``புத்தகங்களே என் குழந்தைகள்!''- 44 ஆண்டுகளாகப் புத்தகக் கடை நடத்திய நளினி செட்டூர்Sponsoredதாஜ் கன்னிமாரா ஹோட்டல், சென்னையின் பழைமையான ஹோட்டல். அந்த ஹோட்டலைத் தெரிந்த அளவுக்கு, அங்கு இருக்கும் புத்தகக் கடைகளில் ஒன்றான `Giggles, Biggest Little Book shop’ பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கடந்த 44 நான்கு ஆண்டுகளாக இதை நடத்திவந்துள்ளார், நளினி செட்டூர். அந்தப் புத்தகக் கடை மூடப்படுகிறது என்பது தெரிந்ததும் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

ஒரு நாள் இரண்டு நாள் ஓரிடத்தில் இருந்துவிட்டு வந்தாலே, அந்த இடத்தின் ஞாபகம் நம்மை குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பாதிக்கும். 44 ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்தவர், அந்த வேதனையில் இருப்பார் எனச் சென்றால், வழக்கத்துக்கு மாறாக உற்சாகத்துடன் இருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவரைப் பற்றியும் அவரே சொல்கிறார், அதே உற்சாகம் மாறாமல்.

Sponsored


``இந்தப் புத்தகக் கடையைச் `சின்னது சின்னது' என்று சொல்கிறார்கள். ஆனால், சின்னது என்பதுதான் அழகு என யாருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்குச் சின்னதாகத் தெரியும் இடத்திலேயே 10,000 புத்தகங்கள் வைத்திருந்தேன். அங்கே பெரும்பாலும் இந்தியா பற்றிய நூல்கள்தான் வைத்திருந்தேன். என்னுடைய தாத்தாவிடம் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவர் `நளினி, நீ வளர்ந்து பெரியவளா ஆனதும் இந்தப் புத்தகங்கள் எல்லாம் உனக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அவை எல்லாம் சட்டப் புத்தகங்கள் என்பதால், எனக்கு எதுவும் பயன்படவில்லை. என்னுடைய அப்பா பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது ஏதாவது ஒரு புத்தகத்தோடுதான் வருவார். இவர்கள் இருவரும்தான் புத்தகங்கள்மேல் எனக்கு ஆர்வம் வரக் காரணமானவர்கள்.

Sponsored


ராணி மேரி கல்லூரியில்தான் ஆங்கில இலக்கியம் படித்தேன். என்னுடைய அப்பாவுக்கு மும்பைக்குப் பணி மாறுதல் வந்ததால், நாங்கள் அங்கே போகவேண்டிய சூழல். புத்தகம் மீதான ஈர்ப்பில் அங்கே நான் முதுகலையில் நூலக அறிவியல் (Library Science) படித்தேன். பிறகு, என் அப்பா ஓய்வு பெற்றதும், நாங்கள் மறுபடியும் சென்னைக்கே வந்தோம். வந்ததும் சென்னையில் என்ன செய்வது எனத் தெரியவில்லை. அப்போது ஹிக்கிம்பாதம்ஸில் சேல்ஸ் அண்டு புரமோஷன் ஆபீஸர் வேலை இருப்பதாகக் கேள்விப்பட்டு, அதற்கு விண்ணப்பித்தேன்.

அது 70-களின் தொடக்கம். அப்போது ஹிக்கிம்பாதம்ஸ்தான் சென்னையில் மிகப்பெரிய புத்தகக் கடை. வேலை கிடைத்தது. நான் இந்த வேலையைச் செய்வது, என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து வேலைசெய்தேன். அங்கே இருக்கும்போது நான் நிறைய ஐடியாக்கள் கொடுத்தேன். அப்போது என்னுடைய நண்பர்கள் `ஏன் உன்னுடைய ஐடியாவை இப்படி அடுத்தவர்களுக்காகப் பயன்படுத்துகிறாய். நீயே புதியதாக ஒரு புத்தகக் கடையை ஆரம்பிக்கலாமே!' என்றனர். அது எனக்குச் சரியாகத் தோன்றவே, அந்த வேலையை விட்டுவிட்டு புத்தகக் கடையைத் திறக்கும் வேலையில் இறங்கினேன்.

கன்னிமாரா ஹோட்டல் 4 ஸ்டாராக மாறிக்கொண்டிருந்தபோது, அங்கு புத்தகக் கடை ஒன்று தொடங்கச் சொன்னார்கள். நானும் அதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதால் கடையை ஆரம்பித்தேன். இப்படித்தான் இந்தப் புத்தகக் கடை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. ஆனால், தமிழ்ப் பதிப்பகத்தாரிடம் இருந்தோ, தமிழ் வாசகர்களிடம் இருந்தோ பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. பதிப்பகத்து ஆள்கள், `100 புத்தகங்களுக்குமேல் வாங்கவேண்டும்' என நினைப்பார்கள். தமிழ் வாசகர்கள் `ஏதாவது சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்குமா?' என நினைப்பார்கள். இவை இண்டுமே என்னால் முடியாது. அதனாலேயே எனக்குப் பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை போலும்.

இந்தப் புத்தகக் கடையைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டினர் அதிகம் வருவர். வெளிநாட்டு ஆய்வாளர்கள்தான் எங்களின் தொடர் வாடிக்கையாளர்கள். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு, இப்படி ஒரு கடை இருப்பதே தெரியாது. இத்தனைக்கும் என்னுடைய புத்தகக் கடையைப் பற்றிய ஏராளமான கட்டுரைகள் பல்வேறு இணையதளப் பக்கங்களில் வந்திருக்கின்றன; நிறைய இதழ்களிலும் வந்திருக்கின்றன” என்று தன்னுடைய ஆதங்கத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

``நான் இதுவரை எந்தப் புத்தகமும் எழுதியதில்லை; எந்தப் புத்தகமும் பதிப்பித்ததில்லை. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். என்னிடம் இருந்த அத்தனை புத்தகங்களும் யாரால் எப்போது எந்த மொழியில் எழுதப்பட்டதென்று சொல்லும் அளவுக்கு அது என் மனதிலேயே இருக்கும். அந்த அளவுக்குப் புத்தகங்கள் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு.

முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். என்னிடம் பேசும் எல்லாரும் கேட்கும் ஒரு கேள்வி, `உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?' என்பதுதான். அவர்களிடம் நான் சொல்லும் பதில், `எனக்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், கல்யாணம்தான் ஆகலை!' என்று. இதைச் சொன்னதும் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிடுவார்கள். பிறகு, `புத்தகங்கள்தான் எனக்குக் குழந்தைகள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காகவே நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்' என்று சொன்ன பிறகே இயல்புநிலைக்கு வருவார்கள்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

``இப்படிப் புத்தகங்கள் மீது பெரிய காதலோடு இருக்கும் நீங்கள், ஏன் இந்தப் புத்தகக் கடையை மூட முடிவு எடுத்துள்ளீர்கள்?'' 

``கன்னிமாரா ஹோட்டலைப் புதுப்பிக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. வேலையின்போது எழும் சத்தத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் நான் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போகிறேனே தவிர, இந்தப் புத்தகக் கடையை ஒட்டுமொத்தமாக மூடிவிடவில்லை. இதை வேறு ஓர் இடத்தில் புதிய வடிவத்தில் மீண்டும் கொண்டுவருவேன்” என்று சொல்லும்போது பக்கத்தில் ஒரு சுவரை இடிக்கும் சத்தம் கேட்டது. `அது என்னமோ உண்மைதான் இந்தச் சத்தத்தில் நம்மால் கொஞ்ச நேரம்கூட இருக்க முடியவில்லை. தினமும் எப்படி இருப்பது?' என எண்ணிக்கொண்டு வெளியேறும்போது ``எப்போது என்ன புத்தகம் வேண்டும் என்றாலும் எனக்குச் சொல்லுங்கள். அது எங்கே இருந்தாலும் கொண்டுவந்து தருகிறேன்” என்றார் திடமான குரலில்.Trending Articles

Sponsored