When breath becomes air... ரணமில்லா மரண காவியம்!Sponsoredபிரியமானவர்களுடன் நாம் செலவிட்ட தருணங்கள்தான், நமக்கான மழைக்காலம். உள்ளங்கை வெப்பத்தின் வழியே ஒருவர் மனதை ஒருவர் இதமாக்கி, `பிரிவு' என்ற சொல்லையே பொய்யாக்கிய காதல்காலமும்கூட. பால் கலாநிதி - லூசி தம்பதி, அப்படியானவர்கள். பிரிவின் சோக முடிச்சுகளை மெல்ல அவிழ்க்க முயலும் பலரில் லூசியும் ஒருவர். அவர், கணவர் பாலின் கனவை நிறைவேற்றிய கதைதான் இது.

பால் கலாநிதி, இலக்கியத்திலும் மருத்துவத்திலும் மிகுந்த ஆர்வம் உடையவர்; இரண்டு துறைகளிலுமே முத்திரைப் பதிக்க வேண்டும் என எண்ணியவர். இவரது பூர்வீகம், தமிழ்நாடு. இவரின் தந்தை ஒரு மருத்துவராக அமெரிக்காவில் குடியேறியதால், அமெரிக்கவாழ் தமிழரானார். முதுநிலை ஆங்கிலம் கற்றிருந்தாலும், தனது அறிவுப்பசிக்கான ஆகாரத்தை மருத்துவத் துறையில் தேடத் தொடங்கினார். மருத்துவத் துறையில் சிக்கல் நிறைந்த `நரம்பியல் துறையை’த் தேர்வுசெய்து வெற்றியும் பெற்றார். இந்தத் துறையில் இவர் ஆற்றிய சேவைக்காகவும் ஆய்வுகளுக்காகவும், `அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜிக்கல் சர்ஜரி’யின் உயரிய விருதைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 35. எண்ணற்ற ஆசைகளும் கனவுகளும்கொண்ட தன் அன்புக் காதலி லூசியுடன் வாழப்போகும் நாள்களை எண்ணி மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்தார். 

Sponsored


ஒருநாள், அவருக்கு தாங்க முடியாத முதுகுவலி. பரிசோதிக்கலாம் என மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு பாலுக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை நடந்தது. பாலுக்கு, `நுரையீரல் புற்றுநோய்' என ரிசல்ட் வந்தது. அது தன் வாழ்க்கைப் பக்கங்களையே எரிக்கும் என அவர் நினைக்கவில்லை. அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது அந்தத் தருணம்.  அவரால் நம்ப முடியவில்லை. புகழ்பெற்ற மருத்துவர் நோயாளி ஆனார்!

Sponsored


பால், மரணம் இயற்கையானது என்பதை உணர்ந்தவர்; அதைவிட வாழ்வின் உன்னதத்தை அறிந்தவர். அதனால்தான், மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த பல நோயாளிகளின் வாழ்வை  மீட்டுக்கொடுத்தார். தன்னை மட்டுமே நம்பி உள்ள லூசியை நினைத்து மனவேதனை அடைந்தார். `மரணம் எதிரே நிற்கிறபோது, வாழ்க்கை வாழத் தகுந்தது என முடிவுசெய்வது எது? இந்தக் குறுகிய வாழ்நாளில் எதைச் செய்ய வேண்டும்? இலக்கியத் துறையில் ஈடுபடுவதா... மருத்துவத்திலா?’ என்ற அதீத குழப்பமும், `வாழ்நாளில் ஒரு புத்தகமாவது எழுதிவிட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ' என்கிற தவிப்பும் அவரைச் சூழ ஆரம்பித்தன. `காதலி லூசியைத் திருமணம் செய்துகொள்வதா? உருகும் மெழுகுவர்த்தியின் வெளிச்சம் அவளுக்கு எவ்வளவு காலம் பயனளிக்கும்?’ என்ற எண்ணம், பாலை மேலும் உருக்க ஆரம்பித்தது.

லூசியும் தன் காதலனுக்குப் பக்கபலமாய் நின்றார். நோயின் பிடியில் சிக்கியுள்ள தன் காதலனுக்கு நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சினார். இருவரும் பாலின் குடும்பத்தாருக்கு நடப்புநிலைகுறித்து விளக்கினர். புற்றுநோய்க்கான சிகிச்சைகள் தொடங்கின. மருத்துவராகப் பணியாற்றிய அதே அறையில் நோயாளியாக சிகிச்சை பெற ஆரம்பித்தார் பால். சிகிச்சையால் பாலின் உடல் சோர்வுற்றது. அதிக நேரம் ஓய்விலேயே இருந்தார். தன் கடைசி நாள் நெருங்கி வருகையில், லூசியைத் தனிமையில் விட்டுச்செல்லப்போவதே மிகுந்த வருத்தமளிக்கும்போது, குழந்தையையுமா... என யோசித்தார் பால். தன் காதல் கணவனுக்கும் தனக்குமான உறவின் நினைவாக குழந்தை இருக்கும் என நம்பினார் லூசி.

புற்றுநோயின் தாக்கம் குழந்தைக்கு ஏற்படக் கூடாது `செயற்கைமுறைக் கருத்தரிப்பை’த் தேர்வுசெய்தனர். லூசி கருவுற்றபோது, சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பியிருந்தார் பால். பணிக்குத் திரும்பிய ஏழாவது மாதத்தில் புதிய புற்றுநோய்க் கட்டி பாலின் வலது நுரையீரலைப் பாதித்தது. மீண்டும் நோய்மையின் கோரப்பிடியில் சிக்கினார். பாலின் உடல் எடை மிகவும் குறைந்தது. லூசியின் பிரசவ நாள் வந்தது. பிரசவ அறையில் லூசியும், மற்றோர் அறையில் பாலும் கிடத்தப்பட்டனர். பிரசவ நேரம் நெருங்கியவுடன் பால், சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டு லூசியிடம் வந்தார். லூசியின் கையைப் பற்றியிருந்தார். ஜூலை 4 அன்று நள்ளிரவு 2:11 மணிக்கு எலிசபெத் அக்கேடியா (கேடி) ஜனித்தாள்.

பாலிடம் குழந்தையை நீட்டினாள், செவிலி. தன் குழந்தையைக் கையில் ஏந்த பாலின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தன் குழந்தையின் வரவு, பாலின்  மனதைப் புத்துணர்வுகொள்ளவைத்தது. தன் நீண்டநாள் கனவை நிறைவேற்ற எத்தனித்தார். எழுதத் தொடங்கினார். தன் வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களை, தன் மகளுக்கு தன் நினைவுகளைப் பரிசளிக்க  நினைத்தார் பால். வார்த்தைகள் நீண்டநாள் வாழக்கூடியவை. எனவே, பல கடிதங்களை அவளுக்காக விட்டுச்செல்ல முடிவுசெய்தார்.

2015-ம் ஆண்டு மார்ச் 9-ம் நாள், காலம் தன் கருணையற்ற முகத்தைக் காட்டியது. பால் லூசிக்கும் மகளுக்கும் தன் பிரியங்களைப் பரிசளித்து, நோய்க்கு தன் உடலைக் கொடுத்தார். பாலின் உடல் வில்லோ மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டு, சான்-டி-குரூஸ் மலைத்தெடரில் இருந்த ஒரு மைதானத்தின் விளிம்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அது, அமைதியும் அழகும் நிறைந்த இடம். 

லூசி, அடிக்கடி அங்கு செல்வாள். தன் ஆரூயிர் கணவனின் நினைவுகளுடன் அருவியில் விளையாடுவாள். அந்நீர், சில சமயம் நிலவின் குளுமையையும், பல சமயம் சூரியனின் கொடும் உஷ்ணத்தையும் கொண்டிருந்தது.

மரணம், முழுமையான இழப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது. நினைவுகள், வெற்றிடத்தைப் பூர்த்திசெய்யும் என்பது லூசியின் கருத்து. தன் காதல் கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்றத் துணிந்தார். புற்றுநோயுடன் பால் அவதிப்பட்ட ஒவ்வொரு நொடியும் பாலுக்கு மட்டுமல்ல, லூசிக்கும் வலித்தது. அந்த அடக்க முடியா துன்பத்தையும், தங்கள் அன்பின் நெருக்கத்தையும் பால் எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தை செழுமைப்படுத்த பயன்படுத்தினார்.

பாலின் கனவான `When Breath Becomes Air’ என்ற புத்தகத்தை லூசி முழுமைப்படுத்தினார். அதில், பாலின் முழுமையான வாழ்வைப் பொதிந்திருக்கச் செய்தாள். பால் மற்றும் லூசியின் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக, புத்தகம் முழுமையடைந்திருந்தது. லூசி, பாலின் நினைவுகளுடன் வாழ்வை வாழத் தொடங்கினார். மரணத்தால், மனிதனின் உடலை மட்டும்தானே அழிக்க முடியும்! நினைவுகள் பிடித்தமானவர்களின் இதயத்தில் தங்கிவிடுகின்றன. அவை அவ்வளவு எளிதில் அழியக்கூடியவையா என்ன!Trending Articles

Sponsored