ஸ்ட்ரீட் பைக், அட்வென்ச்சர் பைக், பாப்பர் பைக்... இது ஹார்லியின் கேம்-பிளான்!Sponsoredஹார்லி டேவிட்சன்... விற்பனையில் சரிவு, வரி விதிப்பில் பின்னடைவு, எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் என டூ-வீலர் சந்தையில் தொடர்ச்சியாக பிரச்னைகளைச் சந்தித்த நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும்! தற்போது தனக்கு முன்னே இருக்கும் சவால்களுக்கான பதிலை, இந்த அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆம், ‘More roads to Harley-Davidson’ என்ற பெயரில் புதிய கோட்பாட்டை நிறுவியிருக்கும் ஹார்லி டேவிட்சன், 2022-ம் ஆண்டுக்குள் 500 சிசி முதல் 1250 சிசி இன்ஜின் திறனில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்க உள்ளது. மேலும் எலெக்ட்ரிக் மயமாகிக் கொண்டிருக்கும் டூ-விலர் சந்தையில் தனது பங்காக, லைவ் வயர் (LiveWire - அவென்ஜர் Age of Ultron படத்தில் பார்த்தோமே!)

பைக்கை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதிலேயே பலவிதமான எலெக்ட்ரிக் மோட்டார் - பேட்டரி திறனில் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிகிறது. மேலும் இந்திய மற்றும் ஆசிய பைக் சந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாக, 250 சிசி - 500 சிசி இன்ஜின் திறனில் பைக் ஒன்றை ஹார்லி டேவிட்சன் அறிமுகப்படுத்த இருப்பதுதான் ஹைலைட்.  ‘More roads to Harley-Davidson’ திட்டப்படி, மொத்தம் 100 புதிய தயாரிப்புகளை, வருகின்ற 2027-ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது! இதில் 2020-ம் ஆண்டில் விற்பனைக்கு வரப்போகும் 4 பைக்குகளின் தகவல்கள் அடங்கிய தொகுப்பே இந்தக் கட்டுரை!

Sponsored


250cc - 500cc Harley Davidson Bike

Sponsored


ஹரியானாவில் உள்ள தனது தொழிற்சாலையில், ஸ்ட்ரீட் 500 (ஏற்றுமதி மட்டும்) மற்றும் ஸ்ட்ரீட் 750 பைக்குகளை உற்பத்தி செய்கிறது ஹார்லி டேவிட்சன். இந்தப் பட்டியலில் இந்த நிறுவனம் புதிதாகக் களமிறங்க உள்ள 250 சிசி - 500சிசி பைக்கும் இணைய இருக்கிறது. இந்திய மற்றும் ஆசிய பைக் சந்தையை மனதில்வைத்து தயாரிக்கப்பட உள்ள இந்த பைக்கை, ஆசிய சந்தையின் முன்ணனி பைக் தயாரிப்பாளர் ஒருவருடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது ஹார்லி டேவிட்சன். கேடிஎம் - பஜாஜ், பிஎம்டபிள்யூ - டிவிஎஸ், டிரையம்ப் - பஜாஜ் எனக் கூட்டணிகள் ஏற்கனவே இருப்பதால், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் உடன் இந்த நிறுவனம் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அந்த 250 சிசி - 500 சிசி பைக்கை ஹார்லி டேவிட்சனுக்காக விநியோகம் செய்யவேண்டிய தேவையும் இருப்பதால், இந்தியாவில் அதிக விற்பனை எண்ணிக்கை மற்றும் பெரிய சேல்ஸ்-சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டிருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் அல்லது ஹோண்டா ஆகியோருடன் இந்த நிறுவனம் கூட்டணி அமைக்கலாம். 

ஹார்லி டேவிட்சனின் லேட்டஸ்ட் பைக்குகளை பார்க்கும்போது, இதுவும் பழமையும் புதுமையும் கலந்த பைக்குகளாக இருக்கும் என நம்பலாம். 4 வால்வ் - DOHC - லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட V-ட்வின் இன்ஜின், USD ஃபோர்க், ஏபிஎஸ், LED லைட்டிங் போன்ற மாடர்ன் வசதிகளுடன், ரெட்ரோ டிசைனில் இந்த பைக் வடிவமைக்கப்படலாம். ஒருவேளை பைக்கை குறைவான விலையில் கொண்டுவர விரும்பினால், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படலாம். 'பில்லா அஜித்' சொல்வது போல கொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், V-ட்வின் இன்ஜின் கொண்ட பைக்குகளுக்குப் பெயர் பெற்ற இந்த நிறுவனம், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்குகளையும் தயாரித்திருக்கிறது.

Harley Davidson Pan America 1250

ஹார்லி டேவிட்சன் வரலாற்றிலேயே, புதிய வரலாறைப் படைக்கப்போகும் தயாரிப்பு இதுதான்! பான் அமெரிக்கா 1250 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதன் ப்ரோட்டோ டைப் மாடலின் படங்கள் வெளிவந்து, இணைய உலகில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை அசப்பில் நினைவுபடுத்துகிறது பான் அமெரிக்கா 1250. இதில் DOHC மற்றும் லிக்விட் கூலிங் அமைப்பைக் கொண்ட புதிய 1,250சிசி, V-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. LED ஹெட்லைட்ஸ், ரேடியல் டிஸ்க் பிரேக் காலிப்பர், USD ஃபோர்க் என மாடர்ன் வசதிகள் இருப்பது ப்ளஸ். இது அட்வென்ச்சர் டூரர் பைக் என்பதை ஸ்போக் வீல்கள் - ஆஃப் ரோடு டயர்கள், Knuckle Guard, பெரிய விண்ட் ஸ்க்ரீன் ஆகியவை பறைசாற்றுகின்றன. ஹார்லியின் அட்வென்ச்சர் டூரர்... கேட்கவே செமையா இருக்கே.

Harley Davidson Street Fighter 975

 பெயருக்கு ஏற்றபடி, 975சிசி இன்ஜினுடன் கூடிய நேக்கட் பைக்காக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது ஸ்ட்ரீட் ஃபைட்டர் 975. வட்டமான ஹெட்லைட், தடிமனான ஃபோர்க், ஷார்ப்பான பெட்ரோல் டேங்க், Mass Forward தோற்றம் ஆகியவை இதனை உறுதிபடுத்துகின்றன. இந்த நிறுவனம் விற்பனை செய்த XR 1200 பைக்கின் அடுத்த தலைமுறை மாடலாக இது பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதிலும் DOHC மற்றும் லிக்விட் கூலிங் அமைப்பைக் கொண்ட புதிய 975சிசி, V-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது.

இதன் ஸ்பெஷல் என்னவென்றால், பெர்ஃபாமென்ஸ் பைக் போன்ற டியூனிங்கைக் கொண்டிருக்கும் என்பதுதான்! அதனை உணர்த்தும் விதமாக, பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தம் இருந்ததை டீசர் வீடியோவிலேயே பார்க்க முடிந்தது. பெரும்பான்மையான பர்ஃபாமென்ஸ் பைக்குகளில் செயின் டிரைவ் இருக்கும் நிலையில், ஹார்லி டேவிட்சனின் பிரத்யேகமான பெல்ட் டிரைவ்தான் இதிலும் இருக்கும். இந்த நேக்கட் பைக்கின் பெயர், Bronx ஆக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பார்க்க ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கும் இந்த பைக்கை வடிவமைத்தவர் ஒரு இந்தியர். ஆம், Chetaan Shedjale என்ற பெயர் கொண்ட இவர், இந்த நிறுவனத்தின் ஹிட் மாடல்களான ஸ்ட்ரீட் 750 & ஸ்ட்ரீட் ராட் பைக்குகளை டிசைன் செய்திருக்கிறார்.

Harley Davidson Custom 1250

மாடர்ன் பாப்பர் (Bobber) பைக் போலக் காட்சியளிக்கிறது கஸ்டம் 1250. இந்தியன் நிறுவனத்தின் ஸ்கவுட் சீரிஸுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடலின் ப்ரோட்டோடைப் படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் பைக்கின் ரெட்டோ மாடர்ன் டிசைன் - அகலமான டயர்கள் - டியுப்லர் ஸ்விங் ஆர்ம் - இரட்டை எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை தெரிகின்றன. இதில் பான் அமெரிக்கா 1250 பைக்கில் இருக்கும் அதே V-ட்வின் இன்ஜின் பொருத்தப்படும் என்றாலும், இந்த பைக்குக்கு ஏற்ப அது ரி-டியூன் செய்யப்படலாம். தவிர பான் அமெரிக்கா மற்றும் கஸ்டம் ஆகிய 1250 சிசி பைக்குகளில் உள்ளது, ஒரே சேஸியாக இருக்கலாம். 

ஹார்லியின் வருங்காலத் திட்டங்கள் என்ன?

உலகெங்கும் வாகனத்தை வாங்குவது டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் நிலையில், தனது இணையதளமான www.harley-davidson.com- யை அதற்கேற்ப மாற்றியமைக்க இருக்கிறது. மேலும் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து, தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே ஃப்ளிப்கார்ட் அல்லது அமேசானில் நீங்கள் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்கக்கூடிய காலம், வெகு தொலைவில் இல்லை! தவிர வர்த்தக ரீதியில் பெரும் லாபத்தைத் தரக்கூடிய Apparel பிரிவையும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது.

மேலே சொன்ன பைக்குகள் மற்றும் திட்டங்களைச் செயலாற்றுவதற்கு, இப்போது முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு, முதற்கட்டமாக $225 - $275 மில்லியன் முதலீடு செய்ய இருக்கிறது. பின்னர் தேவைகளுக்கு ஏற்ப $450 - $550 மில்லியன் செலவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே ‘More roads to Harley-Davidson’ வாயிலாக, 2022-ம் ஆண்டில் $1 பில்லியன் வருமானத்தை ஈட்ட திட்டமிட்டிருக்கிறது. எது எப்படியோ, பைக் ஆர்வலர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது; அதுவும் ஹார்லி 250சிசி - 500சிசி பைக் வரப்போகிறது!Trending Articles

Sponsored