டிரைவிங்கின்போது 5 நொடி மட்டும் தூங்கியிருக்கிறீர்களா? அது ஏன்? தவிர்ப்பது எப்படி? #MicroSleepSponsoredநுண்தூக்கம், அதாவது `மைக்ரோ ஸ்லீப்' (Micro sleep) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பள்ளியில் மதிய நேரம் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது கண்கள் நம்மையறியாமல் மூடும், திடீரென ஏதாவது சத்தம் கேட்டு விழிப்பு வரும், மறுபடியும் அதே தூக்கம். சிலருக்கு வாகனங்கள் ஓட்டும்போது கூட இப்படி ஆகும். இந்தத் தூக்கத்துக்குப் பெயர்தான் நுண்தூக்கம். வெறும் சில நொடிகள் மட்டுமே ஏற்படும் இந்தத் தூக்கம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்றால், பல உயிர்களைப் பலி வாங்கும் என்றால் நம்பமுடிகிறதா? செர்னோபில் அணு உலை வெடிப்பு, சேலஞ்சர் விண்கல வெடிப்பு மற்றும் கணக்கிட முடியாத பல விமான விபத்துகளுக்கு நுண்தூக்கமும் ஒரு காரணி என்பது உண்மை.

நீங்கள் தூங்கினீர்கள் என உங்கள் மனம் நம்பவேண்டும் என்றால் உங்கள் தூக்கம் குறைந்தபட்சம் 2 நிமிடங்களாவது நீடிக்க வேண்டும். ஆனால், நுண்தூக்கம் நீடிப்பதோ வெறும் 10 நொடிகளுக்குள்ளாகவேதான். எனவே, நீங்கள் தூங்கினீர்கள் என நம்ப உங்கள் மனம் மறுக்கும். மீண்டும் மீண்டும் அதே போன்ற நுண்தூக்கம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும், ஆனால் உங்களைப் பொறுத்தவரை நீங்கள் விழிப்புடன்தான் இருந்தீர்கள். 

Sponsored


2014-ம் ஆண்டு சில பங்கேற்பாளர்களை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒரு கணினித் திரையின் முன் அமர வைத்து திரையில், உள்ள நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆய்வுக்கு முன்னரே பங்கேற்பாளர்கள் நன்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இருந்தும் சில மணி நேரம் வேலை செய்யும் போது, தொடர்ந்து அவர்களுக்கு நுண்தூக்கம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. சராசரியாக 6 நொடிகள், மணிக்கு 79 முறை நுண்தூக்கம் நிகழ்ந்தது பங்கேற்பாளர்களுக்கு. நுண்தூக்கத்தின் போது, மொத்த மூளையும் தூங்குவதில்லை, மூளையின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே சோர்வடைந்து தூக்கத்துக்கு ஆளாகின்றது. 

Sponsored


நுண்தூக்கம் எதனால் ஏற்படுகிறது, எப்போது ஏற்படுகிறது?

உடலுக்கும் மூளைக்கும் போதிய அளவு உறக்கம் இல்லாததே நுண்தூக்கத்துக்கான மிக முக்கியமான காரணம். தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களும், மூச்சுத்திணறலால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் நுண்தூக்கம் அடிக்கடி ஏற்படும். இது குறிப்பாக நடுஇரவு மற்றும் அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்திலும், மதியம் மற்றும் மாலைக்கு இடைப்பட்ட நேரத்திலும் அதிகம் நிகழும். சலிப்பான, பிடிக்காத அல்லது ஆர்வமில்லாமல் ஒரு வேலையைச் செய்யும் போது நுண்தூக்கம் ஏற்படும்.

தவிர்ப்பது எப்படி?

நுண்தூக்கம் வராமல் தவிர்க்க ஒரே வழி போதிய அளவு உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தருவதே. ஆனால் அதையும் மீறி போர் அடிக்கிற, ஒரே வேலையைச் செய்யும் போது நுண்தூக்கம் ஏற்படும். வாகனம் ஓட்டும் பொழுது பாட்டு கேட்டுக் கொண்டே ஓட்டுவது, அல்லது சக பயணியுடன் பேசிக் கொண்டே ஓட்டுவது நல்லது. இதனால்தான் இரவு நேரப் பயணங்களில் ஓட்டுநர் அருகில் அமர்பவரைத் தூங்காமல் ஏதாவது பேசிக் கொண்டேயிருக்க அறிவுறுத்துகின்றனர். உடல் இயக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கலாம். இவை நுண்தூக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். 

உங்கள் வேலை எந்த மாற்றமுமில்லாத, தொடர்நிகழ்வுகளால் ஆனது என்றால், அதை எப்படியாவது மாற்ற முயலுங்கள். உங்கள் கிரியேட்டிவிட்டியைச் சேர்த்து பிடித்த வேலையாக மாற்றுங்கள். அல்லது சீரிய இடைவெளியில் பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரியான வேலையில் இருப்பவர்கள் இரவில் நன்றாக தூங்க வேண்டும். தூங்காமல், மறுநாள் வேலைக்குப் போவது ஆபத்தை நாமே பாக்கெட்டில் எடுத்துப் போட்டுக்கொள்வது போல. 

வருடந்தோறும் நடக்கும் விபத்துகளில் 20 சதவிகிதம் விபத்துகள் நுண்தூக்கத்தினாலேயே ஏற்படுகிறது. இதோ இன்னும் கொஞ்ச தூரம்தான்,  இலக்கை அடைந்துவிடலாம் என அதை நீங்கள் உதாசீனப்படுத்தினால் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். நல்லா தூங்குங்க, மகிழ்ச்சியா இருங்க. பாதுகாப்பா வாழுங்க.Trending Articles

Sponsored