பாக்கு மட்டையில் பார்சல் பாக்ஸ்! - தஞ்சை இளைஞரின் அசத்தல் முயற்சிSponsoredபிளாஸ்டிக் கப்புக்கு மாற்றாக பாக்கு மட்டையில் டீ கப் மற்றும் உணவு பார்சல் கட்டுவதற்கான பெட்டி ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த காலித் அகமத் என்பவர்.

பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதற்குத் தடைவிதித்திருக்கிறது தமிழக அரசு. அதேநேரம், பிளாஸ்டிக் கப்புக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட பேப்பர் கப்புகளிலும் ரசாயன கோட்டிங் இருப்பதால், உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுகிறது எனவும் மருத்துவ உலகினர் பேசி வந்தனர். உணவுகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் அலுமினிய கோட்டிங் கலந்த பெட்டிகளும் பாதிப்பை ஏற்படுத்திவந்தன. இவற்றுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் டீ கப், ஸ்பூன் அடங்கிய பார்சல் பாக்ஸ் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார் காலித் அகமத்.

Sponsored


அவரிடம் பேசினோம். `` நான் பாக்குமட்டை தட்டு தயார் செய்து மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்து வருகிறேன். சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட நான் அதைப் பற்றிய விஷயங்களில் ஆர்வமாகப் படித்தும் கேட்டும் தெரிந்துகொண்டு வந்தேன். பிளாஸ்டிக்கால் நமக்குப் பல வகைகளில் கேடு உண்டாகிறது. நாம் சாப்பிடும் விஷயத்தில்கூட பிளாஸ்டிக் நம்மை ஆக்கிரமித்திருக்கிறது. பிளாஸ்டிக் பற்றிய விழிப்பு உணர்வு கூடியிருக்கிற இந்த நேரத்தில்கூட பலர் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தடுக்க முதலில் பேப்பர் கப், பார்சல் பாக்ஸ் ஆகிய பொருள்களைப் பாக்கு மட்டை கொண்டு தயாரிக்கும் பணியில் இறங்கினேன். இதற்காக 2 லட்சம் செலவில் புதிய மிஷின் வாங்கியதோடு டீ கப் வடிவிலான அச்சு, பார்சல் பாக்ஸ் போன்ற அச்சுக்களை எல்லாம் வரவழைத்து அதைத் தயாரிக்கும் பணியில் இறங்கினேன். 

Sponsored


இதற்குமுன் பாக்கு மட்டை டீ கப் தயாரிக்கப் பலர் முயற்சி செய்தும் தோல்வியடைந்து விட்டனர். டீ கப் யார் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை ஆனால், பாக்கு மட்டையில் பார்சல் பாக்ஸை நான்தான் முதலில் செய்தேன். ஒரு பாக்குமட்டை டீ கப் 75 பைசாவுக்கு விற்பனை செய்கிறேன். 500 கிராம் கொள்ளவு கொண்ட பார்சல் பாக்ஸ் ரூபாய் பத்துக்கும் ஒரு கிலோ அளவு கொண்ட பாக்ஸ் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு உடலுக்குத் தீங்கும் ஏற்படுத்துவதில்லை.மேலும் இவற்றை மறுசுழற்சி செய்து கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். சுற்றுலா செல்பவர்கள் ஆங்காங்கே தூக்கிப் போட்டால்கூட மண்ணுக்கு உரமாக மாறிவிடுமே தவிர எந்த தீங்கையும் ஏற்படுத்தாது" என்றார் நெகிழ்ச்சியுடன்.Trending Articles

Sponsored