இந்தியாவில் வெளியான முதல் இசை ஆல்பமில் பாடிய பெண் இவர்தான்! #GauharJaan



கெளஹர் ஜான் (Gauhar Jaan). இன்று இவருக்கு 145 -வது பிறந்த நாள். இந்தப் பெண்ணின் பிறந்த நாளை கூகுள் டூடுள் கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், கெளஹர் ஜான் யார்; அவருக்கு ஏன் இந்தச் சிறப்பு என்று அறிந்துகொள்ள அவர் வாழ்க்கைக்குள் கொஞ்சம் பயணம் செய்வோமா? 

Sponsored


கெளஹர்  ஜான் பிறந்தபோது அவருடைய அம்மா அவருக்கு வைத்த பெயர் ஏஞ்சலினா யோவர்டு (Angelina Yeoward). பிறகு முஸ்லிம் மதத்துக்கு மாறி கெளஹர் ஜான் ஆனார். கெளஹர் ஜான் பிறந்தது உத்திரப்பிரதேசம் என்றாலும் அவர் அர்மேனிய வம்சத்தைச் சேர்ந்தவர்.  இதென்ன கெளஹர் வாழ்க்கை இத்தனை இடியாப்பச் சிக்கலாக இருக்கிறதே என்று தோன்றுகிறதல்லவா? இந்தச் சிக்கல்கள்தாம் அவரைச் சிறந்த நடனக் கலைஞராக, இசை மேதையாக வளர்த்தெடுத்தது எனலாம். 

Sponsored


கெளஹரின் அம்மா பெயர் விக்டோரியா ஹெம்மிங்ஸ். அர்மேனிய வம்சத்தவர் என்றாலும் பிறந்தது நம் இந்திய மண்ணில்தான்.  குழந்தைப் பருவத்திலிருந்தே  இசையும், கதக் நடனமும் கற்றுத் தேர்ந்தவர் விக்டோரியா. திருமணம், ஏஞ்சலினா பிறப்பு, கணவருடன் மன வேறுபாடு காரணமாகச் சட்டப்படி பிரிவு எனப் பல்வேறு தருணங்களைக் கடக்கிறார் விக்டோரியா. 

Sponsored


தன் மகளுக்கு 8 வயது எட்டும்போது அவருடன் பனாரஸ் செல்கிறார் விக்டோரியா. அங்கு இஸ்லாமிய மதத்தின் மேல் ஏற்பட்ட மரியாதை காரணமாக இஸ்லாமிய மதத்துக்கு மாறுகிறார். தன் பெயரை மல்கா ஜான் என்றும், மகள் பெயரை கெளஹர் ஜான் என்றும் மாற்றிக் கொள்கிறார். தொடர்ந்து இரண்டு வருடங்கள் தன் இசையாலும், கதக் நடனத்தாலும் பனாரஸில் நல்ல பெயர் சம்பாதித்தவர், அங்கிருந்து மகளுடன் கொல்கத்தா பயணமாகிறார். அங்கு நவாப் வாஜித் அலிஷாவின் (Nawab Wajid Ali Shah) அரண்மனையில் நாட்டியக் கலைஞராகப் பொறுப்பேற்கிறார். தன் மகளை, கொல்கத்தாவின் சிறந்த நடன ஜாம்பவான்களிடமும், இந்துஸ்தானி இசைக்கலைஞர்களிடமும் தனித்திறன் வளர்த்துக்கொள்ளச் சேர்த்து விடுகிறார். 

இசையிலும், நடனத்திலும் தேர்ந்த மகள் கெளஹர் ஜானின் அரங்கேற்றம், தர்பாங்கா ராஜ் அரண்மனையில் நடைபெறுகிறது. பிறகு அந்த அரண்மனையிலேயே `அரசவை நர்த்தகியாக' பணியமர்த்தப்படுகிறார் கெளஹர் ஜான். ஜூன் 26 ,1873 - ல் பிறந்த கொஹர் ஜான் அரசவை நர்த்தகியானபோது அவருடைய வயது வெறும் 14 தான். அதன் பிறகு, தன் காலில் கட்டிய சலங்கையைக் கழட்டி வைக்கக்கூட அவகாசமில்லாமல் கொல்கத்தா எங்கும் தன் நடன நிகழ்ச்சிகளை நடத்துகிறார் கெளஹர். செல்லுமிடங்களெல்லாம் ரசிகர்கள் கொண்டாட, `முதல் நடன மங்கை' என்று பட்டம் கொடுக்கப்படுகிறது.

`ஹம்தம்' என்ற பெயரில் கஜல் இசைப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். கெளஹர் ஜான் இந்துஸ்தானி இசையிலும் வல்லவர் என்பதால் இந்தியாவின் புகழ்பெற்ற கிராமபோன் கம்பெனி, தேடி வந்து இவருடைய பாடல்களை ரெக்கார்டு செய்கிறது. இதனால் தன் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் என்கிற சிறப்பும் கெளஹருக்குத்தான் கிடைக்கிறது. `த கிராமபோன் கேர்ள்' என்று கூகுள் கொண்டாடுவதற்கான காரணம் தெரிந்துவிட்டதல்லவா? 

பெங்காலி, குஜராத், தமிழ், மராத்தி, அராபிக், பெர்ஷியன், பிரெஞ்ச், இங்கிலீஷ் என்று பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கிற கெளஹர் ஜான், இந்தியாவின் முதல் ஆல்பத்தை வெளியிட்ட பெண் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர். 

வெளிச்சத்துக்கு மிக அருகில்தான் இருள் என்பதற்கு கெளஹர் ஜானின் வாழ்க்கையும் ஓர் உதாரணமாகிவிட்டது. புற வாழ்க்கையில் புகழ் வெளிச்சங்களை மட்டுமே கண்டவரின் அக வாழ்க்கை அத்தனை வெளிச்சமாக இல்லை. ஒரு காதல் தோல்வி, அதன் பிறகு நடந்த கல்யாணமும் கணவருடைய ஒழுக்கமின்மையால் தோல்வியில் முடிந்திருக்கிறது. 

சென்ற இடமெல்லாம் தன் இசையால் சிறப்புக்களை மட்டுமே பெற்று வந்த கெளஹர், 1928, ஆகஸ்ட் மாதம் மைசூர் அரண்மையில் அரசவைப் பாடகியான ஒன்றரை வருடங்களிலேயே மரணமடைகிறார். 

முள்ளின் மீது அமர்ந்திருந்தாலும் குயில்கள் இனிமையாகத்தானே இசைக்கும்! 



Trending Articles

Sponsored