டாம் அண்ட் ஜெர்ரி முதல் பீஸ்ட் வரை... இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பூனைகள்! #CatDay



Sponsored



சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுவது டாம் அண்ட் ஜெர்ரி ஷோ தான். மனதில் எவ்வளவு தான் டென்ஷன் இருந்தாலும் ஒரு 5 நிமிடம் டாம் அண்ட் ஜெர்ரி ஷோ அல்லது பூனைகள் வரும் எதாவது ஒரு கார்ட்டூன் பார்த்தால் போதும். மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் ஓடிவிடும். பெரியவர்களைக் கூட குழந்தைகளாக்கிவிடும் வல்லமை படைத்தது தான் பூனை. பாத்திரத்தில் உள்ள பாலைத் திருட்டுத் தனமாக குடித்து விட்டு அமைதியாக எதுவுமே நடக்காதது போலிருக்கும் அந்த அப்பாவியான 'லுக்'கை பூனையால் மட்டுமே கொடுக்க முடியும். பூனைகளின் குறும்புத்தனத்தை கொண்டாடுவதற்காகவே ஆகஸ்ட் 8-ம் தேதியைச் சர்வதேச பூனை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். நேற்று பூனை தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

உலகளவில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்று. நம்முடைய வீட்டில் கூட ஜெர்ரியைப் பிடிக்கக் கண்டிப்பாக ஒரு டாம் இருக்கும். பூனைக்கு அழகே அதனுடைய கண்களும் மீசையும் தான். அதை விடப் பூனை தன்னுடைய தலையை மேலும் கீழும் தூக்கிப் பார்க்கும் பார்வையை எத்தனைத் தடவை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ பூனை வீடியோக்களோ, புகைப்படங்களோ வந்தால் அதைப் பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலையைச் செய்வார்கள். உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அதில் 50 கோடிக்கும் அதிகமான பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதன் கூட சுத்தத்தைப் பற்றி அதிகளவு அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் பூனை மிகவும் சுத்தமான விலங்கு. தனக்குக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தன் உடலின் மேற்பகுதியை நாக்கால் நக்கி நக்கி சுத்தம் செய்வதிலேயே செலவிடும். மீன் குழம்பை விட அதிகளவில் விரும்பி சாப்பிடக் கூடியது கருவாட்டுக் குழம்புதான். பூனைகள் சுமார் 18 லிருந்து 20 ஆண்டுகள் வரைதான் வாழக்கூடியது. ஆனால் இங்கிலாந்தில் பாபி என்ற பூனை 24 வயது வரை வாழ்ந்துள்ளது. பூனைகள் 24 வயது வரை வாழ்வது மனிதன் 114 வருடங்கள் வாழ்வதற்குச் சமமானது. மேலும், சில பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்களும் உள்ளன. 

Sponsored


Sponsored


பூனைகள் பெரும்பாலும் 2.5 லிருந்து 7 கிலோ வரையிலான எடையுடன் இருக்கும். சராசரியாக 23-25 செ.மீ உயரமும், 46 செ.மீ உடல் நீளமும் வளரக்கூடியது. சாதாரணமாக நாயின் வால் 15 செ.மீ வரை தான் இருக்கும். ஆனால் பூனைக்கு 30 செ.மீ வரை நீளமான வால் இருக்கும். அதேபோல் பூனைக்கு மனிதனை விட 3 பற்கள் அதிகம். இதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால் பூனைகள் மனிதனை விட 3 கி.மீ வேகம் அதிகமாக ஓடக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 48 கி.மீ வேகம் ஓடிவிடும். இரண்டே மாதத்தில் கர்ப்பமடைந்து,முதல்முறை மட்டும் 2 லிருந்து 3 குட்டிகள் போடும், இரண்டாவது முறையிலிருந்து 4 முதல் 6 குட்டிகள் வரைப்போடும். வாழ்நாளில் 150-க்கும் மேற்பட்ட குட்டிகளை போட்டுவிடும். கும்பகர்ணனைப் போல, ஒரு நாளைக்கு 12 லிருந்து 16 மணி நேரம் தூங்குமாம். அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் பூனையானது, டாம் அண்ட் ஜெர்ரியில் வருவது போலவே அதனுடைய தலை எந்த இடத்தில் நுழையுமே அந்த இடத்தில் எல்லாம் நுழைந்து விடும் உடலமைப்பைக் கொண்டது.

பூனைகளுக்கு அதிக இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் தமது காதை 180°வரை அசைக்கக்கூடியதுடன், தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாகவும் அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது. இரவில் சிறு சத்தம் கேட்டாலும், சட்டென்று இரையை வேட்டையாடிவிடும். பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன்னங்கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்குமாம். இதனால் சிறிது சத்தம் கூட இல்லாமல் வேட்டையாட முடியும். சத்தம் போடாமல் வேலையைக் கச்சிதமா முடிக்கும் திறமை பூனைகளுக்கே உள்ள ஒரு தனி சிறப்பு தான். மற்ற நேரத்தில் பூனைகள் 100-க்கும் அதிகமான சத்தம் எழுப்பும் என்பதும் ஆச்சர்யமிக்கது.  

பழங்காலத்தில் பூனைகள் இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால், அப்போதெல்லாம் எலிகள் இல்லாத வீடுகளே இல்லை. ஆரம்பத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் அன்பாகப் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வீட்டில் ஒருவர் போன்று நேசித்து வளர்க்கத் தொடங்கினர். சாதாரணமாக, அதிகளவு உயரத்தில் இருந்து குதித்தால் அதிக அடிபடும். குறைந்தளவு உயரத்தில் இருந்து குதித்தால் குறைவாக அடி படும். ஆனால் பூனைகளுக்கு இது நேர்மறை. பூனைகள் 32 மாடி உயரத்தில் இருந்து குதித்தாலும் அவற்றுக்கு அடிபடுவது மிக மிகக் குறைவே. பெரும்பாலும் பூனைகள் அதிக உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்ளும். இதனால் அதிக உயரத்தில் இருந்து குதித்தாலும் மிகக் குறைவாகவே காயங்கள் ஏற்படும். ஆனால் குறைந்த உயரத்தில் இருந்து குதிக்கும்போது தங்கள் கால்களை தயார் செய்வதற்குள் கீழே விழுந்து விடுவதால் அதிக அடிபட்டுவிடுகின்றன. 

வீடுகளில் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இணையத்திலும் பூனைகள் தங்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து விட்டன. பூனைகளுக்கு என்றே ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள், யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக் பக்கங்கள், அனிமேஷன்கள் என்று இணையதளத்தில் எல்லா இடங்களிலும் எதாவது ஒரு வகையில் பூனைகள் இருக்கின்றன. சோஷியல் மீடியாக்களில் உள்ள Pet-களில் அதிக பாப்புலராக இருப்பதே பூனைகள் தான். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 14 லட்சம் பூனை புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. 3.5 லட்சம் பூனை உரிமையாளர்கள் பூனைகளுக்கென ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் கணக்குகள் (Account) வைத்துள்ளனர். இதில் 15% பேருடைய பூனைகள் இணையதளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

18 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் Instagram மற்றும் SnapChat ஐ அவர்களின் பூனைகளுக்காகவே பயன்படுத்துகின்றனர். பூனைகளுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தும் 3-ல் இரண்டு பேர் பூனைகளுடன் செல்ஃபி எடுத்துப் பதிவிடுகின்றனர். யூடியூப்-ல் இதுவரை அதிகமாகப்  பார்க்கப்பட்டது  Nyan Cat வீடியோ தான். இதுவரை சுமார் 16.1 கோடி பேர் பார்த்துள்ளனர். பூனை பற்றிய வலைத்தளங்கள் மட்டுமின்றி திரைப்படங்களும் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களும் பலர் இருக்கிறார்கள். இது மட்டுமின்றி,  தன்னுடைய குறும்புத்தனத்தைக் காட்ட விண்வெளி வரை சென்றது ஃபெலிசிட் (Felicette)என்ற பெண் பூனை. 1963ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி  விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிப் பயணம் முடிந்து உயிருடன் பூமிக்குத் திரும்பியதே இதன் சிறப்புக்கு முக்கிய காரணம். 

பூனைகளின் குறும்புத்தனத்தை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு  இவர்கள்தான். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டன், 'சாக்ஸ்' என்ற பூனையை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் ஓய்வு அறை, பத்திரிகையாளர் அறை என எங்கு வேண்டுமானாலும் சுற்றிவர அதற்கு அனுமதி உண்டு. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இரண்டு பூனைகளை வளர்த்து வந்தார். வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்தில் பூனைகளுக்கு உணவு ஊட்டுவார். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தம் பூனைகளோடு நெருக்கமானவர். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன் ஆராய்ச்சியில் சோர்வுறும்போதெல்லாம் அவரின் தனிமையைப் போக்கி ஆறுதல் அளித்தது பூனைகளின் நெருக்கம்தான் என்று கூறியுள்ளார். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன், தாம் வளர்த்த இரண்டு பூனைகள் அதன் உருவ அமைப்புக்கு ஏற்ப வெளியே சுதந்திரமாய் சென்று வர வீட்டுக் கதவில் பெரியதும் சிறியதாய் இரண்டு துளைகளைச் செய்துள்ளார். புளேரென்ஸ் நைட்டிங்கேல் அறுபது பூனைகள் வரை வளர்த்ததாகவும் எங்குச் சென்றாலும் பூனைகளை விட்டுச் செல்வதில்லை என்றும் வரலாற்றுக் குறிப்பு உள்ளது. வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட இரண்டு வழிகள், இசையும், பூனைகளும் என்று கூறியது நோபல் பரிசு பெற்ற தத்துவமேதை  ஆல்பர்ட் சுவெய்ட்ஷர். இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூட பீஸ்ட் (Beast)என்ற பூனையை வளர்த்து வருகிறார். இது போன்று வின்ஸ்டன் சர்ச்சில், ஊர்சுலா என்ரெஸ், லெனின் என்று இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களைச் சிறைபிடித்துள்ளது பூனைகள்.

எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எசமானரைக் கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி, அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை தெரிவித்துவிடும். நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை இடம்பெறாவிட்டாலும், உலகம் முழுவதும் பூனை செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படுகிறது. உங்களுக்குப் போர் அடிக்கும் நேரத்தில் யூடியூபில் 'Cats'என்று மட்டும் தேடிப் பாருங்கள். நேரம் போவதே தெரியாது. உங்களுடைய வீட்டில் கூட கண்டிப்பாக ஒரு டாம் இருக்கும். உங்களுக்கும்பூனைக்கும் இடையே நடைபெற்ற சின்ன சின்ன சுவாரஸ்யமான நிகழ்வை கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளலாமே...? 



Trending Articles

Sponsored