கலைவாணர் காட்டிய பூஜ்யமும்... கருணாநிதி வாங்கிய பத்தாயிரமும்!Sponsoredகாலத்துக்குத் தகுந்தபடியும், மக்களின் ரசனைக்கேற்பவும் தன்னுடைய எழுத்து நடையால் தமிழ் சினிமாவை அலங்கரித்தவர் மு.கருணாநிதி. அதுபோல், தளர்ந்திருந்த தமிழகத்தையும், தழைத்தோங்கிய தமிழையும் உலகறியச் செய்தவர். அரசியல், சினிமா, இலக்கியம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்டு, அவையனைத்திலும் உச்சம் பெற்றதோடு, எண்ணற்ற சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டினார். அப்படிப்பட்ட சரித்திர நாயகரை, இன்று இந்த உலகு இழந்திருக்கிறது. 

கருணாநிதியைப் போன்றே கலையுலகில் தம்முடைய நகைச்சுவை உணர்வால் கொடிகட்டிப் பறந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். இவர், கலைவாணர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதும் உண்டு. அவரையும் இந்த உலகு இழந்திருப்பது நமக்கு வருத்தம் தரக்கூடியதாக இருந்தாலும், இந்த இரு துருவங்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேசியபோது நடந்த நகைச்சுவை நிகழ்வு ஒன்றை நினைத்துப் பார்த்தால் அது, நம் நினைவைவிட்டு என்றும் அகலாது. இதோ, அந்த நகைச்சுவை சம்பவம்...

`மந்திரி குமாரி.’ இது, மு.கருணாநிதியின் வசனத்தில் தயாரான படம். இந்தப் படத்தின் கதையும், வசனமும் மந்திரியையும்... குமாரியையும் போன்றே இருக்கும். அதில், கருணாநிதியுடைய ‘கலை’த் தமிழும்... கற்பனைத் திறமும் நன்கு வெளிப்படும். இப்படத்தைக் காண அந்தக் காலத்திலேயே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குழுமியிருந்தது. அனல் பறக்கும் வசனங்களால் தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. அதற்குக் காரணம், மு.கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வசனம். 

Sponsored


Sponsored


இப்படி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருந்த அந்தப் படத்தைப் பார்க்கச் சென்றார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பார்த்தவர், அதிசயத்துப் போனார். படத்தைப் பார்த்த உற்சாகத்தில் அடுத்த நாள் கருணாநிதியைப் போய்ச் சந்தித்தார் என்.எஸ்.கிருஷ்ணன். அவரிடம்,``என்னுடைய `மணமகள்’ படத்துக்கு, நீங்கள்தான் திரைக்கதை - வசனம் எழுதித் தர வேண்டும்’’ என்று கேட்டார், கலைவாணர். அதற்கு, உடனே சம்மதமும் தெரிவித்துவிட்டார் கருணாநிதி. அவரிடம், ``உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்’’ என்று கேட்டார் கலைவாணர். அதற்கு மெளனத்தையே பதிலாகத் தந்தார் கருணாநிதி. இருந்தாலும், கலைவாணர் விடாமல்... துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து... அதில், நான்கு பூஜ்யங்களை (0000) எழுதினார். பின்பு, அதை எடுத்து... கருணாநிதியிடம் காட்டி, ``இது போதுமா’’ என்று நகைச்சுவையோடு கேட்டிருக்கிறார், கலைவாணர். அவரும், ``போதும்’’ என்றே தலையசைத்து இருக்கிறார்.

பின்னர், மீண்டும் அந்தத் துண்டுச் சீட்டில்... நான்கு பூஜ்யங்களுக்குப் பின்னால் ஒன்று (00001) என எழுதி, ``இதற்கும் சம்மதமா’’ எனக் கேட்டிருக்கிறார் கலைவாணர். இவரைப் போன்றே நகைச்சுவை உணர்வு கொண்ட கருணாநிதி, சமயோசித திறமையும் வாய்க்கப் பெற்றவர். அதனால்தான் அவர் பலவிதத்திலும், பலரும் போற்றும்படியாக, `கலைஞர்' என்ற சிறப்புப் பெயர் பொருந்தும்படியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அப்படி வாழ்ந்த கருணாநிதி, கலைவாணர் கொடுத்த அந்தத் துண்டுச் சீட்டை அப்படியே தலைகீழாக மாற்றிப் பிடித்து, அவர் எழுதியதையே 10,000 என்று தெரியும்படி கலைவாணரிடம் காட்டினாராம் கருணாநிதி

அடுத்த நொடி, அவருடைய ஆற்றலைக் கண்டு வியந்துபோனாராம் கலைவாணர். அதே நேரத்தில், கருணாநிதி அந்தத் துண்டுச் சீட்டில் தலைகீழாகத் தெரியும்படி காட்டிய 10,000 ரூபாய் தொகையையும் அன்போடு கொடுத்தாராம். ஒருவன், எப்போதும் வாழ்வில் `ஜீரோ’வாக இருக்கக் கூடாது... ‘ஹீரோ’வாக (மதிப்புமிக்கவனாக) இருக்க வேண்டும் என ஒருவேளை, கருணாநிதி நினைத்ததால்தான் என்னவோ தெரியவில்லை... கலைவாணர் எழுதிக்கொடுத்த அந்த ஜீரோவைக்கூட மதிப்புமிக்க எண்ணாக மாற்றி... அவரை மகிழ்வித்தார்; தன்னையும் மதிப்புமிக்கவராக உயர்த்திக்கொண்டார்.Trending Articles

Sponsored