புலி உலவும் காட்டில் இசுஸூ டிரைவ்!Sponsoredஇந்தியாவின் பாசஞ்சர் மார்க்கெட்டில் இப்போதுதான் பிக்-அப் ரக வாகனங்கள் மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆளே இல்லாத செக்மென்ட்டில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் இசுஸூ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு `இசுஸூ டிஸ்கவரீஸ்’ என்ற பெயரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடிக்கு டிரைவ் ஏற்பாடு செய்து, நம்மையும் அழைத்திருந்தது.

சுற்றுலா சீசன் முடிந்து சென்றால், நீலகிரியின் அழகையும் ரம்மியத்தையும் கூட்ட நெரிசல் இல்லாமல் நிம்மதியாக ரசிக்கலாம் என்பது நோக்கமாக இருக்கலாம். 10 கார்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செல்ல, ஒருங்கிணைப்பாளர்களான 'ஹிமாலயன் எக்ஸ்ப்ளோரர்ஸ்' 3 பிக் அப்களிலும், கோவை, மதுரை டீலர்ஷிப்பைச் சேர்ந்த டெக்னீஷியங்கள் ஒரு சர்வீஸ் வாகனத்திலும் பின் தொடர்வதுதான் பிளான். மொத்தம் 14 வாகனங்கள்  ஷோரூமில் இருந்து கொடியசைத்து பிரமாண்டமாக அணிவகுத்துச் சென்றன. பிக்அப் டிரக் பயணத்துக்கு மசினகுடி போன்ற காட்டுப்பகுதிக்கு நல்ல தேர்வு. 

Sponsored


உற்சாகமான பயணத்தின்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த சசிக்குமாரிடம் மெல்லப் பேச்சு குடுத்தோம். ``நான் ஏற்கெனவே ஹோண்டா ஜாஸ், நிஸான் சன்னி வச்சிருக்கேங்க. எஸ்யூவி வாங்கலாம்னு ஐடியாவில் இருந்தப்போ தோப்பு, தோட்டதுக்கெல்லாம் பிக் – அப் சரியா வரும்னு தோணுச்சு. எப்படியோ என் ஜட்ஜ்மென்ட் தப்பல!” என்று சொல்லி கொடைக்கானலில் ஆஃப் ரோடிங் செய்த வீடியோவை நம்மிடம் காண்பித்தார்.  

Sponsored


மசினகுடியில் பொக்காபுரம் எனும் இடத்தில் ஒரு மலைக்கோவில் இருக்கிறது. விபூதி மலைக் கோவில் எனும் இந்த முருகன் கோவிலுக்கு வெறும் ஜீப்கள் மட்டும்தான் செல்ல முடியும். வேறு கார்களை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கரணம் தப்பினால் மரணம் என்பதான மிகப் பெரிய பள்ளத்தாக்குப் பாதை இது. இசுஸூ இந்த ரூட்டை எப்படி கடக்கப்போகிறது என்று ஆர்வமாக இருந்தோம். ஆரம்பம் முதலே அதிக டார்க்கை வெளிப்படுத்தும் V-cross இன்ஜினும், அதை கடத்த 4×4 ட்ரான்ஸ்மிஷனும் தோனி – கோலிபோல கூட்டணி வைத்துள்ளதால், எவ்வளவு பெரிய மேடு வந்தாலும், 'ஜஸ்ட் லைக் தட்' என கடந்துவிட்டது. 

மசினகுடி செல்லும் வழியில் ஆங்காங்கே நிறுத்தி போட்டோஷூட் எடுத்துவிட்டு, ஊட்டியை கடந்து மாவனல்லா அடையும்போதே பசி எடுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு வழியாக மதியம் 3:30 ரிசார்ட்டை அடைந்தோம்.

சாப்பாட்டை முடித்துவிட்டு  ரவுண்ட் அடிக்கலாம் என்று கிளம்பினோம். ரிசார்ட்டை ஒட்டி ஓடும் சிற்றோடையில் மான்கள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. செமையான க்ளிக் கிடைத்தது. மான்கள் வாழும் இடத்தில் புலிகள் நிச்சயம் இருக்கும். நாங்கள் புலிகளைத் தேடினோம். 1000-த்தில் இருவர்தான் புலி பார்க்க முடியுமாம். ``புலி பகலில் வராதுங்க. ராத்திரி அமைதியா எந்தச் சத்தமும் போடாம இருந்தா புலியைப் பார்க்கலாம்!” என திகில் கிளம்பினார் ரிசார்ட்டின் உரிமையாளர். நாங்கள் ஒரு புலிகூடப் பார்க்கவில்லை. ஆனால், புலி எங்களைப் பார்த்திருக்கலாம்.

சாயங்காலம் 'மரவகண்டி' டேமிற்குச் செல்வது எனத் திட்டம். வாகனங்களின் இரைச்சல் அதிகமாக இருந்தால், விலங்குகள் காட்டுக்குள் ஓடி விடும் என்பதால், 7 வாகனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

லோக்கல் ஜீப் ஓட்டுநர்கள் சுற்றுலாவாசிகளை ஏற்றிக்கொண்டு 'ஜீப் சபாரி' என்ற பெயரில் குறுக்கும் நெடுக்குமாய்ச் சென்றதில், காட்டு விலங்குகளைப் பார்க்கும் எங்கள் ஆசையில் மண் விழுந்தது. அழும் குழந்தைக்கு ஆறுதல் பரிசு போல இரண்டு மான்களும் ஒரு மயிலும் மட்டுமே கண்ணுக்குத் தென்பட்டன.

இரவு உணவை முடித்துக்கொண்டு, ஆள் அரவமில்லாத காட்டில் அமைதியான உறக்கத்துக்குப் பின் மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன், மசினகுடிக்குப் பிரியாவிடை கொடுத்தோம். இசுஸூ பிக்கப் எங்களை கோவையில் டிராப் செய்தது. Trending Articles

Sponsored