவரக்கூடிய திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு எல்லா உரிமைகளையும் பெற்றவர்கள். பசுமைச் சாலை திட்டத்தால் 40,000 வீடுகள் பாதிக்கப்படும், கிட்டத்தட்ட 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும், பலநூறு கிணறுகள் மூடப்படும், பல நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று அறிந்துகொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட திட்டங்களை எதிர்த்து அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. அப்படி அமைதியான வழிகளில் போராடும் பலரை அரசுகள் கைது செய்யத் தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து சேலம் நகரில் பல சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை மேற்கொண்டுவரும் பியூஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் கைது, அரசின் திட்டங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் அச்சுறுத்தலை உண்டாக்கும் என்றும் நினைத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கோருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டனக் குறிப்பில் ``சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பியூஷ் மனுஷ் சமீப காலத்தில் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எட்டு வழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடி வருகிறார். தமிழக அரசாங்கம் இது போன்ற சுற்றுச் சூழல் பிரச்னைகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளாமல் அதற்காகப் போராடும் ஆர்வலர்களைக் சிறையில் அடைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசாங்கம் மற்றும் காவல் துறை சுற்றுச் சூழல் பிரச்னைகளை பொது அமைதி பிரச்னையாக மாற்ற முயற்சி செய்யாமல், பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை செய்ய வேண்டும். மேலும், ஆர்வலர்களைக் கடத்திக் கொண்டு போய் கைது செய்யாமல் டி.கே.பாசு பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம். பியூஷ் சட்டத்தின் படி நடக்கக்கூடிய சமூக அக்கறை கொண்டவர். அவரை விசாரணைக்கு அழைத்திருந்தால் வருவதற்குத் தயாராக இருப்பவர். அப்படி இருக்கும் பொழுது இம்முறையில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அறப்போர் இயக்கம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. நீதிமன்றங்கள் தமிழக அரசின் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களை வன்மையாகக் கண்டித்து, பியூஷை விடுவித்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க உதவ வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பில், ``சேலத்தில் பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிய பியூஷ் மனுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், வளர்மதி போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இம்மாதிரி மக்கள் நலன் குறித்த அக்கறையில் ஜனநாயக ரீதியாகக் குரல் எழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனவே, தூத்துக்குடியில் காவல்துறை கைது வேட்டை நடத்துவதையும், ஏற்கெனவே கைதானவர்கள்மீது மேலும் மேலும் வழக்குகளைப் புனைவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பி.யு.சி.எல். கோருகிறது. தூத்துக்குடியில் பதற்றம் குறைக்கப்பட்டு, அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக அரசே பதற்ற நிலையை அதிகரிக்கச்செய்வது நியாயமல்ல. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் சேலம் பசுமை வழி எதிர்ப்பு போராட்டத்தில் கைதான அனைவரையும், மக்கள் நலன் மற்றும் நாட்டில் பாதுகாக்கப்படவேண்டிய ஜனநாயகப் பண்பாட்டையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது. 

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் பேசுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தி.மு.க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
 



Trending Articles

Sponsored