கை இல்லை; கால் இல்லை... ஆனால், போட்டோகிராபியில் அசத்தும் அஹ்மத் ஜுல்கர்னைன்!Sponsored``என் பணிகளை நானே செய்துகொள்ள என்னிடம் தனி வழி இருக்கிறது. நான் மகிழ்ச்சியோடு அதைச் செய்கிறேன்" தன் புகைப்படங்கள் குறித்தும் தன்னைக் குறித்தும் யாராவது கேட்கும்போது, சிறு புன்னகையுடன் அஹ்மத் ஜுல்கர்னைன் கூறும் வார்த்தைகள் இவை. சின்னச் சின்னத் தடுமாற்றங்களுக்கே சோர்ந்துபோய் நம்பிக்கை இழப்பவர்களுக்கு, அஹ்மத்தின் வாழ்வு நம்பிக்கையின் முடிச்சுகளை இறுக்கி, தேடலை நோக்கித் தள்ளும். 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த அஹ்மத் ஜுல்கர்னைன், ஒரு புகைப்படக் கலைஞர். தனது நேர்த்தியான புகைப்படங்கள் மற்றும் வித்தியாசமான போட்டோ ஷூட்கள் மூலம் கவனம் ஈர்ப்பவர். அஹமத்தின் புகைப்படங்களைப் பார்த்து பிரமிப்பவர்கள், அதை எடுத்தவர் யார் எனக் கேட்டு அஹமத்தைப் பார்க்கும்போது ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஆம், அஹமத் பிறவியிலேயே முழங்கைக்குக் கீழே கைகளும், இரண்டு கால்களும் இல்லாதவர். 1992-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் பிறந்த இவருக்கு, பிறவியிலேயே இந்தக் குறைபாடு இருந்துள்ளது. அவர் வளர வளர, அவரது அன்றாட வேலைகளைச் செய்வதே  அவருக்கு சிரமமாக இருந்தது. ஆனால், அஹமத் தன் பெற்றோருக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்காமல், தானே தன்னுடைய அன்றாடப்  பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். 

Sponsored


தனது உடல்சார்ந்த எந்தவித அவநம்பிக்கையும்கொள்ளாமல் வாழ்க்கையைத் தனக்குப் பிடித்தமானதாக வடிவமைத்துக்கொண்டார். தன் நண்பர்களுடன் இன்டர்நெட் கபேவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது புகைப்படம் பற்றிப் பேச்சு எழுந்துள்ளது. அதுதான் அஹமத்துக்கு புகைப்படம்குறித்த எண்ணம் தொடங்கிய கணம். அதன் பிறகு தனது விடாமுயற்சியின் வழியே கேமராவைக் கையாளத் தொடங்கி, தற்போது அசத்தலான புகைப்படங்களை எடுத்துவருகிறார். புகைப்படம் எடுப்பதோடு நிற்காமல், அதை எடிட் மற்றும் ரீ-டச் செய்வதையும் அவரே மேற்கொள்கிறார்.

Sponsored


அஹ்மத் புகைப்படம் எடுக்கும் முறையைக் காண்பவர்கள் அதிசயித்துப் பார்ப்பார்கள். தனது முகத்துக்கு நேராக கேமராவை வைத்தபடி ஆன்/ஆப் பட்டனை தனது வாயைப் பயன்படுத்தி இயக்குகிறார். தனது முழங்கையில் அதிகப்படியாக வளர்ந்துள்ள சதையைப் பயன்படுத்தி ஷட்டர் ஸ்பீடை சரிசெய்கிறார். இதைப் பார்த்து மற்ற புகைப்படக்காரர்கள் அதிசயித்துப்போகிறார்கள். இவரது `DZOEL' என்ற புகைப்பட நிறுவனம் மூலம் புகைப்படம் எடுப்பதோடு நில்லாமல், புகைப்படக் கலையைப் பிறருக்குப் பயிற்றுவிக்கவும் செய்கிறார். பல்வேறு இடங்களுக்குப் பயணித்து புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக அவரே ஒரு வாகனத்தையும் உருவாக்கியுள்ளார். தனது தேவைக்கேற்ப வாகனத்தை டிசைன் செய்த அஹமத், அந்த வண்டியை தனது நண்பர்கள் மற்றும் பெற்றோரின் உதவியுடன் உருவாக்கி முடித்துள்ளார். 

தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது அஹமத் ஜுல்கர்னைனின் இயல்பு. `இவ்வளவு தன்னம்பிக்கையுடன் எப்படி இருக்கிறீர்கள்?' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கேட்டதற்கு, அஹமத்  ``மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்கிறார். 

அவை,

1) சூழ்நிலைகளை எளிதில் தாண்டிச் செல்ல வேண்டும். மோசமான சூழ்நிலைகள் காரணமாக முடங்கிப்போகக் கூடாது. அவற்றைக் கடந்துச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

2) உங்களிடம் எலுமிச்சம்பழம் இருக்கிறது எனக் கவலைப்படாதீர்கள். அதைக் கொண்டு எலுமிச்சம் பழச்சாறு தயார்செய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்களிடம் இருப்பதை வைத்து எதை உருவாக்க இயலுமோ, அதைச் சிறப்பாகச் செய்யுங்கள். 

3) நம்பிக்கையுள்ளவராக இருங்கள். சிறந்தவற்றையே நம்புங்கள். எப்போதும்  உங்கள்  நம்பிக்கையின் வெளிச்சம் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிறந்த விஷயங்களை நம்புங்கள். அதை நோக்கி உழையுங்கள். 

அஹமத் ஜுல்கர்னைன் போல தன்னம்பிக்கையுடைய பலரும் `குறைபாடு' என்ற ஒரு வார்த்தையை தேவையில்லாத ஒன்றாக்கி, அனைத்தையும் அசாத்தியத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கை ஔியில் எல்லோருக்குமான விடியலும் இருக்கிறது. Trending Articles

Sponsored