உங்கள் நினைவில் நிற்கும் பண்டிகை எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStorySponsored`வாழ்க்கை ஒரு விளையாட்டு; உண்மையான அன்பு என்பது வெற்றிக்கோப்பை’ - அமெரிக்காவைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளருமான ரூஃபஸ் வெயின்வ்ரைட் (Rufus Wainwright) வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார். அந்த வெற்றிக்கோப்பை கிடைப்பது அத்தனை எளிதான காரியமல்ல. நம்மில் பல பேருக்கு நீங்காமலிருக்கும் பழைய நினைவுகள் நெகிழ்ச்சியானதாக, அன்போடு தொடர்புகொண்டவையாகத்தான் இருக்கும். இந்தியர்களுக்கு, தீபாவளி மிக முக்கியமான பண்டிகை. 40 வயதுடைய ஒருவரிடம் போய், `உங்களால் மறக்கவே முடியாத தீபாவளி எது?’ என்று கேட்டுப் பாருங்கள். அத்தனை தீபாவளிகளில் ஏதாவது ஒன்றிரண்டுதான் அவரால் மறக்க முடியாத, கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். நமக்கு நாமேகூட இந்தக் கேள்வியைக் கேட்டுப் பார்க்கலாம். இத்தனைக்கும் ஒவ்வொரு வருடமுமே தீபாவளி நெருங்கும்போது அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிடுகிறோம்; அதற்கான மெனக்கெடல்களில் இறங்குகிறோம். ஆனால், நம் நினைவில் அப்படிக் கொண்டாடிய ஒரு தீபாவளிகூட முழுமையாக மனதில் நிற்பதில்லை. இதற்கான அடிப்படையை வெகு நுட்பமாக விளக்கும் கதை ஒன்று... 

Sponsored


நமக்கு தீபாவளி எப்படியோ, அமெரிக்கர்களுக்கு அதுபோன்றது கிறிஸ்துமஸ். அது ஒரு ரெஸ்டாரன்ட். அங்கே சில நண்பர்கள் கூடி, கிறிஸ்துமஸ் விருந்தைக் கொண்டாட்டமாக்கியிருந்தார்கள். விருந்து முடிந்தது. சிலர் கலைந்து போக, நான்கு பேர் மட்டும் களைந்து போக மனமில்லாமல் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தார்கள். தங்களுடைய பழைய நாள்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு, கொஞ்சம் கொஞ்சமாக பழைய கிறிஸ்துமஸ் நினைவுகளை நோக்கி நகர்ந்தது. தங்கள் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் எது என்பது குறித்துப் பேசினார்கள். அவர்களில் மூன்று பேர் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்க, ஒருவர் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தார். ஒருவர் அவரைப் பார்த்து கேட்டார்... ``சொல்லு ஜேம்ஸ்... உன்னோட பிரமாதமான கிறிஸ்துமஸ் எது?’’ 

Sponsored


ஜேம்ஸ் சொன்னார்... ``ஒரே ஒரு பரிசுகூட கிடைக்காத கிறிஸ்துமஸ்தான் என்னோட வாழ்க்கையில ரொம்பச் சிறந்தது.’’ இதைக் கேட்டு மற்றவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். ஜேம்ஸ் மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்... ``நான் நியூயார்க்லதான் வளர்ந்தேன். மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை அமெரிக்காவை ஆக்கிரமிச்சிருந்த நாள்கள் அவை. நாங்கள் ஏழைகள். எனக்கு எட்டு வயசு நடக்கும்போது என் அம்மா இறந்து போனார். அப்பாவுக்கு ஏதோ ஒரு வேலை... வாரத்துக்கு ரெண்டு, மூணு நாள்தான் வேலை இருக்கும். அதுவே எங்களுக்குப் பெரிய விஷயமா இருந்தது. ஒரு குட்டியூண்டு வீட்லதான் இருந்தோம். நல்ல துணிமணி, சாப்பாடெல்லாம் கிடைக்கிறதே கஷ்டமா இருந்த காலம் அது. நான் ரொம்பச் சின்னப் பையனா இருந்ததால அதெல்லாம் அப்போ எனக்குத் தெரியலை. 

எங்கப்பா ரொம்பப் பெருந்தன்மையானவர். அப்போ அவர்கிட்ட நல்ல கோட், சூட்னு ஒரே ஒரு செட்தான் இருந்தது. வேலைக்குப் போகும்போது மட்டும் அதைப் போட்டுக்கிட்டுப் போவார். வீட்டுக்கு வந்ததும் கழட்டிவெச்சுட்டு, சட்டையையோ, பனியனையோ மட்டும் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பார். அவர்கிட்ட ஒரு பாக்கெட் வாட்ச் இருந்தது. அது, அம்மா அவருக்காக ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல பரிசாகக் கொடுத்தது. சேர்ல உட்கார்ந்துக்கிட்டு, பாக்கெட் வாட்ச்ல இருக்குற செயினைக் கழட்டிடுவார். வாட்சையே பார்த்துக்கிட்டு இருப்பார். அது அவருக்கு ரொம்ப பெருமை தரக்கூடிய ஒண்ணா இருந்தது. அவரைப் பொறுத்தவரைக்கும் அது விலை மதிப்பில்லாதது. அந்த சந்தர்ப்பத்துல அவரைப் பார்க்கும்போது, அவர் அம்மாவைப் பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கார்னு எனக்குத் தோணும். 

எனக்கு 12 வயசு நடந்துக்கிட்டு இருந்தது. அப்போல்லாம் என் வயசுப் பசங்களுக்கு `கெமிஸ்ட்ரி செட்’- (Chemistry set) ங்கிறது பெரிய விஷயம். அதை வாங்கிட்டாலே, ஏதோ பெரிய விஞ்ஞானி ஆகிட்ட மாதிரி நினைப்பு வந்துடும். அந்த கெமிஸ்ட்ரி செட்டைவெச்சுக்கிட்டு சின்னச் சின்னதா சோதனைகள் பண்ணலாம்; நிறைய கத்துக்கலாம். அதோட விலை அப்போ ரெண்டு டாலர். அந்த பஞ்ச காலத்துல அது மிகப் பெரிய தொகை. கிறிஸ்துமஸுக்கு ஒரு மாசம் இருக்குறதுக்கு முன்னாடி இருந்தே நான் அப்பாவை தொல்லை பண்ண ஆரம்பிச்சுட்டேன். `அப்பா... எனக்கு கெமிஸ்ட்ரி செட் வாங்கித் தாங்க’னு பேசுறப்போல்லாம் கேட்க ஆரம்பிச்சேன். கிறிஸ்துமஸுக்கு கேட்கிற பரிசுப் பொருள் வேணும்கிறதுக்காகவே, மத்த பிள்ளைகள் மாதிரி கொடுத்த வாக்குறுதியையெல்லாம் காப்பாத்தினேன். நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டேன்; ஒழுக்கமா இருந்தேன். அப்பாகிட்ட வேற எதையும் கேட்காம இருந்தேன். நான் கேட்குறப்போல்லாம் அப்பா ஒரே பதிலைத்தான் சொல்லுவார். `பார்க்கலாம்...’ 

கிறிஸ்துமஸுக்கு மூணு நாளைக்கு முன்னாடி அப்பா என்னை கடைத்தெருவுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரு. அது, சின்னச் சின்ன தெரு வியாபாரிகள் கடை போட்டிருந்த சந்தை. ரொம்ப மலிவா பல பொருள்கள் கிடைக்கும் மார்க்கெட். அப்பா, என்னை ஒரு கடைக்கு முன்னால நிறுத்தினார். அங்கே இருந்த ஒரு சின்ன பொம்மையை எடுத்துக் காட்டி, `இது மாதிரி ஏதாவது வாங்கிக்கிறியா?’னு கேட்டார். `வேணாம்ப்பா... எனக்கு கெமிஸ்ட்ரி செட்தான் வேணும்’னு நான் சொன்னேன். அப்பா, பல கடைகள்ல என்னை நிறுத்தி, பொம்மைத் துப்பாக்கில ஆரம்பிச்சு என்னென்னவோ எடுத்துக் காட்டினார். நான் கெமிஸ்ட்ரி செட்தான் வேணுங்கிறதுல ரொம்பப் பிடிவாதமா இருந்தேன். அப்பா சொன்னார்... `சரி வா வீட்டுக்குப் போகலாம், நாளைக்கு வந்து பார்க்கலாம்.’ அன்னிக்கி அப்பாவும் நானும் எதுவும் வாங்காம வீட்டுக்குக் கிளம்பிப் போனோம். 

போற வழியில நான் எவ்வளவு நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டேன், எனக்கு வேற எந்தப் பரிசும் தேவையில்லை, கெமிஸ்ட்ரி செட்தான் வேணுங்கிறதைத் திரும்பத் திரும்ப அப்பாகிட்ட சொல்லிக்கிட்டே போனேன். இப்போ நான் நினைச்சுப் பார்க்குறேன்... நான் கேட்டதை வாங்கித் தர முடியலையேனு அவர் எவ்வளவு குற்றவுணர்ச்சியோட இருந்திருப்பார், நிச்சயமா அவர் தான் ஒரு நல்ல அப்பா இல்லைனுகூட நினைச்சிருக்கலாம். அன்னிக்கி நாங்க வீட்டுப் படியேறும்போது, `நீ கேட்ட கெமிஸ்ட்ரி செட்டை வாங்கித் தர என்னால முடிஞ்சதைச் செய்றேன் ஜேம்ஸ்’னு சொன்னார். அன்னிக்கி ராத்திரி என்னால சரியாத் தூங்கக்கூட முடியலை. அந்த கெமிஸ்ட்ரி செட்டைவெச்சுக்கிட்டு புதுசா எதையோ நான் கண்டுபிடிக்கிற மாதிரியும், `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில என் போட்டோவைப் போட்டு, `இந்தப் பையனுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது’னு செய்தி வந்த மாதிரியும் கனவு வேற வந்துச்சு. 

அடுத்த நாள் அப்பா என்னைத் திரும்ப கடைத்தெருவுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். வழியில அவர் ஒரு ரொட்டி பாக்கெட் ஒண்ணை வாங்கி, கக்கத்துலவெச்சுக்கிட்டது இன்னும் எனக்கு நல்லா நினைவுல இருக்கு. முதல் கடையிலேயே அப்பா என்னை நிறுத்தினார். `உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ’னு சொன்னார். எனக்கு எல்லாத்தையும் வாங்கணும்னு ஆசைதான். ஆனாலும், எனக்குப் பிடிச்ச கெமிஸ்ட்ரி செட்டை எடுத்தேன்.

அப்பா, பணத்தை எடுக்கறதுக்காக பேன்ட் பாக்கெட்டுக்குள்ள கையை விட்டார். அதுலருந்து ரெண்டு டாலர் பணத்தை வெளியே எடுத்தப்போ, அதுல ஒண்ணு கீழே விழுந்துடுச்சு. அதை எடுக்கறதுக்காக அவர் கீழே குனிஞ்சார். அப்போ அவரோட கோட்டுக்குள்ளருந்து பாக்கெட் வாட்ச்சோட செயின் கழண்டு கீழே விழுந்தது. செயின் இருந்துச்சே தவிர, அதோட நுனியில வாட்ச்சைக் காணோம். 

அப்போதான் அப்பா வாட்ச்சை வித்துட்டாருனு எனக்குப் புரிஞ்சுது. எனக்கு கெமிஸ்ட்ரி செட் வாங்கிக் குடுக்கணும்கிறதுக்காக விலை மதிப்பில்லாத அந்த வாட்ச்சை வித்திருக்கார் அப்பா

நான் அப்பாவோட கையை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு கத்தினேன்... `வேணாம்ப்பா.’ அதுக்கு முன்னாடி நான் அவரோட கையை அப்படி இழுத்துப் பிடிச்சதோ, அவர் முன்னாடி கத்தினதோ இல்லை. ``அப்பா நீங்க எனக்கு எதையும் வாங்கித் தர வேணாம். வாங்க, வீட்டுக்குப் போவோம்’னு சொன்னேன். அப்பா, என்னை வெறிச்சுப் பார்த்தார். அப்பாவைப் பார்க்கப் பார்க்க என் கண்ணுலயும் கண்ணீர் வழிஞ்சுது. `அப்பா நீங்க என்னை எவ்வளவு விரும்புறீங்கனு எனக்குத் தெரியும்ப்பா’னு சொன்னேன். அப்பா, வீடு வர்ற வரைக்கும் என் கையை கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டிருந்தார்...’’ 

இதைச் சொல்லிவிட்டு, ஜேம்ஸ் கலங்கிய விழிகளோடு தன் நண்பர்களைப் பார்த்தார். ``உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, அந்த கணத்துல எங்ககிட்ட கெமிஸ்ட்ரி செட் வாங்குறதுக்குப் போதுமான பணம் இல்லை. ஆனா, உங்களுக்கு இன்னொண்ணு தெரியுமா... இந்த உலகத்துல இருக்குற எதைவிடவும் அப்பா என்னை ரொம்ப நேசிக்கிறார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்...’’ Trending Articles

Sponsored