`வடிவேலுக்கு ஏன் ஃபுட்பால் மேட்ச் பிடிக்காது தெரியுமா?’Sponsoredம்ம வக்கீல் வண்டு முருகன் வடிவேலுக்கு, கிரிக்கெட்னா இஷ்டம். ஆனா, ஃபுட்பால் மட்டும் பிடிக்கவே பிடிக்காது! ஏன் பிடிக்காதுன்னு வண்டுமுருகனே பாயின்ட் பாயின்ட்டா சொல்றதைக் கேட்போமா...

``என்ன விளையாட்டு விளையாடுறாய்ங்க. விளையாட்டுன்னா ஒரு டிசிப்ளின் வேணாமா. இந்த ஃபுட்பால் மேட்ச்ல எங்க இருக்கு டிசிப்ளின்? யூனிஃபார்ம்னு எதுக்குக் குடுக்குறாய்ங்க... எல்லாரும் ஒண்ணுபோல தெரியணும்கிறதுக்காகத்தான. வேர்ல்டு கப் கிரிக்கெட்ல அம்புட்டு மேட்சுக்கும் ப்ளூ கலர் பனியனத்தானய்யா இந்திய பிளேயர் டோனிலருந்து அம்புட்டு பேரும் போட்டிருப்பாங்க. ஆனா, வேர்ல்டு கப் ஃபுட்பால்ல மட்டும் ஒவ்வொரு மேட்சுக்கும் ஒவ்வொரு கலர் பனியனைப் போட்டுட்டு விளையாடுறது, சின்னப்புள்ளத்தனமால இருக்கு! இப்படி இஷ்டத்துக்கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டா, சப்போர்ட் பண்றவிங்களுக்கு கன்ஃபியூஸ் ஆகாது? அதை டி.வி-யில பார்க்கிறவங்களுக்கும் இது எந்த நாடுன்னு தெரியாம மண்டை குடையுதுல்ல! ஒவ்வொரு மேட்சுக்கும் பனியனை மாத்திக்கிட்டிருந்தா பார்க்கிறவிங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சுப்போகும்ல நன்னாரிப் பயலுங்களா?

Sponsored


அதேபோல, எந்த விளையாட்டுலயும் ஒரு மட்டு மரியாதை இருக்கணும். பந்தாகட்டும், பேட்டாகட்டும், ரெண்டையுமே கிரிக்கெட்ல கையாலதானய்யா புடிக்கிறோம். இந்த ஃபுட்பால்ல மட்டும் காலால மிதிக்கிறாய்ங்க, உதைக்கிறாய்ங்க, தலையால முட்டுறாய்ங்க! ஆனா, கையால மட்டும் தொட மாட்றாய்ங்க! இப்படி மரியாதையில்லாத ஒரு விளையாட்டை என் ஆத்தா சத்தியமா நான் பார்த்ததேயில்ல!

Sponsored


மரியாதைன்னதும் இன்னொரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்து தொலையுது. ஏய்யா, நம்மூரு கிரிக்கெட்ல ஒவ்வொரு பிளேயரும் பேன்ட் ஷர்ட் போட்டு எவ்வளவு டீசன்ட்டா விளையாடுறாங்க. ஃபுட்பால்ல பாருங்க, அம்புட்டுப் பயபுள்ளையும் என்னவோ ஸ்கூல் பயக மாதிரி டவுசரை மாட்டிக்கிட்டு ஓடுறாய்ங்க. அவிங்கதான் அப்டின்னா, இந்த அம்பயர் பெருசுங்களும் டவுசரோடு ஓடுறதைப் பார்க்கப் பார்க்க கண்ணுல பொசுங்கிடும்போல! பார்க்கிற எனக்கே கண்ணக்கட்டுதே! இதுல அவங்களோட டீம் கோச் மட்டும் என்னவோ ஐ.நா சபை அதிகாரி மாதிரி கோட் சூட், டையோட இருக்காங்க... இதெல்லாம் எந்த ஊரு நியாயம்?

நம்ம கிரிக்கெட்டுல ஃபீல்டிங் பண்ற டீம் மட்டும்தான் கிரவுண்டுல பந்து எடுக்க ஓடுவாய்ங்க. விளையாட்டுன்னா அப்டித்தான் ஒரு ஒழுங்கோட இருக்கணும். ஆனா ஃபுட்பால்ல, அம்புட்டு பேரும்ல கிரவுண்டுல குறுக்க மறுக்க ஓடுறாய்ங்க. போதாக்குறைக்கு அம்பயருங்க ரெண்டு பேரும் அவிங்ககூடவே சேர்ந்து ஓடுறாய்ங்க! அது ஃபுட்பால் மேட்சா... இல்ல ஓட்டப்பந்தயமான்னே தெரியலை! அந்தப் பந்து பாவம்யா. ஆளாளுக்கு வெவ்வேறு திசைக்கு உதைக்கிறாய்ங்க. ஒரு நேர்மையான ஆபீஸரை இஷ்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ற மாதிரி இப்டியா அங்கயும் இங்கயுமா விரட்டுறது?

விளையாட்டுன்னா ரூல்ஸ் எல்லாருக்கும் ஒண்ணுபோல இருக்கணும்யா. அம்புட்டு பேரும் காலால பந்தை உதைக்கிறப்ப, கோல் கீப்பர் மட்டும் கையால புடிக்கிறது எப்டியா ஏத்துக்க முடியும்? மத்த பிளேயர் எல்லாரும் லொங்குலொங்குன்னு ஓடியாடி விளையாடுறப்ப கோல்கீப்பர் மட்டும் கோல் போஸ்ட்கிட்டயே காவக்காத்துக்கிட்டு இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு? அதுவா ஒரு வீரனுக்கு அழகு? அதுமட்டுமா... பேஸ்கட் பால் விளையாட்டுல இத்துணூண்டு கூடைக்குள்ள பந்தைப் போடுவாய்ங்க பாருங்க, அதுதான் கஷ்டமான விளையாட்டு... ஆனா இந்த ஃபுட்பால்ல, அவ்ளோ அகலமான ஒசரமான வலைக்குள்ள பந்தை அடிக்கிறதாய்யா விளையாட்டு? இதுல என்னய்யா வீரம் இருக்கு? அடப்போங்கய்யா! எங்கூர்ல கோலிக்குண்டு விளையாடுற பசங்கள விட்டாலே ஈஸியா தட்டிட்டு வந்துடுவாய்ங்க.

அதவிடுங்க, கிரவுண்டுதான் அவ்ளோ பெருசா கட்டிவிட்டுருக்காய்ங்கல்ல, அவ்வளவு பெரிய கிரவுண்டுல ஒருத்தனை ஒருத்தன் இடிக்காமக்கூட ஓட முடியாதா? அதுலயும் ஒருத்தன் மேல லைட்டா இடிச்சிட்டாக்கூட என்னவோ வயித்துப்புள்ளக்காரி பிரசவத்துக்குத் துடிக்கிற மாதிரி சுருண்டு விழுந்து ஓவரா சீன் போடுறாய்ங்க. `சந்திரமுகி' அரண்மனையில ஒவ்வொரு பொருளும் விழுகுதாம்... உருளுதாம் மாதிரியில ஒவ்வொருத்தணும் அங்கங்க பொத்துபொத்துனு விழுறாய்ங்க, உருளுறாய்ங்க... என்னய்யா நடக்குது அந்த விளையாட்டுல... இல்ல என்ன நடக்குதுங்கிறேன்? காளியாத்தா கோயில்ல அங்கப்பிரதட்சணம் பண்ற மாதிரியில்ல இருக்கு!

கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன். லாஸ்ட் பட் லீஸ்ட்! எங்களுக்கும் இவிங்கள மாதிரி விளையாடத் தெரியும். ஆனா, விளையாட மாட்டோம். இவிங்களவிட சூப்பரான கிரிக்கெட் எங்ககிட்ட இருக்கு. எங்க கிரிக்கெட்டுல டெஸ்ட் மேட்ச்லாம் அஞ்சு நாளைக்கு அசராம நடக்கும். சாப்பிட்டு உறங்கிட்டு வந்துகூட அஞ்சு நாளா விளையாடுவோம். ஒன் டே மேட்ச்னா ஒருநாள் முழுக்க இருட்டுற வரைக்கும் நடக்கும். டி-20 மேட்ச்கூட மொத்தமா நாலு மணி நேரம் நடக்கும். இதென்னய்யா வெறும் ஒன்றை மணி நேரம் நடக்கிற ஃபுட்பாலெல்லாம் ஒரு மேட்சா? இதுல வேற சப்ஸ்டியூட்னு அடிக்கடி ஆளை மாத்துறாய்ங்க! போங்க தம்பி, இதெல்லாம் ஒரு விளையாட்டுன்னு இதுக்கு வேர்ல்டு கப் வேற! எங்கூருப் பக்கம் சொன்னா சிரிச்சுடப்போறாய்ங்க! Trending Articles

Sponsored