பெற்றோர் நண்பர்களானால் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்வார்கள்? #GoodParenting



Sponsored



சென்ற ஞாயிற்றுக்கிழமைதான் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடினோம். `அப்பாவே என் சிறந்த நண்பன்', `அம்மாவே என் தோழி' என்றெல்லாம் சில முகநூல் பதிவுகள் இதயத்தை நெகிழவைத்தது. அது சரி, வளரும் பிள்ளைகளிடம் குறிப்பாக 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளிடம், பெற்றோர் நண்பர்களாகப் பழகலாமா? அப்படிப் பழகினால் அந்தக் குழந்தைகள் எப்படி வளர்வார்கள்? சொல்கிறார், குழந்தைகள் உளவியல் மருத்துவர் ஜெயந்தினி.

``உலகத்தின் சிறந்த விஷயங்களில் நட்பு ஒன்று என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக நடந்துகொண்டால், அதனால் எத்தகைய சங்கடங்கள் வரும் என ஓர் உளவியல் மருத்துவராக எனக்குத் தெரியும். உங்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாகப் பழகும்போது, பிள்ளைகள் அவர்களுக்குச் சமமாகக் கருதுவார்கள். பிறகு, அவர்களுக்குச் சமமாக உங்களை நடத்தவும் ஆரம்பிப்பார்கள். அந்த இடத்தில், பெற்றோருக்கான மரியாதை குறையும். `துப்பாக்கி' படத்தில் கதாநாயகி காஜல் அகர்வால், அப்பாவை அடிப்பதுபோல ஒரு காட்சி வரும். சினிமாவுக்காக மிகைப்படுத்தியிருந்தாலும்,  பெற்றோர், குழந்தையிடம் நண்பனாக நடந்துகொண்டதன் தாக்கம்தான் அதுவும்.

Sponsored


பெற்றோர்களுக்குச் சமமாக தங்களை நினைத்துக்கொள்ளும் பிள்ளைகள், பெற்றோரின் அறிவுரைகளைச் சட்டென காது கொடுத்து கேட்க மாட்டார்கள். `பெற்றோர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது' என்கிற பாசிட்டிவ் விஷயமே அடிபடும். 10 வயதுக்குள் இருக்கும் சில பிள்ளைகள், தாங்கள் கேட்டது கிடைக்காமல் போனால், பெற்றோரை அடிக்கிறார்கள். தங்கள் இடத்தைவிட்டுப் பிள்ளைகளுக்குச் சமமாக பெற்றோர் கீழிறங்கி வரும்போது, இப்படி நடக்கும்.

Sponsored


சில பிள்ளைகள், தங்களையே பெற்றோருக்குச் சமமாக நினைத்துக்கொண்டு, வா, போ என்று ஒருமையில் பேசி, மரியாதை குறைவாக நடத்துவார்கள். அதேநேரம், பள்ளிக்கூடத்தில் ஒழுக்கமான, சொன்ன பேச்சைக் கேட்கும் மாணவர்களாக இருப்பார்கள். பிள்ளைகளின் இயல்பு ஒருமையில் பேசுவது எனில், வீடு, ஸ்கூல், வெளியே என எல்லா இடங்களிலும் அப்படித்தானே நடந்திருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கூடத்தில் மட்டும் ஒழுக்கமாக நடந்துகொள்கிறார்கள் எப்படி? நீங்கள் நண்பராக நடந்துகொண்டதால், உங்கள் தலைக்கு மேலே ஏறி உட்கார்ந்துவிட்டார்கள் என்று பொருள். 

என் மகளின் சிறந்த தோழி நான்தான் என்று பெருமையில் இருக்கும்போது, `உனக்கு மட்டும் 10,000 ரூபாய்க்குப் பட்டுப்புடவை எடுக்கிற; எனக்கு ஏன் காஸ்ட்லியான லெஹங்கா பர்ச்சேஸ் பண்ணலை' என்று சண்டைக்கு வந்தால், என்ன சொல்வது எனத் தெரியாமல் மலைத்து நிற்பீர்கள். `அம்மா விலை கூடுதலாக எடுக்கும் ஒரு புடவையைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்துவேன். உனக்கு அந்த விலையில் வாங்கினால், நீ வளர வளர அந்த உடை போடமுடியாமல் போய்விடும்' என்ற விளக்கத்தை உங்கள் மகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நீங்கள் அம்மாவாகவும், மகள் மகளாகவும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால்தான், பெற்றோர் -  பிள்ளைகள் உறவைச் சமமான உறவு இல்லை என்று ஆரம்பத்திலேயே சொன்னேன்'' என்கிறார் ஜெயந்தினி. 

எனில், பிள்ளைகளிடம் வேறு எப்படி நடந்துகொள்வது?

``பிள்ளைகளிடம் நண்பர்களாக இருப்பதற்குப் பதிலாக, நட்பாக மட்டும் இருங்கள். அதாவது, உங்கள் பிள்ளைகளை அடிக்க வேண்டாம், மனம் புண்படும்படி திட்டவும் வேண்டாம். ஆனால், கண்டிப்புடன் நடந்துகொள்ளுங்கள். அதை நட்பாக வெளிப்படுத்துங்கள். கண்டிப்பு என்பது செடிகளுக்குப் போடும் வேலி மாதிரி. வேலிகளால் செடிகள் பாழாவது இல்லை; கண்டிப்பினால் குழந்தைகள் வீணாவதில்லை. கண்டிப்பு என்ற வேலிக்குள் பிள்ளைகளை வளர்த்தால்தான், தானும் கெட மாட்டார்கள். அடுத்தவர்களையும் கெடுக்க மாட்டார்கள். இந்தக் கண்டிப்பில் சற்று நட்பையும் சேர்த்துக் காட்டுங்கள். ஆனால், நண்பராக வேண்டாம்.''



Trending Articles

Sponsored