9 நாள்கள், 3580 கி.மீ பயணம்! - ஜாவாவில் ஒரு க்ளாஸிக் அனுபவம்!Sponsoredஜாவா பைக்குடன் என் முதல் அனுபவம், ஒரு பயணத்தை நோக்கியதாகவே இருந்தது. ``ஜாவா பழைய வின்டேஜ் பைக்காச்சே... எப்படி லாங் ரைடுக்கு செட்டாகும்?'' என்று ஒரு யெஸ்டி பைக் வெறியரைப் பார்த்துக்கேட்டேன். அவர் என்னிடம் கேட்டார்,

``ஜாவா பைக் ஓட்டியிருக்கீங்களா?"

``இல்லைங்க!''

Sponsored


``ஒரு ஜாவா பைக்கை ஓட்டினாத்தான் உங்களால் அந்த உணர்வைப் புரிஞ்சுக்க முடியும்" என்று தனது ஜாவா `ரோடு கிங்' பைக்கைக் கொடுத்தார் `ரோரிங் ரைடர்ஸ்' க்ளப்பைச் சேர்ந்த சைலேஷ். மெரினாவில் சும்மா ஒரு ரவுண்டு வந்த அனுபவமே சிலாகித்து எழுதும் அளவுக்கு இருந்தது என்றால், கடலைப் பார்த்துக்கொண்டே மொத்தத் தென்கிழக்குக் கடற்கரைச் சாலையையும் பைக்கில் பறந்து சென்றால் எப்படியிருக்கும்! 

Sponsored


அப்படித்தான் `ரோரிங் ரைடர்ஸ்' க்ளப்பைச் சேர்ந்த ரைடர்கள், ஜாவாவை கடற்கரையிலேயே விரட்டிவந்திருக்கிறார்கள். சென்னையில் ஆரம்பித்து மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் சிந்துவாரா வரை கடற்கரைச் சாலையிலேயே ஒரு லாங் ரைடு சென்றுள்ளார்கள் `ரோரிங் ரைடர்ஸ்' நண்பர்கள்.  ஜாவாவின் ரோரிங்கை இந்தியா முழுக்க அலறவிடுவது ரோரிங் ரைடர்ஸின் ஹாபி. ``கடற்கரைப் பயணம் எப்படி இருந்துச்சு?" பயணத்தைப் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தேன்.

``ஒரு நாளைக்கு 400 கி.மீ எங்களோட டார்கெட். மொத்தம் 6 ரைடர்கள், 9 நாள், 3,580 கி.மீ பயணம். 5 யெஸ்டி ரோடு கிங், ஒரு யெஸ்டி க்ளாசிக். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" என்று `பிக் பாஸ்' ஸ்டைலில் தம்ஸ் அப் காட்டினார்கள்.

``எங்களோட ப்ளான் இந்தியாவோட கடற்கரையை பைக்கில் சுற்றிவரணும். போன வருஷம் கன்னியாகுமரி வரை ஒரு ரைடு போனோம். இந்த ரைடு அதோட தொடர்ச்சி. ஒரு வழியா இந்தியாவோட கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சுற்றி வந்தாச்சு. அடுத்த வருஷம் கேரளாவையொட்டியிருக்கும் மேற்குக் கடல் பகுதியில் ரைடு போகலாம்னு இருக்கோம்" என்று உற்சாகமாகப் பேசினார் ரோரிங் ரைடர்ஸின் ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீனிவாசன்.

``மொத்தம் ஆறு இடங்களில் தங்கினோம். மச்சிலிப்பட்டினம், ஶ்ரீகாகுளம், புரி, சம்பல்பூர், ராய்பூர், நாக்பூர், ஹைதராபாத், லெபாக்‌ஷி எனத் தங்கும் இடங்களை முன்பே முடிவுசெய்திருந்தோம். நாங்கள் தங்கும் ஒவ்வொரு நகரத்திலும் அந்த நகரத்தில் இருந்த ஜாவா க்ளப் நண்பர்கள் தங்குவதற்கான வசதிகளைச் செய்திருந்தார்கள். போகும் வழியில் ஜாவா க்ளப் மட்டுமல்லாமல், பல பைக் க்ளப் நண்பர்களையும் சந்தித்தோம். `இந்த ரைடு நண்பர்களைச் சந்திக்கச் சென்றதோ!' என எங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. செம ஃபன்!" என்று ஶ்ரீனிவாசன் சொல்ல, ``எந்த ரூட் புது அனுபவத்தைத் தந்தது?'' என்ற கேள்விக்கு, ``ஏரிக்குள்ள பைக்கில் போனதுதான்'' என்றார் சைலேஷ்.

``ஒடிசாவில் சிலிகா லேக் என்று ஓர் இடம் உள்ளது. பைக் ரைடைவிட அங்கு படகில் போனதுதான் செம எக்ஸ்பீரியன்ஸ், செம த்ரில். கடல் பக்கத்திலேயே இருக்கிறது சலிகா ஏரி. இதைக் கடக்க சாலை இருந்தாலும், இங்கு வரும் ரைடர்கள் பைக்கை படகில் ஏற்றி, இந்த ஏரியைக் கடப்பார்கள் எனக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் படகுக்கு மூன்று பைக் என, இரண்டு படகைப் பிடித்து பைக்கை ஏற்றிச் சென்றோம். விடாமல் அலை அடித்துக்கொண்டே இருந்தது. அலையில், ஆடும் படகில் பைக்கைக் கட்டிவைத்துப் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்" என்றார். 

``ஒரு நாளைக்கு 450 கி.மீ டார்கெட் வைத்துச் சென்றோம். ஒடிசா வரை கடற்கரைச் சாலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது இந்த முறை நகரத்துக்குள் நுழைந்து வந்தோம். போகும்போது சில இடங்களில் சரியான சாலை இல்லை. வெறும் கற்கள்தாம். தெலங்கானாவைத் தொட்ட பிறகு பிரமாதமான சாலையைப் பார்த்தோம். நெடுஞ்சாலை செம ஸ்மூத். ஆனால், வெயில் அதிகம். சாலையில் இரு பக்கமும் பள்ளம். அதைத் தாண்டி மரம் இருந்ததால் சாலையில் நிழல் இல்லை. வெயில், ஸ்மூத் சாலை, கைகளுக்கும் கால்களுக்கும் வேலையே இல்லை. கொஞ்சம் நேரம் பைக் ஓட்டிவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கவேண்டும். இல்லையென்றால், தூங்கிவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டது. ஹைதராபாத் வரும்போது காலையில் வெயில், மாலையில் மழை என க்ளைமேட் புரட்டியெடுத்தது. எப்படியோ சமாளித்து லெபாக்‌ஷியை அடைந்தோம்" என்றார் ஶ்ரீனி.

``லெபாக்‌ஷியில் 1530-ம் ஆண்டு கட்டப்பட்ட வீரபத்திரன் கோயில் உள்ளது. இதன் கட்டுமானத்தைப் பார்க்கவே பல நூறு கி.மீ தாண்டி வரலாம். நகரம், கோயில் இரண்டையும் அருமையாகக் கட்டியுள்ளார்கள்'' என்று இடத்தைப் பற்றியும்  சொன்னார்.

``சில இடங்களில் 30 கி.மீ-க்கு ஒரு பெட்ரோல் பங்க்தான் இருந்தது. பல இடங்களில் தண்ணீர் பாட்டில்கூடக் கிடைக்கவில்லை. உப்புத்தண்ணீர்தான். ஓர் இடத்தில் அடுத்த மருத்துவமனை 100 கி.மீ தொலைவில் என்ற போர்டைப் பார்த்தபோது பயங்கர அதிர்ச்சி. தமிழ்நாட்டில் குறைந்தது 10 கி.மீ-க்கு ஒரு மருத்துவமனையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டிலிருந்து மேலே போகும்போது, பல கிராமங்கள் அடிப்படை வசதிகளில் மோசமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது'' என்று தங்களுடைய வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்கள் ரைடர்கள்.

ஒரு நிமிடம், மருத்துவ மாணவரான எர்னெஸ்டோ குவேராவை, லத்தின் அமெரிக்காவின் `சே'-வாக மாற்றிய அந்த மோட்டார் சைக்கிள் பயணம் எப்படி இருந்திருக்கும் என யோசித்தது மனம். பசி, வெறுமை, சந்தோஷம், பயம், அன்பு, காத்திருப்பு எல்லாம் கலந்த மனிதம் என அனைத்தையும் சேர்த்து ஒரு நினைவாகத் தருகிறது ஒரு பயணம். பயணத்தைப் பாதுகாப்பாக முடித்த ரோரிங் ரைடர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.Trending Articles

Sponsored