பிளிறும் சிங்கம்... துள்ளும் மான்கள்... மாணவர்களை உயிர்ப்பிக்கும் மதுரை அரசுப் பள்ளி!Sponsoredகாட்டு விலங்குகள் சத்தம் அந்த அரசுப் பள்ளியிலிருந்து கேட்க, ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தோம். சிங்கம் பிளிரியது, காகம் கரைந்தது, மானும் முயலும் துள்ளின. ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், மாணவர்கள் நடத்திய நாடகங்களை மெய்மறந்து கவனிக்க ஆரம்பித்தோம். நாடகத்தில் காட்டு விலங்குகள் மழலை மொழியில் வசனம் பேசியது, ஸ்நேகத்தை உருவாக்கியது. இரக்கம், அன்பு, உதவி, பொதுஅறிவு, சமூகச் சிந்தனை எனப் பலவும் நாடகத்தில் மிளிர்ந்தது.

மதுரை, ஒத்தக்கடை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு நாடக நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், `குக்கூ காட்டுப் பள்ளி' சிவராஜ் கதை சொன்னார். தாமிரபரணி கலைக்குழு மதியழகன் பாட்டுப் பாட, பிளாஸ்டிக் தீமைகளை விளக்கினார், மதுரை சீடு இயக்குநர் கார்த்திக். `யார் தலைவன்?', `அம்மா- மகள்', `காட்டு விலங்கும் கற்பனையும்' உள்ளிட்ட நாடகங்களை மாணவர்களே உருவாக்கி அரங்கேற்றினர்.

Sponsored


பல்வேறு சமூகம் சார்ந்த நாடகங்களை, மதியழகன் தலைமையில் நாடகக் கலைஞர்கள் கதை வாயிலாகச் சொல்லி அசத்தினர். நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்த நாடகத்தை, மாணவர்கள் மிகவும் ஆர்வமாக ரசித்தனர். பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்பதை ஒரு குரங்கு கதை மூலம் விளக்கினர்.

Sponsored


நிகழ்வுகளுக்குப் பிறகு உற்சாகம் குறையாமல் பேசிய மாணவர்கள், ``சுற்றுவட்டாரத்தில் பல தனியார் பள்ளிகள் இருந்தாலும், எங்கள் பள்ளியில் படிக்கவே பல  மாணவர்கள் ஆசைப்படுவாங்க. ஏன்னா, கதை நிகழ்ச்சி, நாடக நிகழ்ச்சி, பாரம்பர்ய விளையாட்டுகள், கணினி வழி கல்வி எனப் பல விஷயங்களை இங்கே சொல்லிக்கொடுக்கிறாங்க. நாடகங்கள், கதைகள் மூலம் பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது எங்களுக்கு ஈஸியா புரியுது. நிறைய உலகப் பொது விஷயங்களையும் தெரிஞ்சுக்கிறோம். அதனால், லீவே போடாமல் ஸ்கூலுக்கு வருவோம். ஆசிரியர்கள் யாராவது லீவு எடுத்தால்கூட, `ஏன் லீவு எடுத்தீங்க?'னு உரிமையோடு கேட்போம். இப்போ நடந்த நாடக விழாவில் அடையாளம் தெரியா அளவுக்கு வேஷம் போட்டுக்கிட்டு நடிச்சது ரொம்ப ஜாலியா இருந்துச்சு'' என்றனர்.

`குக்கூ' சிவராஜ், ``மதுரை சீடு தொண்டு நிறுவனத்தை இயக்குநர் இளவரசி, கார்த்திக் உடன் இணைந்து பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்குக் கற்பனைத் திறன் வளர்க்க பல நல்ல விஷயங்களை கொண்டுசேர்க்கிறோம். இன்று, ஒத்தக்கடை பள்ளியில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. இவ்வாறு கற்பனை வழியாகச் சமூக விஷயங்களைச் சொல்வதால், சிறுவயதிலேயே அவர்களின் படிநிலை மாற்றப்படுகிறது. வாழ்வில் கதைகள் நம்பிக்கையைப் பரிசாக அளிக்கும். கற்பனைக் கதைகளில் வரும் பட்டாம்பூச்சிக்கு அவனே நிறங்களை நிரப்புகிறான். யானைக்கு உருவத்தையும் குணத்தையும் கொடுக்கிறான். அழகான கற்பனைகளை உருவாக்கும் திறனை அடைகிறான். அதனால், அவனிடம் நல்ல பண்புகள் பிறந்து, தனது நண்பர்களுக்கும் கடத்துகிறான். தன்னிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மையையும் களைகிறான்'' என்றார். 

மாணவர்களோடு மாணவராக அமர்ந்து நாடகத்தை ரசித்துக்கொண்டிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன், ``நாடகங்கள் நேரடியாக மனித உணர்வுகளைத் தொடக்கூடியவை. `அரிச்சந்திரா' நாடகத்தைப் பார்த்துதான் பொய் சொல்லக் கூடாது என்ற முடிவை மகாத்மா காந்தி எடுத்தார். நாடகத்தில் நடிக்கும் குழந்தைகளுக்கு உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு, படைப்பாற்றல், தன்னம்பிக்கை முதலியவை அதிகரிக்கின்றன. பாடங்களையும் நாடகமாக நடிக்கும்போது கற்றல், இயல்பாகவும் சுதந்திரமாகவும்  நடைபெறுகிறது. தாங்கள் கற்கிறோம் எனத் தெரியாமலே கற்றுக்கொள்கிறார்கள். கற்றல் திணிக்கப்படுவதில்லை'' என்றார்.

கற்றல் சுதந்திரமாகவும் மகிழ்வாகவும் நடந்தால், `டிராப் அவுட்' என்ற வார்த்தையே காணாமல்போய்விடும். அதற்கு இது போன்ற அரசுப் பள்ளிகளின் பணிகள் உதவும்.Trending Articles

Sponsored