குழந்தைகளுக்கு நேரமேலாண்மையைக் கற்றுக்கொடுக்க டிப்ஸ்... #GoodParenting



உங்கள் குழந்தை எல்லா இடங்களிலும் சமத்து எனப் பெயர் வாங்க, அவர்களுக்கு நேர மேலாண்மையைக் கற்றுக்கொடுப்பது அவசியம். சிறு வயது முதலே குழந்தைகளுக்கு நேர மேலாண்மையைக் கற்றுக்கொடுப்பதன் மூலம், எதிர்காலத்தில் அவர்கள் எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். குழந்தைகளுக்கு நேர மேலாண்மை கற்றுக்கொடுக்குச் சில எளிய வழிகள்...

உங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பே, அவர்களுக்கு நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது நல்லது. உணவு உண்பதற்கு, தூங்குவதற்கு, படிப்பதற்கு என ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அந்த நேரத்தில் அதைச் செய்ய வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுங்கள். ஆரம்பத்தில் அவர்களுடன் இணைந்து அதைப் பழக்கப்படுத்தினால் அதன் பின் அவர்களே கற்றுக்கொள்வார்கள். இதுதான் நேர மேலாண்மையின் முதல் படி.

Sponsored


எந்த வேலையை எதற்கு அடுத்து செய்ய வேண்டும். எப்போது செய்ய வேண்டும் என ஒரு சார்ட் தயார்செய்து, குழந்தையின் கண்களில் படும்படி ஒட்டுங்கள். அந்த சார்ட், ஓவியங்களால் (குழந்தைகளைக் கவரும் வகையில் குளிப்பது, சாப்பிடுவது, படிப்பது போன்ற) உருவாக்கப்பட்டதாகவோ, பல்வேறு நிறங்கள் அடிப்படையிலோ இருக்கட்டும். இதைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தைகள் ஆர்வத்தில் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

Sponsored


நேர மேலாண்மையைப் பொறுத்தவரை, பெற்றோரே ரோல் மாடலாக இருந்து குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும். குழந்தைகள், அவர்களின் வேலைகளைச் சரியான நேரத்தில் முடித்துவிட்டால், சின்ன சின்னப்  பரிசுகள் கொடுக்கலாம். நேரம் தவறும்போது, மன்னிப்பு கேட்கவும், அதற்கான விளக்கத்தை மற்றவர்களிடம் சொல்லவும் கற்றுக்கொடுங்கள் நேரமேலாண்மையுடன் அவர்களுக்குப் பண்பையும் கற்றுக்கொடுக்கும்.

Sponsored


குழந்தைகள் 5 வயதை எட்டியதுமே, அவர்கள் அறையில் மாதந்திர காலண்டரையும், ஒரு கடிகாரத்தையும் மாட்டிவையுங்கள். அவர்களின் யூனிட் டெஸ்ட், கிளாஸ் டெஸ்ட், புராஜெக்ட் போன்றவை எந்ததெந்தத் தேதிகளில் வருகிறது என்பதை, அவர்களையே குறிக்கச் சொல்லுங்கள். இப்படிக் குறித்துவைத்த தேதிகளைக் காணும்போது, குழந்தைகள் தமக்குத்தாமே திட்டமிட்டுச் செயல்பட ஆரம்பிப்பார்கள்.

படிப்பு தவிர்த்த மற்ற செயல்பாடுகளை வேறு நிற ஸ்கெட்ச் பேனாவால் குறித்துவைக்கச் சொல்லலாம். இது, மற்ற செயல்பாடுகளிலும் உங்கள் குழந்தையைத் திறமையாளராகச் செயல்பட உதவும்.

பொதுவாக, குழந்தைகள் இருக்கும் வீட்டில், லன்ச் தயார்செய்வதிலிருந்து குழந்தைகளை கிளப்புவது வரை எல்லா வேலைகளையும் பெற்றோரே செய்வார்கள். இதனால், பெற்றோரால் தாமதமாகும்போது குழந்தைகளுக்கும் தாமதமாகும். எனவே, ஸ்கூல் பேக் எடுத்துவைப்பது, யூனிஃபார்ம் அணிவது போன்ற வேலைகளைக் குழந்தைகளையே செய்துகொள்ளப் பழக்கப்படுத்துங்கள். இதனால், யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களின் வேலையை முடித்துக்கொள்வதுடன் உரிய நேரத்துக்குச் செல்லும் பழக்கமும் வளரும்.

பொதுவாக, குழந்தைகள் காலையில் தாமதமாக எழுந்துகொள்வதுதான் நேரம் தவறுதலுக்கு முக்கியக் காரணமாக இருக்கும். எனவே, இரவு குழந்தைகள் தூங்கும் நேரத்தை வரையறுத்து, அதற்குள் சாப்பிடவைத்து உறங்க அனுப்புவது அவசியம். இது, அவர்களின் மறுநாளைச் சுறுசுறுப்பாக்கும்.

மாலை நேரங்களில், உங்கள் குழந்தை பாடம் படிக்கும்போதோ, வீட்டுப் பாடங்கள் செய்யும்போதோ அந்த வேலையை முடிக்க, குறிப்பிட்ட நேரம் என வரையறுக்கச் சொல்லுங்கள். அதற்கேற்ப அலாரம்வைத்துச் செயல்படச் சொல்லுங்கள். அலாரம் அடிப்பதற்கு முன்பே முடிக்க முடியுமா என அன்புடன் சவால்விட்டு ஊக்கப்படுத்துங்கள். இது, அவர்களின் ஆர்வத்தை அதிகரித்து, நேரமேலாண்மைக்குச் சிறப்பாக வழிவகுக்கும்.

நேர மேலாண்மையைக் கடைப்பிடித்தாலே, உங்கள் குழந்தை எல்லாச் செயல்பாடுகளிலும் பஃர்பெக்ட்டாக விளங்கி, `ஸ்மார்ட் கிட்' பெயரை வாங்கிவிடுவார்கள்.



Trending Articles

Sponsored