மாஸ் சூசைட் செய்த 75 ஆப்பிரிக்கப் பழங்குடியினர்... மாற்றப்பட்ட வரலாறு!Sponsored``தண்ணீர் கடவுள் ஒமாம்பலா...!
நீயே எங்களை இங்கு கொண்டுவந்தாய்.
தண்ணீர் கடவுள் ஒமாம்பலா...!
நீயே எங்களைக் கொண்டுபோவாய்..."

காதில் ஒலித்துக்கொண்டேயிருந்த பாடல் அவரது ஆழ்மனதைப் பிழிவதுபோலிருந்தது. எங்கோ தூரத்தில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. சிறிது சிறிதாக அந்த அழைப்பொலி அருகே கேட்கத் தொடங்கியது. தன்னைப் பிடித்து யாரோ உலுக்குவதை உணரமுடிந்தது.

Sponsored


``ரோஸ்வெல்...! ரோஸ்வெல்...!"

Sponsored


கொஞ்சம் கொஞ்சமாகச் சுயநினைவுக்கு வரத் தொடங்கினார். ரோஸ்வெல்லின் எஜமான் பியர்ஸ் பட்லர் (Pierce Butler) மிரண்டு போயிருந்த தனது பணியாளரைப் பார்த்து நடந்தவற்றைப் பற்றி முடிந்தமட்டும் விசாரித்துத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தார். செயின்ட் சைமன்ஸ் (St.Simons Island) தீவில் கடற்கரைக்கு மிக அருகிலிருக்கும் தோட்ட வீட்டுக்குச் சொந்தக்காரரான பியர்ஸ் பட்லரின் பணியாளான ரோஸ்வெல் கிங் (Rosewell King) அன்று கடற்கரைப் பகுதிக்குச் சென்றிருந்தபோதுதான் அந்தச் சம்பவத்தைத் தனது கண்களால் பார்த்தார். சொல்லப்போனால் அவரைத் தவிர அங்கு நடந்த பேரிழப்புக்கான சாட்சியம் வேறெவருமில்லை.

ஒரு பக்கம் ஜான் கூப்பர், தாமஸ் ஸ்பால்டிங் (John Couper & Thomas Spalding) இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்து வெளிப்படையாகவே வருந்திக்கொண்டிருந்தனர். ஓர் அடிமைக்கு 100 டாலர்கள் வீதம் விலைகொடுத்து வாங்கி வந்த 75 ஆப்பிரிக்க அடிமைகளைச் சந்தைகளில் விற்றுப் பெரும் லாபம் ஈட்டிவிடலாமென்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையிலும் அங்கே மூழ்கிப் போனவர்கள் வெறும் சரக்குகள் மட்டுமே. ஆனால், ரோஸ்வெல் மனம் அதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துபோக விடவில்லை. அவர் அங்கு பார்த்தது 75பேரின் தற்கொலையை. தாங்களே நடந்துபோய் டுன்பார் கழிமுகப் பகுதியில் (Dunbar Creek) மூழ்கியதும் அவர்கள் பாடிக்கொண்டே சென்ற பாடலுமே ரோஸ்வெல்லின் கண்களையும் காதுகளையும் ஆக்கிரமித்திருந்தன. 

சவான்னாவின் அடிமைகள் சந்தையில் ஓர் அடிமைக்கு 100$ வீதம் வாங்கப்பட்ட 75 அடிமைகளை கூப்பரும், ஸ்பால்டிங்கும். 1803-ம் ஆண்டு ``வார்டனர்" (Wardener) என்ற கப்பலில் அவர்களை ஏற்றிக்கொண்டு செயின்ட் சைமன்ஸ் தீவைநோக்கி வந்துகொண்டிருந்தனர். தீவுக்கருகே வரும்போது கப்பலின் அடித்தளத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இக்போ (Igbo) இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் அதுவரை பொறுமையாக இருந்ததற்குக் காரணம் கடல். அவர்கள் கடல் நடுவே கிளர்ச்சி ஏற்படுத்தி அங்கேயே மடிந்திருந்தால் அவர்களின் நோக்கம் கடல் காற்றிலேயே கரைந்துபோயிருக்கும். கரைநோக்கி வந்துகொண்டிருந்த கப்பலில் கிளர்ச்சி செய்தவர்கள் அங்கிருந்த காவலாளிகளைக் கொன்றுவிட்டுக் கரைக்கடலில் குதித்துக் கரைக்கு வந்தனர்.

அடிமை வாழ்வை ஏற்க மறுத்துத் தன்மானத்தோடு சுதந்திர மனிதர்களாக தப்பித்துச் சென்று வாழ்ந்திருக்கலாம். காட்டிலேயே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் இக்போ இன ஆப்பிரிக்கப் பழங்குடிகளால் அதைச் செய்திருக்கவும் முடியும். ஆனால், அவர்கள் அந்தக் கிளர்ச்சியைத் தொடங்கியதற்குக் காரணம் தப்பிப்பதல்ல. தங்களைப் போலவே பிடிபட்டு அடிமைகளாக உலகின் பல்வேறு மூலைகளில் வாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு, சுதந்திரமானவனாக இறப்பது அடிமை வாழ்வைவிட மேலானது என்பதைப் புரியவைப்பதே. அவர்களின் இந்த உன்னத நோக்கம் அடிமையாக வாழும் ஒவ்வோரு கறுப்பனின் காதுக்குள்ளும் ஒலிக்கவேண்டும் என்பதே அவர்களின் பெருந்திரள் தற்கொலைக்குக் காரணம்.

கரைக்கு வந்தபிறகு அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். தூரத்தில் ரோஸ்வெல் வந்துகொண்டிருந்தார். தூரத்திலிருந்து பார்க்கும்போதே கப்பலில் பிரச்னை நடப்பதும், அதிலிருந்து பலபேர் கரைக்கடலில் குதித்துக் கரையேறுவதும் அவருக்குப் புரிந்தது. அருகே செல்ல செல்ல கரைக்கு வந்த ஆப்பிரிக்கர்களின் கூட்டம் அங்கிருந்து சிறிது தூரத்திலிருந்த டுன்பார் கழிமுகப் பகுதியில் கடலுக்குள் இறங்கத் தொடங்கினர். ரோஸ்வெல் அவர்களை அணுகும் தூரத்திலில்லை. ஆனால், அவர்கள் உரக்கப் பாடிக்கொண்டிருந்த பாடல் மட்டும் அவர் காதில் நன்றாகக் கேட்டது. 

அவர்களால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போர்தான் இந்த இக்போ தற்கொலை. அவர்களின் இந்தத் தற்கொலைப் போராட்டம் பலரையும் சிந்திக்க வைத்தது. அதன்பிறகு கறுப்பினக் கொடுமைகளுக்கு எதிராக ஆங்காங்கே சிறியளவில் நடைபெறும் கிளர்ச்சிகளையும் அமெரிக்கர்கள் அடக்கிவிட்டனர். இதை இக்போ லாண்டிங் (Igbo Landing) என்ற பெயரில் இன்றும் வரலாற்றுப் பதிவாக அமெரிக்கக் குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். கறுப்பின மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளைப் பற்றியும் வரலாற்றுப் பாடங்களில் படித்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால், சில மாறுதல்களோடு. மொத்த ஆப்பிரிக்கர்களும் அடிமைத்தனத்தின் கொடுமைகளிலிருந்து மீண்டுவரவேண்டுமென்ற உன்னதமான இக்போ இனப் பழங்குடிகள் மீதே அழியாப் பழியையும் சுமத்திவிட்டனர்.

அடிமை வர்த்தகத்தை ஊக்குவித்த முக்கோண வர்த்தக முறை 15-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டின் இறுதிவரையிலுமே உலகம் முழுவதும் மிகப் பிரசித்தமாகியிருந்தது. ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் அந்த அடிமை வர்த்தகத்தில் விற்பதற்காக மனிதர்கள் விலங்குகளைப் போல் பொறிவைத்துப் பிடிக்கப்பட்டனர். இந்த வர்த்தக முறை தோன்றுவதற்கும் வளர்வதற்கும் வடிவமைப்பாளர்களாகவும், சூத்திரதாரிகளாகவும் இருந்தவர்களோ ஐரோப்பியர்களும், அரேபியர்களும். இக்போ மக்கள் இபோ, நீக்ரோ என்று பல்வேறு பெயர்களில் உலகின் பல பகுதிகளில் இவர்களால் விற்கப்பட்டார்கள். ஆனால், தற்போதைய குழந்தைகள் படிப்பதுவோ வேறுவிதமாக. ஆப்பிரிக்கர்கள் அங்கிருக்கும் ஆரோ சுக்குவா பாதிரியார்களால் (Aro Chukuwa priests) பிடித்துவைக்கப்பட்டு ஐரோப்பியர்களுக்கு விற்றதாகவும் அவர்கள் மூலமே அடிமை வர்த்தகம் வளர்ச்சியடைந்ததாகவும் கற்பிக்கப்படுகின்றது. யார் இந்த ஆரோ சுக்குவா பாதிரியார்கள்?

ஆரோ என்பவர்கள் இக்போ இனத்தின் கிளை மக்கள். சுக்குவா என்பது இக்போ இனத்தைச் சேர்ந்தவர்களின் தலைமைக் கடவுள். ஆக, ஆப்பிரிக்கர்களை அவர்களது மதபோதகர்ளே பிடித்து வைத்து லாபத்துக்காக விற்றதாகக் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

``அமெரிக்க அடிமை வர்த்தகம் மற்றும் அதற்கான தீர்வு" (American Slave trade & its remedy) என்ற புத்தகம் 1840-ம் ஆண்டு வெளிவந்தது. தாமஸ் பக்ஸ்டன் என்பவரால் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தில் இன்றைய கானாவின் (Ghana) கடற்கரையில் 1610-ம் ஆண்டில் கட்டப்பட்ட கேப் கோஸ்ட் (Cape Coast) என்ற கோட்டையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்வீடிஷ்களால் (Swedish) முதலில் தங்கம் மற்றும் தந்தங்களை ஏற்றுமதி செய்வதற்காகக் கட்டப்பட்டது. பிறகு, அந்தக் கோட்டை அமெரிக்காவில் அடிமைகளை விற்பதற்காகவே முழுநேரமும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது பற்றி பக்ஸ்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி அதே கோட்டையில் பணிபுரிந்த கவர்னர் மற்றும் கேப்டன் ஜான் எம் லியான் (John M'Lean) என்பவர் 1838-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி எழுதிய ஒரு கடிதத்தில் அங்கு 1,40,000 அடிமைகள் அந்த ஆண்டில் வர்த்தகம் செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவிலேயே ஸ்தலம் அமைத்து அடிமைகளைக் கடத்தி ஏற்றுமதி செய்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. Slavery & Slave trade in Africa என்ற புத்தகம் 1893-ம் ஆண்டில் வெளிவந்தது. இதை எழுதியவர்கள் ஸ்டான்லி மற்றும் ஹென்ரி மோர்டான். அந்தப் புத்தகத்தில் ஐரோப்பியர்கள் அரேபியர்களை வேலைக்கமர்த்தி இரவு நேரத்தில் ஆப்பிரிக்க மக்களின் கிராமங்களுக்குள் புகுந்து குடிசைகளுக்குத் தீ வைத்துவிட்டு வெளியே ஓடி வருபவர்களைப் பிடித்துக்கொண்டு போனதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இதைப்போலவே நடந்த சம்பவங்களை வரலாற்றில் பதிவு செய்துள்ளார்கள்.  நைஜீரியாவிலும், காங்கோ மற்றும் லுபிரான்ஸி (Nigeria, Congo, Lubiranzi) ஆகிய பகுதிகளிலிருந்து 1,20,000 மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் சுமார் 118 கிராமங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சூழ்ந்து தீ வைத்துவிட்டு அங்கிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளென்று பாரபட்சமின்றி அனைவரையும் பிடித்துச் சென்றனர். ஒருவேளை இக்போ மக்களின் ஆரோ சுக்குவா மதபோதகர்களே அவர்களை அடிமைகளாக விற்றிருந்தால், இப்படி கிராமத்தில் ஒருவர் விடாமல் அனைவரையும் விற்றுவிட்டு அங்கே வேறு யாருக்கு அவர்கள் தங்களது போதனைகளைச் செய்வார்கள். அத்தோடு ஒருசில பாதிரியார்களால் எப்படி லட்சக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்று விற்க முடியும். 
கேப் கோஸ்ட் கோட்டை கட்டப்பட்டு 160 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவரை அடிமை வர்த்தகத்தில் ஆட்சி செலுத்திவந்த போர்ச்சுகீசியர்களையும், ஸ்பானியர்களையும், டச்சுக்காரர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இங்கிலாந்து முன்னேறுவதற்கு ஜான் ஹாக்கிங் என்பவரே முன்னோடியாக இருந்தார். அதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வந்த இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் ஆங்கிலேய கம்பெனிக்கு பிரிட்டிஷ் மேற்கிந்தியத் தீவில் வருடா வருடம் 30,000 நீக்ரோக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து சேர்க்கவேண்டுமென்று உத்தரவிட்டார். இப்படியாக ஆங்கிலேயர்களின் அடிமை வர்த்தகத்தால் ஆப்பிரிக்காவில் காங்கோ, நைஜர் ஆற்றின் சமவெளிப் பகுதி, காம்பியா மற்றும் பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

மொத்த ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஆப்பிரிக்க மக்களை விற்பனைக்கான சரக்காகவே பார்த்தன. ஆப்பிரிக்க கண்டத்தைப் பொறுத்தவரையிலும் அங்கு வாழும் மக்களில் ஒவ்வொருவருமே வெள்ளையர்களுக்குப் பணம்தான். வரலாற்றில் பல்வேறு உண்மைகள் திரித்துச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடுவது சகித்துக்கொள்ள முடியாத வரலாற்றுப் பிழை.Trending Articles

Sponsored