உங்கள் பிட்காயின் பணம் சீக்கிரமே ஸ்வாஹா! - கிரிப்டோ கரன்சிக்கு அரசின் முற்றுப்புள்ளிSponsoredபிட்காய்ன், ஈதர், ரிப்பிள், லைட் காய்ன் என எல்லா விதமான கிரிப்டோ கரன்ஸி பரிவர்த்தனைகளுக்கு `கிட்டத்தட்ட' முற்றுப்புள்ளி வைத்துவிட்டது இந்திய அரசு. 

அது என்ன `கிட்டத்தட்ட' - நேரடியாக தடைவிதிக்கவில்லை. ஆனால் ஜூலை 6-ம் தேதி முதல் பிட்காய்ன் பரிவர்த்தனைகளை இந்திய வங்கிகளின் மூலம் செய்ய முடியாது... இனி இந்திய ரூபாய்க்கு பிட்காய்ன்களை வாங்கவோ விற்கவோ முடியாது. பிட்காய்ன் எக்சேஞ்ச்களுக்கும், கிரிப்டோ கரன்ஸி டீலர்களுக்கும் வங்கிகள் எவ்வகையிலும் எந்த சேவைகளையும் வழங்கக்கூடாது என ஸ்ட்ரிக்டாக உத்தரவிட்டிருக்கிறது ஆர்பிஐ. 

Sponsored


கடந்த டிசம்பர் வரை இந்தியாவில் 5% பேருக்கு கூட பிட்காய்ன் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் 2017 டிசம்பரில் நடந்த உலக பூம்பூமில்... பிட்காய்ன் மதிப்பு உலக அளவில் எகிறியது. 2017 தொடக்கத்தில் ஒரு பிட்காய்னின் மதிப்பு 900 டாலர்கள்தான் இருந்தது. அதுவே டிசம்பரில் பரபரவென ஏறி 20,000 டாலர்களை எட்டியது. ஏன் ஏறுது எப்படி ஏறுது என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால், ஏறியது. உலகெங்கும் ஏராளமான கோடிஸ்வரர்களை ஒரே ஆண்டில் உருவாக்கியது. இந்தியாவிலும் சிலர் மல்ட்டி மில்லியனர்கள் ஆனார்கள். அடுத்த சில நாள்களுக்கு ஊடகங்கள் முழுக்க பிட்காய்ன் வெற்றிக்கதைகள்தான். 

Sponsored


இந்தியர்களுக்கு இயல்பிலேயே பேராசை கொஞ்சம் அதிகம்... பிட்காய்ன் பஸ்ஸில் அவசர அவசரமாக புட்போர்ட் அடித்தனர். கையிலிருக்கிற காசையெல்லாம் தூக்கிக் கொட்டினர். கொடுமையாக இந்தியர்கள் களமிறங்கிய நேரமோ என்னமோ 2018 ஜனவரி மாதம் பிட்காய்ன் பலூனில் காற்று இறங்க ஆரம்பித்தது. என்ன வேகத்தில் விலையேற்றம் கண்டதோ அதைவிட அதிகவேகத்தில் இறங்கி இறங்கி இப்போது 6,000 ­சொச்சம் டாலர்களில் வந்து நிற்கிறது. 

டபுள் ட்ரிபுள் ஆசையில் அதிக விலைகொடுத்து பிட்காய்ன் வாங்கின பலரும் வசமாக சிக்கிக்கொண்டனர். மீண்டும் எப்போது பழையபடி விலை ஏறும் போட்ட காசை எடுப்பது  எனக்காத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்திய அரசு பிட்காயினர்கள் அத்தனை பேர் மண்டையிலும் ஆணி அடித்திருக்கிறது. 

சும்மாவா...  டிசம்பரில் பிட்காய்னில் காசு போடுகிறவர்கள் எண்ணிக்கை மடமடவென அதிகமானபோது...  கிரிப்டோனியன்கள் பக்கம் தன் ரேடாரை சுழலவிட்டது ஆர்பிஐ. பிட்காய்ன் பரிவர்த்தனைகளில் ஏராளமான வரி ஏய்ப்புகள். முறையற்ற நடவடிக்கைகள். மோசடிப்பேர்வழிகளின் சொர்க்கமாக இருந்தது இந்த கிரிப்டோ எக்சேஞ்ச்கள். 

அப்போதிருந்தே சிறுமுதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது ஆர்.பி.ஐ. அவ்வப்போது சின்னச் சின்ன எச்சரிக்கைகளை கொடுத்துக்கொண்டேயிருந்தது. இது ஆபத்தான ஆட்டம்... ஒத்து ஒத்து... தப்பி ஓடுங்க... என்றனர். ஆனால், யாரும் கேட்பதாயில்லை. இந்த நிலையில்தான் இப்போது ஒட்டுமொத்தமாக பிட்காய்னுக்கு தடைவந்திருக்கிறது. 

இனி என்னாகும்?

1.  இனி வங்கி பரிவர்த்தனைகளின் வழி பிட்காய்ன்களை வாங்கவோ விற்கவோ இயலாது. இதுவரை வங்கிகள் மூலம் பணம் வாங்கி, தந்து பிட்காய்ன் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த எக்சேஞ்ச் நிறுவனங்கள் வேறு வழி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்! 

2. உங்களிடம் பிட்காய்ன் இருந்தால் அதை இனி ரூபாயாக மாற்றிக்கொள்ளவோ ரூபாய் மதிப்பில் ட்ரேடிங் பண்ணவோ முடியாது. 

3. ஏற்கெனவே கிரிப்டோ கரண்ஸி எக்சேஞ்ச்கள் `உங்கள் பணத்தை திரும்ப எடுத்துக்கோங்க... இன்றே கடைசி' என வாடிக்கையாளர்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்கு மெயில் வந்திருந்தால் உடனே ஓடிப்போய் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 

4. கடைசி கட்டமாக ஜூலை 20-ம் தேதி வரை காத்திருக்கலாம். இன்டர்நெட் அன்ட் மொபைல் அசோசியேஷன் இந்தியா சார்பில் இந்த வங்கித்தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஜூலை 20-ம் தேதி விசாரிக்கவுள்ளார். எனவே `ஏதாவது நடக்கலாம்?'... `நடக்காமலும் போகலாம்'

5. இதையும் மீறி சில நிறுவனங்கள் (Koinex, Wazirex) Peer-to-peer சேவைகளை வழங்குகின்றன. அதாவது வங்கி பரிவர்த்தனைகள் இல்லாமல் வேறு வழிகளில் இயங்கும். இன்னும் சில எக்சேஞ்ச்கள் ஆன்லைன் பேமென்ட் அல்லது ரொக்கமாக பணம் பெற்றுக்கொண்டு பிட்காய்ன் வாங்கி விற்கின்றன. ஆனால், இதெல்லாம் மிகமிகமிகமிகமிக ஆபத்தானவை. பிட்காய்னே ரிஸ்கோ ரிஸ்க்குதான்... இந்த இரண்டாம்தர வழிகள் எல்லாம் அதைவிட ஆபத்தானவை. 

இப்போதைக்கு நாம் செய்யக்கூடியது என்ன?

1. நீங்கள் பிட்காய்னில் காசுபோட்டிருந்தால் தயங்காமல் உடனே காசை எடுத்துவிடுங்கள்

2. இப்போதைக்கு பிட்காய்ன் மாதிரி எந்த கிரிப்டோ கரன்ஸியிலும் காசு போடவேண்டாம். 

3. யாராவது சல்லிசு ரேட்டில் கிடைக்குது... பணப்பரிவர்த்தனை, Peer-to-peer மூலம் பண்ணலாம் என்றெல்லாம் ஆசைகாட்டினாலும் `போடா வெண்ணை' என்று போனை வைத்துவிடுங்கள். 

4. பிட்காய்ன் பரிவர்த்தனைகளுக்கு வலைவீசும் வாட்ஸ்அப் குரூப்கள் டெலிகிராம் சேனல்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்க்கக்கூட அந்தப்பக்கம் போய்விடவேண்டாம். முழுக்க சதுரங்கவேட்டையர்கள்... உஷார். 

5. பிட்காய்னில் போட்ட காசு எனக்குத் தேவையேயில்லை. அதில் எப்போதாவது லாபம் வந்தால் சரி, வராமல் போனாலும் பிரச்னை இல்லை என்று நினைத்தால் அப்படியே விட்டுவிடலாம். எதிர்காலத்தில் கிரிப்டோக்களுக்கு இந்திய அரசு முறையான அனுமதி கொடுக்கலாம். கொடுக்காமலும் போகலாம். அப்போது லாபம் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். Trending Articles

Sponsored