கேம்பஸ் இன்டர்வியூவுக்குக் காத்திருக்க வேண்டாம்... ஐடியா இருந்தால் உதவி ரெடி!ல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கேம்பஸ் இன்டர்வியூ நடக்குமா நடக்காதா என்ற கனவோடு காத்திருக்க, `வளாக நேர்காணலுக்காகக் காத்திருக்காதே... தொழில் ஐடியாவோடு வந்தால் உதவ நாங்க தயார்' என்று களம் இறங்கியிருக்கிறது, இறையன்பு ஐ.ஏ.எஸ் தலைமையில் இயங்கும் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம். 

Sponsored


கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாமின் தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஆடவர் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ``மாணவர்கள், கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தொழில் தொடங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகளும் நல்ல சூழ்நிலையும் காணப்படுகின்றன. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். நீங்கள் தொழில் தொடங்க, அரசும் பல்வேறு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன. அதற்கான நிதி உதவி செய்யவும் ஏராளமான நிறுவனங்கள் காத்திருக்கின்றன. தமிழக அரசும் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்குத் தேவையான கடனும் மானியமும் வழங்கிவருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 

Sponsored


Sponsored


``பொறியியல் படிப்புப் படித்தும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு நிறுவனங்கள் இல்லை என்பதுதான். இதை மாற்றும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 88 அரசுக் கல்லூரிகளிலும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி முகாமைத் தொடங்கியிருக்கிறோம். 

மாணவர்கள் வளாகத் தேர்வில் வேலைவாய்ப்பைப் பெறுவதையே குறிக்கோளாகக்கொண்டிருக்காமல், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் களம் இறங்கிட வேண்டும். பணி செய்வதைவிட பணியாளர்களை உருவாக்குவதையே குறிக்கோளாகக்கொள்ளுங்கள். குறிக்கோளை அடைய, படிக்கும்போதே தொழில்முனைவோராக மாறுவதற்கான ஆர்வத்தோடு இருங்கள். படிக்கும்போது ஏதேனும் தொழிலுடனும், தொழில்நிறுவனத்துடனும் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஒன்றிரண்டு ஆண்டுகளில் அந்தத் தொழிலின் வாடிக்கையாளர்கள் யார் என்பதையும், அவர்களின் தேவையையும் அடையாளம் கண்டுகொள்வீர்கள். அதன் பிறகு, எந்தவிதமான அச்சமும் இல்லாமல் தொழில் நிறுவனத்தைத் தொடங்கலாம். படிக்கும் காலத்திலேயே தொழில் ஐடியா இருந்து தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தை அணுகினால், அனைத்துவிதமான உதவிகளைச் செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், இதுவரை 1,90,000 பேருக்குப் பயிற்சி வழங்கியிருக்கிறது. இதில் ஏராளமான குடும்பத் தலைவிகளும் அடக்கம். 

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில், முதல்முறையாக 88 அரசுக் கல்லூரிகளிலும் தொழில்முனைவோர் விழிப்புஉணர்வுப் பயிற்சி முகாம்களைத் தொடங்கியிருக்கிறோம். இந்தப் பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்துகொண்டால், தொழில் நிறுவனத்தைத் தொடங்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முழு விவரங்களும் வழங்கவுள்ளோம். மேலும், வெற்றிகரமான தொழில்முனைவோரிடமும், தொழிற்துறை சார்ந்த நிபுணர்களிடமும் நேரிடையாகக் கலந்துரையாடலாம். மாணவர்கள் பத்துப் பேர் முன்வந்து தொழில் தொடங்கினால், 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் இறையன்பு ஐ.ஏ.எஸ். 

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டிவரும் ஷியாம்சேகர், `` `இன்னும் பத்து ஆண்டுகளில், தற்போது வேலை செய்துவருபவர்களில் 70 சதவிகிதம் பேர் தங்களுடைய வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்க முன்வருவார்கள்' என்கிறது சர்வதேச ஆராய்ச்சி. 90 சதவிகித வேலை, தொழில்முனைவோரால் உருவாக்கப்படுபவைதான். தொழில்முனைவோர், ஆரம்பத்தில் ரிஸ்க் எடுப்பார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்குச் சமுதாயத்தில் தனி அடையாளம் கிடைக்கும். உங்களுடைய தொழில் ஐடியா, சமுதாயத்துக்கு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கவும் வாய்ப்புள்ளது. அதை எப்படிச் சந்தைப்படுத்துவது என்பதை மட்டும் யோசியுங்கள்" என்றார்.Trending Articles

Sponsored