ஒரே மாதத்தில் 3 யானைகளை காவு வாங்கிய பன்றிக்காய்! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 18



Sponsored



ஒவ்வொரு உயிரும் தன்னுடைய அடுத்த தலைமுறையை உருவாக்குவதிலும், அதைப் பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்தும். அப்படித்தான் யானைகளும். தன் இனத்தைப் பெருக்குவதிலும் அவற்றை வழிநடத்துவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துகின்றன. யானைகளில் பெண் யானைகளே குடும்பத்தை வழிநடத்துகின்றன. யானையே ஆனாலும் அதுவும் ஒரு தாய் என்பதை மறந்த மனித இனம் அதற்குப் பரிசாக அளித்ததுதான் பன்றிக்காய். 

தாய் யானை இறந்த (முந்தைய அத்தியாயத்தில்) அடுத்த நாள் ஜூன் மாதம் 5 தேதி சேரம்பாடி வனசார பகுதியில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே தாய் யானை இறந்திருக்கிற நேரத்தில் மேலும் ஒரு குட்டி யானை இறந்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் பதறுகிறார்கள். உள்ளூர் கால்நடை மருத்துவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். இறந்து இரண்டு நாட்களுக்கு மேலான நிலையில் குட்டி யானையின் உடல் உருமாறிக் கிடந்திருக்கிறது. குட்டி யானையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வருகிறது. சிறுத்தை தாக்கியிருக்கலாம் எனக் கால்நடை மருத்துவர் வனத்துறையிடம் தெரிவிக்கிறார். குழுமியிருந்த மக்கள் நேற்று இறந்து போன யானையின் குட்டி எனச் சொல்கிறார்கள். மருத்துவரும், வனத்துறையினரும் “இருக்கலாம்” எனச் சொல்லிவிட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து புதைத்துவிட்டுச் செல்கிறார்கள். உண்மையில் இறந்தது ஏற்கனவே இறந்த தாய் யானையின் குட்டியாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த தாய் யானை ஏற்கனவே தன்னுடைய முழு பலத்தையும் இழந்துவிட்டது. அப்படியான நேரத்தில் சிறுத்தையை எதிர் கொண்டிருக்கலாம். சிறுத்தையை எதிர்க்கவோ, அதனிடமிருந்து குட்டியைக் காப்பாற்றவோ முடியாமல் போயிருக்கலாம். ஏற்கனவே உடல் வலிமையை இழந்து உருவம் தொலைத்திருந்த தாய் யானை, குட்டி யானை இறந்ததும் தன்னுடைய மொத்த மன வலிமையையும் இழந்துவிடுகிறது. அதன் பிறகே ஊருக்குள் வந்து இறந்து போனது. இப்படித்தான் பன்றிக்காய் தன்னுடைய இரண்டாவது உயிரையும் காவு வாங்கியது. எங்கே தவறு நடந்தது, பன்றிக்காயை யார் பயன்படுத்தியது என்கிற எந்தத் தகவலும் தெரியவில்லை.

Sponsored


Sponsored


யானைக்கு எதிரான பன்றிக்காய் யுத்தம் அதோடு முடிந்து விடவில்லை. அதே மாதத்தில் பன்றிக்காயின் மரண வலையில் இன்னொரு யானையும் சிக்கியது. கடந்த மாதம் 12 தேதி காலை 6 மணியளவில் கூடலூர் தாலுகா சேரம்பாடி  கண்ணம்பாடி பகுதியில் யானை ஒன்று தேயிலைத் தோட்டத்தில் விழுந்து கிடந்தது. இந்த யானைக்கும் வாயில் காயம். அந்தத் தகவலை  ஊர் மக்கள் சேரம்பாடி ரேஞ்சர் மனோகரனிடம் தெரியப்படுத்துகிறார்கள். மனோகரன், கூடலூர் வன அதிகாரி மற்றும் முதுமலை கள இயக்குநர் என எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறார். மழை நேரம் என்பதால் மழையில் நனைந்தபடி யானை உயிருக்குப் போராடியது. ஆனாலும் அன்றைய தினம் காலை 11 மணி வரை எந்த மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. பதினோரு மணிக்கு மேல் சேரம்பாடி பகுதியை சேர்ந்த  கால்நடை மருத்துவர் திரு பிரபு என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து யானைக்கு சிகிச்சையளிக்கிறார்.  முதுமலையில் வனக் கால்நடை மருத்துவர்கள் இல்லையென்பதால் பக்கத்திலிருக்கிற கேரளா மாநிலம் முத்தங்கா வன உயிரின சரணாலத்திலிருந்து இரண்டு மருத்துவர்கள் வந்து யானைக்கு சிகிச்சையளித்திருக்கிறார்கள். யானையின் தாடை, வாய், நாக்கு என எல்லா பாகங்களும் சிதைந்திருப்பதைப் பார்க்கிற கேரளாவைச் சார்ந்த மருத்துவர்கள் யானைக்கு முதலில் குளுக்கோஸ் கொடுத்திருக்கிறார்கள். யானை மேற்கொண்டு எழுத்தால் மட்டுமே மற்ற சிகிச்சையளிக்க முடியும் எனச் சொல்கிற கேரள மருத்துவர்கள் பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். மற்ற உதவிகளை உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் கவனித்திருக்கிறார்கள். ஆனாலும் யானைக்கு சிகிச்சையளிக்கிற அனுபவம் வாய்ந்த எந்த வனக் கால்நடை மருத்துவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. 

முதுமலையில் தனியாக கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால், முதுமலையைச்  சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள விலங்குகளுக்கு ஏதேனும் நோய்வாய்ப்பட்டால் கோவையிலுள்ள வனக்  கால்நடை மருத்துவர் மனோகரனை வரவழைத்து சிகிச்சையளிக்கப்படும். மனோகரன் இதற்கு முன்னரே முதுமலையில் பணியாற்றியவர். முதுமலை பகுதியில் யானைகளுக்கு சிகிச்சையளிக்கிற அனுபவம் கொண்டவர் திரு மனோகரன் மட்டுமே. மனோகரனின் அலுவலகம் கோவையில் இருக்கிறது. கோவையிலிருந்து 133 கிலோ மீட்டர் தொலைவில் முதுமலை இருக்கிறது. மனோகரன் முதுமலைக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் ஆகும். 12 தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  மனோகரனால் அன்று கூடலூருக்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் மனோகரன் நீலகிரி, ஆனைமலை, சாடிவயல் யானைகள் முகாம் என மூன்றையுமே கவனித்து வந்தார். வேலைப் பளு காரணமாக மனோகரனால் உடனடியாக கூடலூருக்கு செல்ல முடியவில்லை. வனம், விலங்குகள் குறித்து தமிழக அரசு அக்கறை எடுத்து கொண்டதாக தெரியவில்லை. அப்படி அக்கறை எடுத்திருந்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் யானைகள் வசிக்கிற மூன்று முக்கிய பகுதிகளுக்கு ஒரே ஒரு வனக் கால்நடை மருத்துவரை நியமித்திருக்காது. 

முந்தைய அத்தியாயம் 

இந்த நேரத்தில் நீலகிரி மாவட்ட கால்நடை மருத்துவர்கள் குழு தொடர்ந்து யானைக்கு சிகிச்சையளிக்கிறார்கள். இதற்கு முன்பு இறந்த யானையைப் போலவே இந்த யானையின் தாடை, வாய், நாக்கு என பெரும்பாலான பகுதிகள் சிதைந்திருந்தது. அதற்குள் முதுமலை யானைகள் முகாமில் இருக்கிற அனுபவம் வாய்ந்த கிருமாறன் சம்பவ இடத்திற்கு வந்து சேருகிறார். மருத்துவர்களோடு சேர்ந்து யானையை எப்படி எழுப்பி நிற்க வைப்பது என ஆலோசிக்கிறார்கள். கும்கி யானையை வைத்து யானையைத் தூக்கி நிறுத்த முடியுமா என ஆலோசிக்கிறார்கள். அதற்கு அடிபட்டிருக்கிற யானை ஒத்துழைக்க வேண்டும், ஆனால் அந்த நிலையில் யானை இல்லை என்பதை உணர்ந்த மருத்துவக் குழு யானைக்கு வேண்டிய முதலுதவியைச் செய்கிறார்கள். அன்றைய தினம் தார்பாய் கொண்டு யானைக்குக் கூரை அமைத்து மழையிலிருந்து யானையை வனத்துறை காப்பாற்றுகிறது. ஆனாலும் யானையின் உடல்நிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. வனத்துறையும், மருத்துவர் குழுவும் யானையின் உடல்நிலையைக் கவனித்து கொண்டேயிருக்கிறார்கள். எந்த முன்னேற்றமும் இல்லையென்பதால் டென்ட் அமைத்து அதே இடத்தில் தங்குகிறார்கள். அடுத்த நாளும் யானைக்குச் சிகிச்சை தொடர்ந்து நடக்கிறது. ஆனால் யானையின் உடல் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அன்றைய தினம் காலை, வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் கூடலூருக்கு கிளம்பிச் செல்கிறார். மனோகரன் சம்பவ இடத்திற்குச் சென்ற பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே யானை இறந்து விடுகிறது. யானை இறப்பிற்கான காரணம் இந்த முறையும் மருத்துவர்களால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. பிரேதபரிசோதனையின் அறிக்கை கிடைத்தால் மட்டுமே சரியான காரணத்தைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்தார். அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தி யானையைப் புதைத்துவிட்டு எல்லோரும் சென்று விடுகிறார்கள். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பன்றிக்காய் பாதிப்பால் இறந்து போன 3 யானைகளின் பட்டியலில் இந்த யானையும் சேர்ந்தது. உள்ளூர் மக்கள் யானையின் இறப்பிற்கு பன்றிக்காய்தான் காரணமெனச் சொல்கிறார்கள். யானை, பன்றிக்காய் மறைத்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழத்தை எந்தத் தோட்டத்தில் வைத்துக் கடித்தது என்பதைக் கண்டறிந்தால் மட்டுமே காரணமானவர்ளைக் கண்டறியமுடியும். அது அவ்வளவு சாதாரணமான வேலை இல்லை என்பதை வனத்துறை அறிந்திருந்தது. யானை விழுந்துக் கிடந்த இடத்தை வைத்து மட்டுமே யார் வைத்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. வேறு எங்கோ பாதிக்கப்பட்ட யானை நடக்க முடியாது என்கிற நிலையில்தான் வேறு இடத்தில் வந்து விழுந்து விடுகிறது.

இப்போது முதுமலை யானைகள் முகாமிற்கு நம் கவனத்தைத் திருப்பியாக வேண்டும். ஏனெனில் 24 யானைகள் இருக்கிற முகாமில் வன கால்நடை மருத்துவர்களோ, கால்நடை மருத்துவர்களோ யாருமே இல்லை. இப்படியான காலகட்டத்தில் யானைகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால் இன்று காட்டு யானைகளுக்கு ஏற்படுகிற நிலையே கும்கி யானைகளுக்கும் நிகழும் என்பதை வனத்துறை அறிந்திருந்தது. அதிலும் திடீரென மதம் பிடிக்கிற யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்திய பிறகே கட்டுக்குள் கொண்டு வர முடியும். 

 கால்நடை மருத்துவர் இல்லாத  ஒரு சூழ்நிலையில்தான் முதுமலையில் இருக்கிற வசீம் யானைக்கு மதம் பிடித்தது

தொடரும்...


 



Trending Articles

Sponsored