வாழ்வில் நாம் இழக்கக் கூடாதது எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStorySponsored`உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களைப் பேணி, பாதுகாத்து வையுங்கள்; முதுமைக் காலத்தில் அவை உங்களுக்கு சுகமான ஒரு மெத்தையை உருவாக்கித் தரும்’ - இப்படிக் குறிப்பிடுகிறார் அமெரிக்க நாவலாசிரியரும் நாடக ஆசிரியருமான பூத் டார்க்கிங்டன் (Booth Tarkington). உண்மையில் அழகான விஷயங்கள் என்பது பணமோ, சொத்தோ அல்ல; இனிமையான நினைவுகளும் தருணங்களும்தான். அவற்றை நாம் நினைத்து நினைத்துக் கொண்டாடாவிட்டால், அவை நம்மைக் கடந்து போய்விடும். அதை நாம் மொத்தமாக இழந்துவிடுவோம். ஓய்வு காலத்தில், முதுமையில் அந்தத் தருணங்களில்லாமல் கொஞ்சமே கொஞ்சம்கூட நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இது ஒருபுறமிருக்கட்டும்... முதுமையை ஒரு நோய்மையாகக் கருதி விலகி ஓடுகிறவர்கள்தாம் நம்மில் அநேகம் பேர். அயலார், முன்பின் அறிமுகமில்லாத முதியவர்களை விட்டுவிடுவோம். நம் வீட்டிலேயே இருக்கும் பெரியவர்களின் குரலுக்கு செவி சாய்ப்பவர்களேகூட இங்கே குறைவு. முதுமையைக் காரணம் காட்டி அவர்களைத் தனிமைப்படுத்துவது, வேறெங்காவது உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைப்பது, முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவது... இவையெல்லாம் நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள். ஆனாலும், முதியோருக்கு இரங்கும் நல்ல உள்ளங்களும் இங்கே இருக்கத்தான் செய்கின்றன. இந்த இரு விஷயங்களையும் இணைக்கிற புள்ளியாக இருக்கிறது இந்தக் கதை... 

அமெரிக்காவின் நியூயார்க் நகரம். நள்ளிரவு நேரம். ஒரு கால் டாக்ஸி டிரைவர் ஒரு வீட்டின் முன்னால் தன் காரை நிறுத்தினார். தான் சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கிறோமா என்பதை, தன் மொபைல்போனில் குறிப்பிட்டிருந்த முகவரியோடு வைத்து சரிபார்த்துக்கொண்டார். பிறகு, மெதுவாக கார் ஹாரனை அடித்தார். அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வருவதாகத் தெரியவில்லை. தன் மொபைல் போனில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு கால் போட்டார். யாரும் எடுத்துப் பேசவில்லை. மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. வேறு எந்த டிரைவராக இருந்தாலும், அந்த இரவு நேரத்தில் கால் டாக்ஸிக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆர்டரை கேன்ஸல் செய்துவிட்டு, வேறு வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள். அந்த டிரைவர் ஓர் இளைஞர். கொஞ்சம் பொறுமைசாலி. காரைவிட்டு இறங்கினார். ஜன்னலிலிருந்து தெரிந்த சிறு வெளிச்சத்தைத் தவிர, வீடு இருள் சூழ்ந்திருந்தது. 

Sponsored


Sponsored


டிரைவர், `உள்ளேயிருக்குறவங்களுக்கு நம்ம உதவி ஏதாவது தேவைப்படுமோ?’ என்று நினைத்தார். கதவை மெள்ளத் தட்டினார். உள்ளேயிருந்து ஒரு பெண்மணியின் தளர்ந்த குரல் கேட்டது... ``ரெண்டே நிமிஷம்... இதோ வந்துர்றேன்...’’ 

டிரைவர் காத்திருந்தார். சில நிமிடங்களில் கதவு திறந்தது. அவர் ஒரு முதிய பெண்மணி. வயது எப்படியும் எழுபத்தைந்தைத் தாண்டியிருக்கலாம் என்பதுபோல, முகத்திலும் உடலிலும் சுருக்கங்கள். அவர், டிரைவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். இழுத்துப் போகும்படியான ஒரு சின்ன சூட்கேஸைப் பிடித்திருந்தார். அந்த டிரைவர் சூட்கேஸை வாங்கிக்கொண்டார். மூதாட்டி, அவரின் தோளைப் பிடித்துக்கொண்டு மிக மெதுவாக எட்டுவைத்து நடந்தார். அவரால் ஓரடியைக்கூட சீராக எடுத்துவைக்க முடியவில்லை. நடக்கும்போது மூட்டுவலியால் அவர் துடிக்கிறார் என்பதும் அந்த இளைஞருக்குத் தெரிந்தது. ஆனால், முதிய பெண்மணியின் நடை வேகத்துக்கு ஈடு கொடுத்து மிக மெதுவாக அவரும் எட்டுவைத்து நடந்தார். 

``உங்க அன்புக்கு ரொம்ப நன்றி’’ என்றார் மூதாட்டி. 

``அது பரவாயில்லை. நான் என்னோட பேசஞ்சர்களை இப்படித்தான் நடத்துவேன். இது என் அம்மா எனக்குக் கத்துக் கொடுத்தது.’’ 

``ஓ... உங்க அம்மா நல்லா இருக்கணும்...’’ 

இதைக் கேட்டு டிரைவர் சிரித்துக்கொண்டார். முதிய பெண்மணி காருக்குள் ஏற உதவி செய்தார். அவருடைய சூட்கேஸை டிக்கியில் வைத்தார். தன் இருக்கையில் அமர்ந்து, தன் மொபைலை எடுத்தார். அந்த மூதாட்டியை இறக்கிவிடவேண்டிய முகவரியை மனதில் பதித்துக்கொண்டார். ``கிளம்பலாமா மேடம்?’’ என்றார். 

``போகலாம்... ஆனா, எனக்காக நீங்க டவுண்டவுன் வழியாகப் போக முடியுமா?’’ 

``அது சுத்து வழியாச்சே மேடம்?!’’ 

``எனக்கும் அது தெரியும். எனக்கு ஒண்ணும் அவசரமில்லை. டவுண்டவுன்ல சில இடங்களை நான் திரும்பப் பார்க்கவேண்டியிருக்கு. ப்ளீஸ்...’’ 

டிரைவர் ஒரு கணம் அந்த மூதாட்டியின் தளர்ந்த முகத்தைப் பார்த்தார். பிறகு ``நீங்க சொல்ற வழியிலேயே போகலாம் மேடம்’’ என்றார். மூதாட்டி வழிகாட்ட, அந்த வழியில் காரைச் செலுத்திக்கொண்டு போனார் டிரைவர். முதிய பெண்மணி ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொன்னார். கார் கண்ணாடியை இறக்கிவிட்டுவிட்டு, ஒரு பெரிய கட்டடத்தைப் பார்த்தார். யாரிடமோ சொல்வதுபோல டிரைவரிடம் சொன்னார்... ``இந்த ஆபிஸ்லதான் நான் வேலை பார்த்தேன். லிஃப்ட் ஆபரேட்டர் வேலை. ஒரு நாளைக்கு எத்தனைவிதமான மனுஷங்களைப் பார்ப்பேன் தெரியுமா? அது ஒரு காலம்...’’ அவர் கண்கள் கனவில் மிதப்பது தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு கிளம்பச் சொன்னார். அடுத்து, அவர் காரை நிறுத்தச் சொன்ன இடம் ஒரு பழைய வீடு. 

``கல்யாணம் ஆனதுக்கப்புறம் நானும் என் கணவரும் இந்த வீட்டுலதான் 48 வருஷம் குடியிருந்தோம்... இல்லை... சந்தோஷமா வாழ்ந்தோம்...’’ அவர் கண்களில் நீர் துளிர்த்தது. கார் கிளம்பியது. இதுபோல அந்த மூதாட்டி வேறு சில இடங்களிலும் நிறுத்தச் சொன்னார்... அவரும் அவர் கணவரும் அடிக்கடி போகும் ரெஸ்ட்டாரன்ட், அவர் படித்த கல்லூரி, சிநேகிதியின் வீடு, டான்ஸ் ஆடிய ஹோட்டல்... இப்படியே இரண்டு மணி நேரங்கள் நகரின் பல இடங்களை அந்த முதிய பெண்மணி சுற்றிப் பார்த்தார். 

பிறகு சொன்னார்... ``எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நாம போகவேண்டிய இடத்துக்குப் போகலாம்.’’ 

டிரைவர் காரைச் செலுத்தி, குறிப்பிட்ட அந்த முகவரிக்கு வந்து நிறுத்தினார். காரை நிறுத்திய பிறகுதான் வாசலில் இருந்த போர்டைப் பார்த்தார். அது ஓர் இல்லம்... நோயாளிகளும், பராமரிக்க ஆளில்லாமல் அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டிருப்பவர்களும் தங்கும் விடுதி. ஆங்கிலத்தில் `Hospice’ என்று சொல்வார்கள். 

மூதாட்டி மெதுவாக காரிலிருந்து இறங்கியபடியே சொன்னார்... ``என்ன பார்க்குறீங்க... எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை. இனிமே தனியா என்னால இருக்க முடியாதுனுதான் இங்கே வந்திருக்கேன்.’’ 

அதற்குள் அந்த கட்டடத்துக்குள்ளிருந்து இரண்டு பணியாளர்கள் காரை நோக்கி வந்தார்கள். அவர்களில் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த வீல் சேரில் முதிய பெண்மணியை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தபடியே மூதாட்டி கேட்டார்... ``நான் உங்களுக்கு எவ்வளவு குடுக்கணும்னு நீங்க சொல்லவே இல்லியே?’’  

``ஒண்ணும் குடுக்க வேண்டாம்.’’ 

``ரெண்டு மணி நேரத்துக்கும் மேல என்னை கார்ல கூட்டிக்கிட்டு சுத்தியிருக்கீங்க. ஒண்ணும் வேணாம்னு சொல்றீங்களே?’’ 

``அதை வேற பயணிகள்கிட்ட வசூல் செஞ்சுக்குறேன் மேடம்’’ என்ற டிரைவர், அந்த முதிய பெண்மணியை மென்மையாக அணைத்துக்கொண்டார். 

``ரொம்ப அற்புதமான நிமிடங்களை எனக்கு மீட்டுக் கொடுத்ததுக்கும், எனக்காக நேரம் செலவழிச்சதுக்கும் ரொம்ப நன்றி’’ புன்முறுவலோடு சொன்னார் மூதாட்டி. 

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு காருக்குத் திரும்பினார் டிரைவர். அந்த விடுதியின் கதவு அறைந்து சாத்தப்படுவது கேட்டது. அந்த இளம் டிரைவருக்கு அந்தச் சத்தம், ஒரு மனுஷியின் வாழ்க்கைக் கதவை இறுக மூடுவதைப்போலவே தோன்றியது. 

***  
 Trending Articles

Sponsored