``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு!’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா



Sponsored



`பிக் பாஸ் 2' நிகழ்ச்சியில் மக்களை அதிகம் ஈர்த்த போட்டியாளர் பாலாஜி. அவருக்கும் அவர் மனைவி நித்யாவுக்கும் இடையில் வெளியே பல பிரச்னைகள் நடந்திருக்கும் சூழ்நிலையில், இருவருமே பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது, இருவரும் ராசியாகி வருவார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில்,

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று (15.7.2018) நித்யா வெளியேற்றப்பட்டுள்ளார். 

Sponsored


பாலாஜி தன்னுடைய மனமாற்றத்தை எப்படியாவது நித்யாவிடம் நிரூபித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நித்யாவைச் சுற்றிச் சுற்றி வந்தார். நித்யாவும் பாலாஜியின் மாற்றத்தை ஏற்றுக்கொள்வது போன்றே செயல்பட்டார். நேற்று நித்யா 'பிக் பாஸ்' வீட்டைவிட்டு வெளியேறியது, பாலாஜிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நித்யா வெளியேறிய பின்னர், அகம் டிவி வழியாகப் பாலாஜியிடம் அவரின் மகள் போஷிகாவைக் காண்பித்தார் கமல். தந்தை - மகள் பாசப் பிணைப்பைப் பார்த்து, 'பிக் பாஸ்' வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கண்கள் பனித்தன. பாலாஜியின் அம்மா மீனாவிடம் இதுகுறித்து பேசினோம்.

Sponsored


``நான் மறுபடியும் சொல்றேன்மா, இது ஒரு கேம் ஷோ. பர்சனல் லைஃப் வேற கேம் ஷோ வேற. அங்கே நிஜமாவே என்ன நடந்துச்சுன்னு நமக்குத் தெரியாது. அதேமாதிரி, அங்கே சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும்னும் எந்த அவசியமும் இல்லே. 100 நாளுக்குள் போஷிகாவை நிச்சயமா பாலாஜிகிட்ட காட்டுவாங்கன்னு எனக்குத் தெரியும். குழந்தையைப் பார்க்க முடியாம தவிச்சவன் கண்ணுல குழந்தையைக் காட்டினதில் ரொம்ப சந்தோஷம். நான் தினமும் 'பிக் பாஸ்' பார்க்கிறேன். வீட்டுல என் பையன் எப்படி இருப்பாரோ அப்படித்தான் அங்கேயும் இருக்கார். அவருக்கு ஒண்ணு பிடிக்கலைன்னா சட்டென கோபம் வந்துடும். கோபம் அதிகமானால் சாப்பிடாம பட்டினியா கிடப்பார்.

பாலாஜி தினமும் ஷூட்டிங் போயிட்டு வர்றவரைக்கும் நான் சாப்பிடாமல் இருப்பேன். அவர் சாப்பிட்டதுக்கு அப்புறமாகத்தான் சாப்பிடுவேன். பிக் பாஸ் வீட்டுல என்னைப் பற்றி பாலாஜி பேசலைன்னாலும் மனசுல என் மேலே அன்பு இருக்குன்னு ஒரு பக்கம் நினைச்சுக்கிறேன். இன்னொரு பக்கம், ஒரு தடவைகூட அம்மா நினைப்பே வரலையான்னு நினைச்சு கஷ்டமாகவும் இருக்கு. இந்த ஒரு மாசத்தல அவங்க ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நிச்சயம் புரிஞ்சுக்க முடியாது. மீடியா முன்னாடி நிறைய தடவை, தான் மாறிட்டதா பாலாஜி சொன்னபோதே புரிஞ்சுக்காதவங்களா இப்போ புரிஞ்சுக்கப் போறாங்க'' என சற்றே அமைதியாகும் பாலாஜியின் தாய் தொடர்கிறார்.

''அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் உண்மையா என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு மட்டும்தான் தெரியும். மன்னிக்கிறதும் மன்னிக்காததும் அவங்க அவங்க இஷ்டம். அவங்க சேர்ந்தா எனக்குச் சந்தோஷம்தான். போஷிகாவைப் பார்த்து எட்டு மாசம் ஆகிடுச்சுன்னு பாலாஜி சொன்னார். நான் பேத்தியைப் பார்த்து ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு. டிவியில் பாப்பாவைப் பார்த்ததும் இவ்வளவு வளர்ந்துட்டாளான்னு ரொம்பவே எமோஷனல் ஆகிட்டேன். ஒரு வகையில் நித்யா வெளியேறினது சந்தோஷம்தான். ஏன்னா, பாப்பா தனியா யாரோ ஒருவர் வீட்டுல இருந்தாள். இப்போ, பாப்பாவ அவ அம்மாவே பார்த்துப்பாங்க. அது பாலாஜிக்கு மட்டுமில்லே எனக்குமே சந்தோஷமா இருக்கு. இவங்க ரெண்டு பேருக்குமிடையில் உள்ள சண்டையால் குழந்தை தண்டனை அனுபவிக்கக் கூடாதும்மா. மறுபடியும் சொல்றேன்... அவங்க சேர்ந்தா சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான். எது நல்லது, கெட்டதுன்னு அவங்களுக்குத் தெரியும். நான் அவங்களுக்கு எப்பவும் இடைஞ்சலா இருக்கவே மாட்டேன்'' என்கிறார் மீனா.



Trending Articles

Sponsored