பிறந்த மான்குட்டி சிங்கத்திடம் சிக்கினால் என்ன ஆகும்? தாய் மானின் திக் திக் நிமிடங்கள்!



லிமையான விலங்குகளுக்கும், சாதுவான விலங்குகளுக்கும் காடுகளிலிருக்கிற ஒரே ஒற்றுமை ஓடிக்கொண்டே இருப்பதுதான். வலியது உணவுக்காக ஓடும், சாது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும். இரண்டு உயிர்களுக்குமே எமோஷன் என்பது ஒன்றுதான். உயிர் பிழைத்துவிட்டோம் என்பது வரிக்குதிரைக்கு எமோஷன். வரிக்குதிரையைக் கொல்ல முடியவில்லை என்பது சிங்கத்துக்கு எமோஷன். கையில் சிக்கிய மானை விட்டு விட்டோம் என்பது சிறுத்தைக்கு எமோஷன். துரத்தி வந்த சிறுத்தையிடமிருந்து தப்பித்தோம் என்பது மானுக்கு எமோஷன். காட்டு ராஜாவான சிங்கம் உள்ளிட்ட உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான விஷயம் எமோஷன். 

Sponsored


தான்சானியாவிலுள்ளது, செரேங்கேதி தேசியப் பூங்கா. அங்குச் சிங்கம், சிறுத்தை, காட்டு மான்கள், கழுதைப் புலிகள், வரிக் குதிரைகள் எனப் பல உயிரினங்கள் வசித்து வருகின்றன. அன்றைய நாள் காலை... பூங்காவில் வரிக் குதிரைகளும், காட்டு மான்களும் கூட்டமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேய்ச்சலில் இருக்கிற விலங்குகளை வேட்டையாடச் சிங்கங்கள் தகுந்த நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் கூட்டத்திலிருக்கும் வரிக்குதிரை ஒன்றும், காட்டு மான் ஒன்றும் (Wildebeest) கன்றுகளை ஈன்றெடுக்கின்றன. ஒரு வேளை சிங்கம் ஏதாவது விலங்கை வேட்டையாடினால் தனக்கு உணவு கிடைக்கும் என்ற காரணத்தோடு, புல்வெளிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றிலிருந்து கழுத்தைப்புலி ஒன்று நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

Sponsored


வேட்டைக்குத் தயாராக இருந்த சிங்கம், திடீரென காட்டு மான்கள் இருந்த கூட்டத்துக்குள் செல்கிறது. காட்டு மான்கள் தலைதெறிக்கச் சிதறி ஓடுகின்றன. கன்றை ஈன்றெடுத்த காட்டு மான் தன்னுடைய கன்றின் உடலிலுள்ள கழிவுகளை நாக்கால் சுத்தம் செய்து கொண்டிருந்தது. வேட்டைக்கு வந்த சிங்கம் நேராகக் கன்றை ஈன்ற காட்டு மானை நோக்கி ஓடி வந்தது. தாய் மானுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு நொடி திகைத்து நிற்கிறது. கன்றைக் காப்பாற்றுவதா... தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா... என்ற முடிவில் கன்றைப் பாதுகாக்கத் துணிந்து விட்டது. தாய் மான் ஓட அதைப் பின் தொடர்ந்து பிறந்த கன்றும் ஓட ஆரம்பிக்கிறது. பிறந்து முழுவதுமாக நிற்கவே கற்றுக்கொள்ளாத கன்று, தாயைப் பின் தொடர்ந்து ஓட முயன்றது. தன்னைத் துரத்துவது சிங்கமென்றே தெரியாத கன்று தட்டுத் தடுமாறி ஓடுகிறது. பரபரப்பான அந்த நேரத்தில் சிங்கம் கன்றை நோக்கிப் பாய்கிறது. ஆனால், கன்று அதனிடமிருந்து தப்புகிறது. தாய் மான் பிள்ளையைக் காப்பாற்ற சிங்கத்தை நோக்கி வர ஆரம்பிக்கிறது. சிங்கத்தின் ஆவேசத்தின் முன்னால் பயத்திலும், பதற்றத்திலும், மானால் எதுவும் செய்ய முடியாமல் போக, கண்ணீர் மல்க வேடிக்கை பார்க்கிறது. அடுத்த சில நொடிகளில் பிறந்து சில நிமிடங்களேயான கன்று சிங்கத்தின் வசம் பிடிபட்டு விடுகிறது. 

Sponsored


சிங்கத்திடம் சிக்கிய கன்று நிற்க முடியாமல் தள்ளாட ஆரம்பிக்கிறது. பிறந்த ஈரம் கூட காயாத கன்றை சிங்கம் முகர்ந்து பார்க்கிறது. கன்று சிங்கத்தின் பிடியில் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத தாய் மான், தன் பிள்ளை இருக்கிற இடத்தைப் பார்த்து அழுகிறது. அவ்வளவு எளிதில் விலங்குகளிடம் ஈவு இரக்கத்தை எதிர்பார்த்து விட முடியாது. கொல்லன் பட்டறையில் தொலைந்து போன குண்டூசியைத் தேடுவது போன்றது அது. சிங்கம் கன்றைக் கீழே போட்டு அதன் மேல் தன்னுடைய முகத்தைப் புதைக்க முயற்சி செய்கிறது. பிள்ளையைப் பெற்று முழுதாய் முகர்ந்து கூட பார்க்காத தாய் மான் ஏதாவது நடந்து, தன்னுடைய கன்றை சிங்கத்திடமிருந்து காப்பாற்றிவிட முடியாதா என ஏங்க ஆரம்பிக்கிறது. 

பிள்ளை பிறந்த தருணங்களை இதற்கு முன்பு சிங்கம் பார்த்திருக்குமா? அதை முகர்ந்திருக்குமா? ஆனால் அது, சிங்கம்... பசியில் இருக்கும் அதனிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. கன்றினுடைய கடைசி நிமிடங்களைத் தாயோடு சேர்த்து மற்ற காட்டு மான்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஒரு சில நிமிடங்களில் சிங்கம் கன்றுடன் விளையாட ஆரம்பிக்கிறது. சிங்கம் கன்றை எதுவும் செய்யாமல் அதனோடு விளையாடுவதில் மும்முரமாக இருக்கிறது. கன்று சிங்கத்தின் உடலில் முட்டுகிறது. கன்று பாலுக்கு ஏங்குகிறது என நினைத்ததோ என்னவோ, சிங்கம் அமைதியாகக் கன்றின் காலுக்கு அடியில் படுத்துக்கொள்கிறது. 

P.C. YouTube

நேரம் செல்ல செல்லக் கன்றின் உடலில் இருந்த கழிவுகள் காய்ந்து விடுகின்றன. ஆனால், சிங்கம் கன்றை விடவுமில்லை, அதை உணவாக்கிக்கொள்ளவும் இல்லை. ஏதாவது ஒரு மந்திர கணம் நிகழாதா என ஏங்கிய தாய்மானுக்கு அது அமைந்தது. கன்றோடு இருந்த சிங்கம் திடீரெனத் தன்னுடைய பார்வையைப் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த மற்ற விலங்குகளின் மீது திருப்புகிறது. கன்றைப் பற்றி கவலைப்படாமல், அதை விட்டு வேறு திசையில் பாய்ந்து செல்கிறது. இதைத் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தாய் மான், குட்டி இருந்த திசையை நோக்கி ஈட்டிபோலப் பாய்கிறது. குட்டியும் தன் தாயை அடையாளம் கண்டு, அதனை நோக்கி ஓடி வருகிறது. சில நிமிடங்களில் தாய் மானும், கன்றும் ஒரு மையப் புள்ளியில் இணைகின்றன. தாய் பிள்ளையை முகர்ந்து கொண்டாடுகிறது. ஆகச் சிறந்த தருணங்கள் அமைவதெல்லாம் நிச்சயமாக ஒரு வரம்தான், அதுவும் காட்டுக்குள். 

எல்லா உயிர்களுக்குமே ``லைப் இஸ் ஃபியூட்டிபுல்….”



Trending Articles

Sponsored