சஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன?Sponsoredஅந்தப் பகுதியில் சாதாரணமாகப் பகலில் நிலவும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அந்த வெப்பநிலையில் நிற்பதே கொஞ்சம் சிரமமான விஷயம். அந்த வெப்பத்தில் அமர்வது என்றால் எப்படி இருக்கும்... அமரும் இடம் சரக்கு ரயிலின் மேல்பகுதியாக இருந்தால்... அந்த ரயிலில் இரும்புத் தாத்துகள் நிரம்பிய மணல் இருந்தால்... அந்த ரயில் பயணிக்கும் இடம் பாலைவனமாக இருந்தால்... சரக்கு ரயிலில் உள்ள மணலில் அமர்ந்து பயணிப்பவர்களின் உடல்நிலையும், மனநிலையும் எப்படி இருக்கும். ஆம், வாழ்ந்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மக்களின் அந்த முகமானது பெரும் சோகத்தையே வெளிக்காட்டுகிறது.

வடமேற்கு ஆப்பரிக்காவில் உள்ள ஒரு நாடு மவுரித்தேனியா (Mauritania). இங்கு விவசாயம் செய்ய ஏற்ற நிலப்பகுதி வெறும் 0.2 சதவிகிதம்தான். மீதநிலம் பாலைவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மவுரித்தேனியாவுக்கு மேற்கே அட்லான்டிக் பெருங்கடல், தென்மேற்கில் செனிகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சஹாரா ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. மவுரித்தேனியாவில் மூர் மற்றும் பெர்பர் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Sponsored


மவுரித்தேனியா ரயில் பாதையானது, 1963-ம் ஆண்டில் 704 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டது. உலகின் மிக நீளமான ரயில்களில் மிகவும் முக்கியமானது. மொத்த ரயிலின் நீளம் மட்டும் 3 கி.மீ. இந்த ரயிலின் பெயர் சஹாரா ரயில். ரயிலானது நொய்டிபோ (Nouadhibou)-க்கு வருவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மவுரித்தேனியாவின் நகரங்களுள் ஒன்றான நொய்டிபோவுக்கு அருகில் இரும்புத் தாதுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இரும்புத் தாதுகள் இருக்கும் இடம் சஹாரா பாலைவன எல்லைக்குள் அமைந்துள்ளது. அதைச் சுமந்து செல்லும் வேலைக்காகத்தான் நீளமான ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், அங்கு வசிக்கும் மக்களுக்காகச் சரக்கு ரயிலுடன், மனிதர்கள் பயணிக்கும் பெட்டிகள் கூடுதலாகவும் இணைக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படாமலும் இருக்கும். மவுரித்தேனியா எல்லைகளில் ஒன்றான அட்லான்டிக் கடற்கரையில் நொய்டிபோ துறைமுக நகரம் அமைந்துள்ளது. இங்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். அதனால் இங்கே மீன்பிடித்து 650 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூய்ரட்(Zouerat) போன்ற நகரங்களுக்கு மீன்களைக் கொண்டு போகிறார்கள்.

Sponsored


Image source : https://www.instagram.com/victor_eg/

மீன் பிடித்துக்கொண்டு வரும் மக்கள் அதைச் சரக்கு ரயிலில் ஏற்றி நகருக்குக் கொண்டு வருகின்றனர். அவர்கள் ஏற்ற ஆரம்பித்ததில் இருந்து முடிக்கும் வரை ரயில் காத்திருக்கும். மீன்களை ஏற்றும் பெட்டியில் இரும்புத்தாது மணல் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். அதனால் இவர்கள் அந்த சுடுமணலின் மீதுதான் ஏறி பயணம் செய்தாக வேண்டும். மேலும் ரயில் செல்லும்போது மணலின் தூசியும், பாலைவனக் காற்றின் வேகமும் இவர்களுக்குப் பல உடல் குறைபாடுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. 1970- 1980-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக அதிகப்படியான மக்கள் நோவாகோட் (nouakchott) நகரைவிட்டு கிராமப்புறம் நோக்கிக் குடிபெயர்ந்தனர். நொய்டிபோ துறைமுகத்தில் இருந்துதான் அனைத்து நகரங்களுக்கும் மீன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மீன்களைக் கொண்டு செல்பவர்கள் சில நேரங்களில் வெப்பம் தாங்காமல் இறந்தும் போகக் கூடிய வாய்ப்புகளும் அதிகம். தினம் தினம் தங்களின் பயணத்தை உயிரைக் கையில் பிடித்தபடியே ரயிலுடன் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் அந்த ரயில் சரக்குகளுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களையும் தன்மீது அமரவைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.

நொய்டிபோவில் மீன்பிடிக்கும் மக்களுக்கு இந்த ரயில்தான் வெளி உலகை தம்முடன் இணைக்க இருக்கும் ஒரே வாகனம். ரயில்தான் இம்மக்களுக்கான முதுகெலும்பாக இருக்கிறது. இதுதவிர மவுரித்தேனியாவின் பொருளாதாரத்திற்கான அடித்தளமும் இந்த ரயில்தான். இதன்மூலம் கிடைக்கும் இரும்புத்தாது மணலால்தான் நாட்டின் பாதி தேவையை அரசு நிறைவேற்றுகிறது. ஆனால் இம்மக்களுடைய தேவையை நிறைவேற்றத்தான் இங்கு யாருமில்லை.
 Trending Articles

Sponsored