மீத்தேனையும் எத்திலினையும் வெளியிடும் பிளாஸ்டிக் பைகள்... பிளாஸ்டிக்கின் இன்னொரு தீமை!Sponsoredஇயற்கையும் இயற்கையைப் பாதுகாக்கும் விழிப்பு உணர்வும்தான் இன்றைய நிலைமைக்கு எல்லோருக்குமான கடமையாக மாறி வருகிறது. தெரிந்தோ தெரியாமலோ சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைப்பவற்றுக்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளோம். புவி வெப்பமயமாதல், பசுமை இல்ல வாயுக்கள், கால நிலை மாற்றம் இந்த மூன்றும் அடுத்த தலைமுறைக்கு மாபெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால் அவற்றுக்குக் காரணமாக இருக்கும் நம்முடைய செயல்களை முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ள விழிப்பு உணர்வு நடந்து வருகிறது. அதேபோல் இந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் மூலங்களையும் கண்டறியும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அப்படி சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று நாம் இன்னும் விழிப்பாக நடக்க வேண்டியதன் அவசியத்தைக் கோரியுள்ளது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் மீத்தேனையும் எத்திலினையும் (பசுமை இல்ல வாயுக்கள்) வெளிப்படுத்தக் கூடியவை என அந்த ஆய்வு கூறுகிறது. 

ஹவாய்ப் பல்கலைக்கழகம் (University of Hawaii) மற்றும் கடல், புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியைச் (School of Ocean and Earth Science & Technology (SOEST)) சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பிளாஸ்டிக்கானது வளிமண்டலத்துடனும் மற்ற பொருள்களுடனும் வினைபுரிந்து எந்த வகையான வாயுக்களை வெளியிடுகிறது என்பதை ஆய்வு செய்ய நினைத்தனர் ஆய்வாளர்கள். பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தும் ஏழு பொதுவான பிளாஸ்டிக் மாதிரிகளை ஆய்வுக்காகச் சேகரித்தனர் ஆய்வுக்குழுவினர். இந்த மாதிரிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் மாதிரிகளும் கடலில் சென்று சேர்ந்த பிளாஸ்டிக் மாதிரிகளும் சாதாரணமாக மண்ணில் கிடந்த பிளாஸ்டிக் மாதிரிகளும் கலந்திருந்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்திக் கண்காணிக்கும்போது கடல்நீரில் இருந்தாலும் சாதாரணமாக வளிமண்டலத்துடன் வினைபுரிந்தாலும் அனைத்து மாதிரிகளும் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடவே செய்கின்றன. பசுமை இல்ல வாயுக்களில் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய மீத்தேனையும் எத்திலினையுமே அதிகம் வெளியிடுகின்றன. குறைந்த அடர்த்தியுடைய பாலிஎத்திலீனைக் கொண்ட பிளாஸ்டிக்குகள் மற்ற அனைத்து பிளாஸ்டிக்குகளை விடவும் அதிகமான அளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகின்றன. ``குறைந்த அடர்த்தியுடைய பாலிஎத்திலீன் (low density polyethylene (LDPE)) பிளாஸ்டிக் என்பது பிளாஸ்டிக் உற்பத்தியில் முக்கியமான ஒன்று. மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு குப்பைகளாகத் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்குகள் இவை"  என்கிறார் ஹவாய் பல்கலைக்கழக முன்னணி ஆய்வாளர் சாரா-ஜீன் ரோயர் (Sarah-Jeanne Royer).

Sponsored


குறைந்த அடர்த்தியுடைய பாலிஎத்திலீன் பிளாஸ்டிக் அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் அதிக அளவிலான மீத்தேனையும் எத்திலீனையும் வெளியேற்றுகின்றன. இந்த ஆய்வானது ப்ளோஸ் ஒன் (PLOS One) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சாரா மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் சிறிய துண்டுகளாக இருக்கும் பிளாஸ்டிக்கையும் ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் LDPE பிளாஸ்டிக் தூளானது LDPE துகள்களைவிட 500 தடவை அதிகமாக மீத்தேனையும் எத்திலீனையும் வெளியேற்றுகின்றன. LDPE பிளாஸ்டிக் என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மெல்லிசான பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன் கைகள் போன்றவைதான். பிளாஸ்டிக்கிலிருந்து வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு என்பது மிகவும் குறைவான ஒன்றுதான். பசுமை இல்ல வாயுக்களின் முக்கிய மூலங்களையெல்லாம் விடவும் பிளாஸ்டிக்குகள் குறைவுதான். ஆனால், தொடர்ந்து நீண்ட நாள்களாக வெளியேறுவதால் பசுமை இல்ல வாயுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.

Sponsored


உலகமே பிளாஸ்டிக் யுகமாக மாறிவிட்ட தற்போதைய நிலையில் இப்படியான ஆய்வு எல்லோரையும் பிளாஸ்டிக் பயன்பாட்டிலிருந்து விலகியிருக்கச் சொல்கிறது. கடலிலும் மண்ணிலும் வளிமண்டல காற்றிலும் இல்லாமல் வேறு இடங்களில் வைப்பதன் மூலம்தான் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குவதைத் தவிர்க்கலாம். மேலும், இந்த ஆய்வானது நம்மிடையே இருக்கும் கழிவு மேலாண்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. வீட்டில் பயன்படுத்தும் பல்வேறு குப்பைகளும் கடைசியில் கடலுக்குத்தான் போய்ச் சேர்கின்றன. ஏற்கெனவே பிளாஸ்டிக் பொருள்கள் கடலையும் கடல் உயிரினங்களையும் பெருமளவில் மாசுபடுத்தியும் பாதித்தும் வருவதாக ஆய்வுகளும் சாட்சியங்களும் சொல்கின்றன. இப்போது அவை காலநிலை மாற்றத்திலும் பிரதிபலிக்கிறது. எனவே, பிளாஸ்டிக் இல்லாமல் நாம் இல்லை என்ற நிலைமைதான் ஏறக்குறைய நிகழ்கிறது. அப்படி இருக்கும்போது இந்த ஆய்வு முடிவுகளுக்காகவது மாற்று முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.   Trending Articles

Sponsored