'யுகோ'... அமெரிக்காவில் காலாவதியான உலகின் மோசமான கார்Sponsoredபார்த்த உடனே நம்மை ஈர்க்கும் அமெரிக்க Muscle கார்களும், செம மைலேஜ் கொடுத்த, சூப்பர் தரம் இருந்த ஜப்பானிய கார்களும், பணக்காரர்களின் அடையாளமான இத்தாலிய கார்களும் அமெரிக்கச் சாலைகளில் சவுண்டு போட்டுச் சுற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், அமெரிக்காவில் காலடியெடுத்து வைத்த குட்டி டப்பா கார்தான் `யுகோ'. அமெரிக்காவும் கம்யூனிசமும் பழைய ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மாதிரி முறண்டுபிடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கம்யூனிஸ்டுகள் தயாரித்த இந்த கார், வேங்கயன் மவன் போல ஒத்தையாக நின்று விற்று தீர்ந்தது. `உலகின் மோசமான கார்' எனப் பலராலும் வர்ணிக்கப்பட்ட இந்த காரை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்தவர் மால்கம் பிரிக்லின்.

அமெரிக்காவில் கார்களை இறக்குமதி செய்யும் தொழிலைச் செய்துவந்த மால்கம் பிரிக்லினுக்கு 1984-ம் ஆண்டு கஷ்டகாலம் வந்தது. அப்போது அவர் விற்பனை செய்துகொண்டிருந்த  pininfarina spider மற்றும்  bertone x1/9 கார்களின் விற்பனை படுத்துவிட்டது. கம்பெனியைக் காப்பாற்ற புதிய காரை இறக்குமதி செய்யவேண்டும் எனச் சுற்றுப்பயணம் கிளம்பியவருக்கு, யுகோஸ்லோவியாவில் கிடைத்துதான் யுகோ. மால்கம் பிரிக்லினும் முன்னாள் ஃபியட் நிர்வாகி டோனி சிமினிரா இருவரும் செர்பியா பயணித்தபோது, பெல்கிராடே ஹோட்டலின் பார்க்கிங்கில் ஃபியாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருந்த இந்த காரைப் பார்த்தார்கள்.

Sponsored


Sponsored


``பார்த்த உடனே அமெரிக்கச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும்'' என்று சொல்கிறார் சினிமிரா. ஆனால், மால்கம் ``பார்க்கலாம்'' என்று அசால்ட்டாகச் சொல்ல, அடுத்த நாள் இந்த காரின் தொழிற்சாலைக்கு இருவரும் சென்றார்கள். துப்பாக்கி செய்துகொண்டிருந்த Crvena Zastava தொழிற்சாலையில்தான் இந்த கார்கள் உருவாகிக்கொண்டிருந்தன. பயங்கர அலங்கோலமான தொழிற்சாலை அது. புதிய காரின் உள்ளே வேலையாள்கள் சிகரெட் பிடித்துக்கொண்டும், அழுக்கான பூட்ஸைப் போட்டுக்கொண்டும் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்த மால்கமுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! காரின் விலை வெறும் 2,000 டாலர் என்றதும் அதிர்ச்சியைக் குறைத்துக்கொண்டு `சரி தரமெல்லாம் யாருக்கு வேணும்? இந்தத் தொழிற்சாலையை யார் வந்து பார்க்கப்போறாங்க?' என்று யுகோவுடன் டீல் போட்டு, அமெரிக்காவில் இந்த காரை 3,990 டாலர் என்ற விலைக்கு விற்பனைசெய்தார். மால்கம் நினைத்தது உண்மைதான், தொழிற்சாலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. கார் ஒழுங்காக வருகிறதா என்பதுதான் எல்லோரின் கவலையாக இருந்தது. ஆகஸ்ட் 1985, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது யுகோ. 

அமெரிக்காவில் ஒரு கம்யூனிஸ்ட் கார் விற்பனையாகிறது என்றவுடன் லைக்ஸ் பிச்சிக்கிட்டு, ஒரே நாளில் 1,050 கார்கள் விற்பனையானது. எதிர்பார்த்ததைவிட அதிக விற்பனை. ஆனால், அடுத்த ஆண்டே விற்பனை படுத்துவிட்டது. காரின் தரத்தில் பல புகார்கள் எழுந்தன. கிராஷ் டெஸ்ட்டில் கார் தப்பிக்கவில்லை. 0-60 கி.மீ வேகத்தைத் தொடுவதற்கு 14 நொடி தேவைப்பட்டது. கார் அவ்வளவு பொறுமை. அதிகபட்ச வேகமே 138 கி.மீ.,தான்! டிவி சீரியல், கார்ட்டூன், ரேடியோ என எல்லோருமே யுகோவைக் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். `டொயோட்டா கார் வாங்கினால் இலவசம்' என்று கொடுத்தபோதும் `எங்களுக்கு டொயோட்டா போதும்' என்று சொல்லிவிட்டார்களாம். ஆனால், விமர்சனங்களுக்கு மத்தியிலும் சில யுகோ கார்கள் விற்பனையாகிக்கொண்டுதான் இருந்தன. யுகோஸ்லோவியாவில் உள்நாட்டுப் போர் உருவானதால், ஐ.நா சபை செர்பியா மீது வர்த்தகத் தடை விதித்திருந்தது. இதனால் இந்த கார் நிறுவனம் திவாலாகி, 1992-ம் ஆண்டு இதன் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

கூகுளைத் தட்டிப்பார்த்தால் தெரியும், இன்னும் இந்த காருக்காக போர் நடந்துகொண்டிருப்பது. எது எப்படியோ, யுகோ விற்பனையானதற்கும் காலாவதியானதற்கும் அந்த காரைத் தாண்டி அதன் மீது திணிக்கப்பட்ட அரசியலும் ஒரு காரணம்.Trending Articles

Sponsored