யானை மருத்துவரின் டைரிக்குறிப்புகள்! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 16Sponsoredபக்கங்கள் முழுவதும் மருந்து வாசனையும், யானைகளின் அடையாளங்களும்  ஆக்கிரமித்திருக்கும்  யானை  மருத்துவரின் நாட்குறிப்புகளை  எங்கேனும் வாசித்திருக்கிறீர்களா? காகிதங்களுக்குள் ஒரு காட்டை ஒளித்து வைத்திருப்பார்கள். சிகிச்சையளிக்கப்பட்ட யானைகள் எழுந்து ஓடுகிற பக்கங்கள் இப்போதும் உயிர்ப்போடு இருக்கின்றன. இப்போது சத்தியமங்கலத்தில் வன கால்நடை மருத்துவராக இருப்பவர் அசோகன். 1998 ஆம் ஆண்டு ஒரு நாள் மின்சார வேலியில் அடிபட்டு ஒரு யானை உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாய் அசோகனுக்கு தகவல் கிடைக்கிறது. மருந்து, மயக்க ஊசி என எல்லாம் எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்குக் கிளம்புகிறார். 

"அன்றைய மாலை நேரம். 6 மணி இருக்கும். யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடுகிறது எனத் தகவல் கிடைத்தது. மருந்து மாத்திரைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்குக் கிளம்பியிருந்தேன். கரும்புத் தோட்டத்திற்கு மின்சார வேலியைக் காவலுக்கு போட்டிருக்கிறார்கள். குட்டியோடு வந்த யானை மின்சாரக்கம்பியைத் தொட்டிருக்கிறது.  மழைக் காலம் என்பதால் சேறும் சகதியுமாக நிலமும் யானையும் ஒரு சேர  கிடந்தன. தாய் யானையை எழுப்பக் குட்டி யானை எவ்வளவோ முயற்சி செய்கிறது. யானை எழுந்திருக்கவோ, தும்பிக்கையைத் தூக்குவதற்கோ கூட பலமில்லாமல் போரடிக்க கொண்டிருக்கிறது. குட்டி யானை தாயை சுற்றிச் சுற்றி வந்து  வட்டமடிப்பதை வாழ்வின் எந்த எல்லையில் இருந்து யோசித்தாலும் உயிரை உருக்குவதாகவே இருக்கும். நமக்கு குட்டி, ஆனால்  யானைக்கு அது குழந்தை. உண்மையில் யானையைப் பொறுத்தவரை எழுந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தால் எவ்வளவு காயமாக இருந்தாலும் எழுந்துவிடும். இனி பிழைக்கமாட்டோம் என்கிற யானைகளை எவ்வளவு முயன்றாலும் எழுப்பி விட முடியாது. யானையின் நடவடிக்கையில் யானையைக் காப்பாற்ற இயலுமா இயலாதா என்பதை எளிதில் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் மின்சாரம் பாய்ந்து கிடக்கும்  யானையைக் காப்பாற்றியாக வேண்டும். அதனுடைய குட்டிக்கு ஒரு வயதிற்குள்தான் இருக்கும், எந்தத் தாய்க்குத்தான் பிள்ளையை அனாதையாக விட்டு விட்டுப் போக மனசு வரும். தாய் என்பவள் எல்லா இனத்திலும் தாயாக இருப்பதுதான் தாய்களுக்கு இருக்கிற பிரச்சனையே. தன்னுடைய தாய்க்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தாயைச் சுற்றி சுற்றி  வரும் குட்டி யானைக்காகவாவது தாயைக் காப்பாற்றியாக வேண்டுமென்ற ஆசை பொதுவாக எல்லோருக்குமே வரும், விலங்குகளுக்கு வைத்தியம் பார்க்கிற எனக்கு வந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. 

Sponsored


Sponsored


சகதியில் கிடக்கிற யானைக்கு சிகிச்சையளிக்க சகதியில் கால் வைத்தால் கால் முழு அளவிற்குச் சகதியில் செல்கிறது. யானைக்கு சிகிச்சையளிக்கிற நேரத்தில் யானையால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் சகதியில் ஓடித் தப்பிக்க முடியாது. இரவு நேரம் எப்படி யானையைக் காப்பாற்றுவது என்கிற யோசனையில் மின்சாரத்தைப் பயன்படுத்தி விளக்குகள் மூலம் சிகிச்சையளிக்கலாம் என முடிவானது. சிறிது நேரத்தில் ஜேசிபி வரவழைக்கப்பட்டது. குட்டி யானை கரும்புத் தோட்டத்தின் வாயிலில் நின்று கொண்டு பிளிறிக் கொண்டேயிருந்தது. இரண்டு பேர் குட்டி யானையை பார்த்துக் கொண்டார்கள். சகதியில் நின்று கொண்டே யானைக்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தேன். தனக்கு என்ன நடக்கிறது என்பதை யானை கண்டுபிடித்துவிடும்.  சிகிச்சை தொடங்கியதும் யானை எந்தத் தொந்தரவையும் கொடுக்கவில்லை. எப்பேதாவதுதான் இதயம் கனக்கும்படியான சம்பவங்கள் நிகழும், எனக்கு அப்படி ஒரு சம்பவம் இந்த யானை, சிகிச்சைக்கு இடையில்தான் யானையின் மடி முழுவதும் பால் நிரம்பியிருப்பதைக் கவனித்தேன். மறக்கவே முடியாத சம்பவத்தின் மறக்கவே முடியாத காட்சி அது. 

குளிர் காலம் என்பதாலும் சகதியில் இருந்ததாலும் யானையின் உடலைச் சூடுபடுத்த இரண்டு பேர் யானையின் பாதத்தில் வைக்கோலை வைத்து தேய்த்துக் கொண்டேயிருந்தார்கள். குட்டி இருப்பதால் யானை எழ முயன்றது. அதற்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்தோம். சிகிச்சை முடிந்து இரவு 11 மணிக்கு யானையை ஜேசிபி உதவியுடன் எழுப்பி நிறுத்தினோம். யானை சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. வைக்கோலை வைத்து அதன் அடிவயிறு கால் என எல்லா இடத்திலும் நன்கு சூடாக்கும்படி தேய்த்தோம். இருபது நிமிடங்களில் யானை அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது. உண்மையில் யானையை எழுந்து நடக்க வைத்தது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. சகதியில் இருந்து மேலே வந்ததும் குட்டி யானை ஓடி வந்து தாயை கட்டிக் கொண்டது. தாய் யானை குட்டியை கூட்டிக் கொண்டு காட்டிற்குள் ஓடியதைப் பார்க்கும் பொழுது பிழைத்திருப்பது எவ்வளவு உன்னதமானது என நினைக்கத் தோன்றியது. யானை சென்ற அடுத்த பத்து நாள்களுக்கு யானையின் உடல் நலம் எப்படியிருக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். யானை குட்டியை கூட்டிக் கொண்டு எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் ஒரு குழுவாக நாங்களும் சென்றோம். முதன் முதலில் நாங்கள் பின் தொடர்வதை அறிந்து கொண்ட தாய் யானை தும்பிக்கையை தூக்கி எங்களுக்கு எதையோ சொன்னது. நிச்சயம் அது நன்றியாகத்தான் இருக்குமென நினைத்துக் கொண்டேன். 

2017 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் குட்டியோடு இருக்கிற யானை உயிருக்குப் போராடுகிறது எனத் தகவல் கிடைத்தது. யானை இருக்கிற இடத்திற்குப் போகும் போது  இரவு 10 மணிக்கு மேல் ஆகியிருந்தது. விழுந்து கிடக்கிற தாய் யானையை விட்டுக் குட்டி யானை நகரவே இல்லை. தாயை எழுப்பக் குட்டி யானை எவ்வளவோ போராடியது. தாய் மீது ஏறிக் குதிக்கிறது. தாயின் தும்பிக்கையை தூக்க முயற்சிக்கிறது. யாரையும் நெருங்கவே விடவில்லை. தாய் படுத்திருப்பதை பார்த்துக் குட்டி யானை அழுகிறது. குட்டியைப் பார்த்து தாய் அழுகிறது என இரு உயிர்களுக்கும் உணர்வு போராட்டமாக இருந்தது. இரண்டு யானைகளும் அழுத வடு அப்படியே இருந்தது. தாமதிக்காமல்  விழுந்து கிடக்கிற யானையைக் காப்பாற்றியாக வேண்டும். வேறு வழியின்றி மருந்துகளுடன் தாய் யானைக்குப் பக்கத்தில் சென்றுவிட்டேன். குட்டி யானை என்னை முட்டிக் கொண்டே இருந்தது. யானைக்கு ஊசி செலுத்தி சிகிச்சையை ஆரம்பித்தேன். யானைக்குப் பயந்து யாரும் உதவிக்கு வரவில்லை. பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும், குட்டி யானை என்னை முகர்ந்து பார்த்துவிட்டு பின்னர் தாயையும் முகர்ந்துபார்த்தது. இப்படியே மூன்று முறைக்கு மேல் முகர்ந்து பார்த்துவிட்டு பக்கத்திலிருந்த இடத்தில் போய் நின்று கொண்டது.

இரவு நேரம் என்பதால் ஆரம்பகட்ட மருத்துவ சிகிச்சை முடித்துவிட்டு, யானை இருந்த இடத்திலேயே டென்ட் அமைத்துத் தங்கியிருந்தோம். குட்டி யானை தாயோடு சேர்ந்து படுத்துக்கொண்டது. காலையில் யானைக்கு சிகிச்சையளிக்க போகும் போதும் தாயை நெருங்க விடாமல் பாதுகாப்பாய் நின்று கொண்டிருந்தது. காலையில் சிகிச்சையளிக்க யானைக்குப் பக்கத்தில் என்னைத் தவிர வேறு யாரையும் விடவே இல்லை.  நான் சிகிச்சையளிக்கும் போது குட்டி என்னோடு சேர்த்து யானையையும் சுற்றி சுற்றி வந்தது. உதவிக்கு ஆள் தேவைப்பட்டதால் வேறொருவரை அழைத்திருந்தேன். குட்டி யானை அவரையும் முகர்ந்து பார்த்துவிட்டு ஏதும் செய்யாமல் இருந்தது. ஒரு வழியாக யானைக்கு சிகிச்சையளித்து ஜேசிபி உதவியுடன் தூக்கி நிறுத்த முயற்சித்தோம். அம்மாவைத் தூக்கி நிறுத்தப் போகிறார்கள் என்பது குட்டி யானைக்குத் தெரியும் போல... நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றிருந்தது. யானை நின்றதும் குட்டி யானை தாயிடம் வந்து ஒட்டிக் கொண்டு நின்றது. தாய் யானைக்குத் தண்ணீரை எடுத்துப் பாய்ச்சினேன். ஒரு மணி  நேரம் கழித்து யானை யார் துணையுமில்லாமல் நடக்க ஆரம்பித்தது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தாய் யானை குட்டியை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றுவிட்டது. தாயை மீட்டு பிள்ளையிடம் கொடுத்த அந்த நிமிடங்களை நினைத்தால் இப்போதும் உடல் சிலிர்க்கிறது.

காட்டிற்குள் போகும் பொழுது குட்டி யானை திரும்பி திரும்பி எங்களை பார்த்துக் கொண்டே சென்றதை இப்போது நினைத்தாலும் என்னை அறியாமல் அழுகை வந்து விடுகிறது.  என்றாவது அந்தக் குட்டி யானையை நான் சந்திக்க நேரலாம், ஒரு வேளை எனக்குக்  குட்டி யானையை அடையாளம் தெரியாவிட்டாலும், என்னுடைய வாசனையை உள்வாங்கியிருக்கிற  குட்டி யானை என்னை எப்படியும்  கண்டுபிடித்து விடும். 

முந்தைய அத்தியாயம் 

எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பலவீனம் இருக்கும். அப்படி யானைகளின் பலவீனமாக இருப்பது பலாப்பழம். பலாப்பழம் என்றால் யானைகள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ஏறியும் போகும், இறங்கியும் போகும். கூடலூர் மற்றும் கேரளா வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் இப்போது பலாப்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பலாப்பழங்களை சாப்பிட்டுவிடுகின்றன. அப்படி வரும் யானைகளை விரட்ட அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், தீயைக் கொளுத்தி போட்டும் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அதுவும் யானைகளுக்குப் பழகிவிட்டது. வேறு எப்படி யானைகளை விரட்டுவது என யோசித்த மக்களுக்குக் கிடைத்ததுதான் பன்றிக்காய். இது ஒரு வெடி பொருள் நிரப்பிய ஒரு பந்து போல இருக்கும். அதற்கு அழுத்தம் ஏற்பட்டால் வெடிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பன்றிகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். காட்டுப் பன்றிகள் பன்றிக்காயை கடிக்கும் பொழுது ஏற்படும் அழுத்தத்தால் காய் வெடிக்கும். வாயில் இருக்கும் பொழுது வெடிப்பதால் பன்றியின் தலை சிதறி அதே இடத்தில் இறந்துவிடும். இதுதான் பன்றிக்காயின் நடைமுறை. இந்த நடைமுறையை இப்போது யானைக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது மனித இனம். 

யானைகள் பொதுவாக எந்தப் பொருளாக, உணவாக இருந்தாலும் முதலில் அதைக் காலில் உருட்டிப் பார்த்தும், முகர்ந்து பார்த்தும், சோதித்த பிறகே உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டது. யானையை அவ்வளவு எளிதில் பன்றிக்காயை பயன்படுத்தி வீழ்த்திவிட முடியாது என்பது  மனித இனத்திற்கும் தெரியும். மரத்திலிருந்து பலாப்பழத்தை பிய்த்து எடுக்கிற யானை ஆசை ஆசையாக அதைக் காலில் போட்டு மிதித்து இரண்டாகப் பிளக்கும்.  அதன் ஒரு பகுதியை அப்படியே எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். “லட்டுல வச்சேன்னு பாத்தியா தாஸு, நட்டுல வச்சேன்” என்பது போல  பன்றிக்காயை மனிதன்  பலாப்பழத்தில் உள்ளே  மறைத்து வைத்திருப்பான்.  அதிக அழுத்தத்துடன் காய் வெடிக்க வாய் மாறும் தாடை  கிழிந்து யானை வலியில்  ஓட ஆரம்பிக்கும். வாயில்லாத ஜீவனால்  பிளிறவோ, தண்ணீர் அருந்தவோ, உணவு எடுக்கவோ கூட முடியாமல் போய்விடுகிறது. 

வலியின் வீரியத்தால் ரத்தம் சொட்ட சொட்ட யானை  வனத்திற்குள் திரிய ஆரம்பிக்கிறது. காயம்பட்ட முதல் நாள் எப்படியோ சமாளித்துவிடுகிற யானை இரண்டாவது நாளிலிருந்து பிழைத்திருப்பதற்கான போராட்டத்தைத் தொடங்குகிறது. முதலில் தண்ணீருக்காக ஏங்க ஆரம்பிக்கிறது. தண்ணீர் கண் முன்னே இருந்தாலும் அருந்திவிட முடியாத அளவிற்குக் காயம் ரணமாக மாறிவிடுகிறது. இப்போது பிழைத்திருப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும், ஆனால் யானையால் எதையுமே செய்து விட முடியாது.

 குட்டியுடன் இருந்த தாய் யானை ஒன்று தெரியாமல்  பன்றிக்காயை கடித்துவிடுகிறது.  அந்தத் தாய் யானைக்கு என்ன ஆனது? தாய் குட்டியை என்ன செய்தது? 

தொடரும்....Trending Articles

Sponsored