கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால்..!? - நமக்கு நாமே இன்செப்ஷன் செய்யலாம்Sponsoredகனவுகள் எவ்வளவு அழகான விஷயம். அந்தக் காலை நேரத்தில் நம் வாழ்வில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கையைத் தர கனவுகளால் மட்டுமே முடியும். எத்தனையோ நாள்கள் அந்த அழகான கனவுகளைக் கலைப்பதற்கு என்றே இந்த அலாரங்கள் அடித்துத் தொலைக்கும். திடுதிப்பென எழுந்துவிட்டுக் கன நேரத்தில் மீண்டும் படுத்து அதே கனவு மீண்டும் வராதா ஏன ஏக்கப் பெருமூச்சோடு தூங்க முயன்றிருப்பீர்கள். சரி ஒருவேளை அந்தக்  கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால்? நாம் நினைக்கும் வாழ்க்கையை அந்தக் கனவுலகில் வாழ முடிந்தால் எப்படி இருக்கும்? சூப்பர் மேன் போல பறக்கலாம், இந்தியாவின் பிரதமராகி நாடு நாடாகச் சுற்றலாம். சொடக்குப் போடும் நேரத்தில் ஒரு பறக்கும் தட்டை உருவாக்கி இந்த அண்டத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிடலாம் இன்னும் எத்தனையோ செய்யலாம்தான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அறிவியல் இந்தக் கனவுகளைப் பற்றி கூறுவது என்ன? பார்ப்போம். 

நாம் தினமும் கனவு காண்போமா எனத் தெரியாது. ஆனால், ஒரு சில நாள்கள் நாம் காணும் கனவு மட்டும் நம் நினைவில் இருக்கும். நாம் எழுந்ததும்தான் அது கனவு என்று தெரிய வரும். இப்படியான கனவுகளுக்குப் பெயர்தான் `லூஸிட் ட்ரீமிங்' (Lucid dreaming). இந்தக் கண்கவர் நிகழ்வை வைத்து வாழ்வில் என்ன என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சிகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, 2017ல் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று நாம் மனது வைத்தால் நம் விருப்பத்துக்கு ஏற்ப கனவு கானலாம் என்று கண்டுபிடித்திருக்கிறது. உலகில் உள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது லூஸிட் ட்ரீம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். கால்வாசி பேருக்கு லூஸிட் ட்ரீமிங் மாதத்துக்கு ஒருமுறை அல்லது பலமுறை நிகழ்கிறது. 1975ல் தான் லூஸிட் ட்ரீமிங் என்று ஒன்று இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள். அதன் பிறகு இதை எவ்வாறு நிகழ வைப்பது எனப்  பலகட்ட ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. இது மட்டும் சாத்தியமானால் நிஜ வாழ்வில் செய்யக்கூடிய சம்பவங்களைக் கனவுலகில் செய்து பார்த்து பயிற்சி எடுத்து நிஜ உலகில் நம்மால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். 

Sponsored


லூஸிட் ட்ரீமிங் செய்வது எப்படி:
லூஸிட் ட்ரீமிங் என்பதற்குத் தெளிவாகக் கனவு காணுதல் என்று பொருள். இதைச் செய்வதற்கு மூன்று முறைகளைப் பயன்படுத்தலாம் அல்லது மூன்று முறைகளையும் ஒவ்வொரு கட்டமாகப் பயன்படுத்தலாம்.

Sponsored


1. நிகழ்கால உண்மைத்தன்மை சோதனை:
தினமும் ஒரு பத்து முறையாவது ``நான் கனவு காண்கிறேன்" என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதோடு உங்கள் வாயை மூடியவாறே காற்றை உள்ளிழுக்க முயற்சி செய்யுங்கள். (கனவில் இருந்தால் உங்களால் வாயை மூடியவாறே காற்றை உள்ளிழுக்க முடியும், நிஜத்தில் முடியாது).

2. தூங்கிய பிறகு ஒருமுறை எழுந்துவிட்டு மறுபடியும் தூங்க வேண்டும்:
நீங்கள் வழக்கம்போல் நன்றாகத் தூங்குங்கள். ஆனால், தூங்கி ஐந்து மணி நேரத்தில் எழுந்துவிடும் வகையில் ஒரு அலாரம் வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து மணி நேரம் தூங்கி எழுந்த பிறகு, தெளிவான கனவு காணுபதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்ற 700 வார்த்தை கையேடு ஒன்று உண்டு. அதைப் படித்துவிட்டு மீண்டும் உறங்க வேண்டும். பொதுவாகக் கனவுகள் REM sleep (Rapid eye movement sleep) நிலையில் தானா வரும். அது ஒரு முறை தூங்கி இடையில் எழுந்து மறுபடியும் தூங்கும்போதுதான் அந்த நிலையை அடைய முடியும். இந்த REM நிலை தூக்கம் 90 நிமிடங்களிலிருந்து 120 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதன் பின்னர் ஒவ்வொரு கட்டமாக ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்வீர்கள், அப்போது கனவுகளும் ஆழமாக இருக்கும். இந்த நிலையில்தான் நீங்கள் தெளிவாகக் கனவு காண முடியும். 

 3. நிமோனிக் இன்டக்ஷன் ஆஃப் லூஸிட் ட்ரீம்ஸ்: ( Mnemonic induction of lucid dreams)
நீங்கள் படுக்கையில் படுத்தவுடன் தூங்கச்செல்லும் முன் ``அடுத்த முறை நான் கனவு காணும் போது, அது கனவு என ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்" என்ற விஷயத்தை ஆழமாக நம்ப வேண்டும். அதனை ஆழமாகச் சிந்தித்துக்கொண்டே தூங்க வேண்டும். நீங்கள் தூங்கும் முன் எதை நினைக்கிறீர்களோ அதுவே கனவாக வரும் வாய்ப்பு அதிகம்.

``ட்யூட் இதெல்லாம் செஞ்சா கனவு வருமா” எனச் சந்தேகம் எழும். எனவேதான் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 169 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த மூன்று முறைகளையும் வைத்து சோதனை செய்திருக்கிறார்கள். இந்த நபர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினர் முதல் முறையை மட்டும் பின்பற்றுமாறும், இரண்டாம் குழுவினர் முதல் இரண்டு முறைகளை மட்டும் பின்பற்றுமாறும் மற்றும் மூன்றாம் குழுவினர் இம்மூன்று முறைகளையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். முதல் ஒரு வாரம் அவர்கள் அனைவரையும் எந்த முறையையும் பின்பற்ற வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் வார முடிவில் அனைவருக்கும் தெளிவான கனவு வரவேயில்லை. இரண்டாம் வாரம் இந்த முறைகளை மேற்கொண்ட பிறகு, முதல் குழுவினருக்கு 8 சதவிகிதமும், இரண்டாம் குழுவினருக்கு 11 சதவிகிதமும், மூன்றாம் குழுவினருக்கு 17 சதவிகிதமும் தெளிவான கனவு அதாவது லூஸிட் ட்ரீமிங் நிகழ்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இதில் மூன்றாம் முறையைப் பயன்படுத்தியவர்கள் 46 சதவிகிதம் தங்களுக்குக் கனவு தெளிவாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

இது இந்தக் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியின் தொடக்கம் மட்டுமே, இன்னும் இதனை மேம்படுத்த முடிந்தால் மறுநாள் செய்ய வேண்டிய விஷயத்தை முதல் நாள் தூக்கத்திலேயே ரிகர்சல் பார்த்து உங்களால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். இன்செப்ஷன் படம் பார்த்திருக்கிறீர்கள்தானே, இது உங்களை நீங்களே இன்செப்ஷன் செய்து கொள்ள உதவும். Trending Articles

Sponsored