ஸ்டைலா, கெத்தா ரீஎன்ட்ரி கொடுக்கும் ஹோண்டா சிவிக்!



Sponsored



பைக்கில் ரீசேல் கிங் என்றால், அது  RX100. காரில் என்னவென்று யோசித்தால் ஹோண்டா சிவிக்தான் ஞாபகம் வரும். அதிக பர்ஃபாமன்ஸ், குறைந்த மெயின்டெனன்ஸ், ஸ்போர்ட்டி ஸ்டைல், உயரம் குறைவான சீட்டிங் பொசிஷன் என ஆறு ஆண்டுக்கு முன்பே அனைவரின் மனதிலும் ஒட்டிக்கொண்ட கார் இது. டொயோட்டா கரோலா மற்றும் செவர்லோ க்ரூஸ் கார்களுக்கு டஃப் காம்ப்படிஷனாக இருந்தபோதும், 2012-ம் ஆண்டு சிவிக்கின் விற்பனையை நிறுத்திவிட்டது ஹோண்டா. அன்று முதல் இன்று வரை ரீசேல் மார்க்கெட்டின் மதிப்பான பொக்கிஷமாக மாறிவிட்டது சிவிக்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது இந்த ஆண்டு மூன்று கார்களை வெளியிடவிருப்பதாகக் கூறியிருந்தது ஹோண்டா. அதில் அமேஸின் விற்பனை ஆரம்பித்துவிட்டது. சிஆர்வி, அக்டோபர் மாதம் வெளியாகப்போகிறது. மூன்றாவது காராக 10th Gen சிவிக் ஃபேஸ்லிஃப்ட் வரப்போகிறது. சிவிக் ஃபேஸ்லிஃப்ட் காரை ஹோண்டா சமீபத்தில் காட்சிப்படுத்தியுள்ளது.

Sponsored


Sponsored


முன்பு விற்பனையில் இருந்த இந்தக் காரைவிட, 2018 சிவிக் ஃபேஸ்லிஃப்ட் இன்னும் ஸ்போர்ட்டியாக மாறிவிட்டது. முன்பக்கம் இருந்த க்ரோம் பாருக்குப் பதிலாக இப்போது பியானோ பிளாக் நிற wing வருகிறது. முன்பைவிட ஷார்ப்பான டிசைனில் பம்பர், பனி விளக்குகளில் க்ரோம் ஃபினிஷ் மற்றும் ரியர் பம்பரில் க்ரோம் ஸ்டிரைப் என முந்தைய காரைவிட ஸ்டைல் கூடியிருக்கிறது. சிவிக்கின் வரிசையில் முதன்முறையாக ஸ்போர்ட் என்ற புதிய வேரியன்ட்டைக் கொண்டுவருகிறார்கள். இதில் பெரிய 18 இன்ச் வீல், ஸ்பிளிட்டர் ஸ்டைல் ரியர் பம்பர், ரியர் ஸ்பாய்லர் மற்றும் கறுப்பு நிற ஹைலைட்டுகள் இந்த வேரியன்டின் சிறப்பு. ஸ்போர்ட் வேரியன்ட் இந்தியாவுக்கு வருமா என்பது சந்தேகம்தான்.

காரின் உள்பக்கம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன்கூடிய புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வரப்போகிறது. பாதுகாப்பு வசதியாக கார் எதிலும் மோதாமல் இருக்க கொல்லிஷன் வார்னிங், தானாகவே பிரேக் போடும் மிடிகேஷன் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், அடப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் எல்லா வேரியன்ட்களிலும் வரப்போகின்றன.

இந்தியாவில் வரும் சிவிக் காரில் 140 bhp பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல், 182 bhp பவர் தரக்கூடிய 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 120  bhp பவர் தரக்கூடிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் வரவிருக்கிறது. இதற்கு கூட்டணியாக 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் வரும். புதிய சிவிக் அடுத்த ஆண்டின் முதல் பாதியிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 16 - 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும். புது சிவிக் ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரோலா ஆல்டிஸ் மற்றும் ஹூண்டாய் எலென்ட்ராவுடன் போட்டிப்போடவுள்ளது. ஹோண்டா சிவிக், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பிரபலமான கார். இதன் நடைமுறை அம்சங்கள் மற்றும் இதன் குறைந்த விலை போன்ற சிறப்பம்சங்களால் இந்தக் கார் சாலையில் மட்டுமல்ல, வீடியோ கேமிலும்கூட இளைஞர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. ஸ்போர்ட்டியான லுக், ஹோண்டாவின் தரம் மற்றும் காரின் டிரைவிங் எக்ஸ்பிரியன்ஸ் சிவிக்கை இந்தியாவில் எவர்கிரீன் காராக வைத்துள்ளன.



Trending Articles

Sponsored