பப்ரு வாகனன் யார்... பாரதப் போருக்குப் பின் என்ன நடந்தது: சென்னை அண்ணாநகரில் களைகட்டிய கூத்து!Sponsoredநிச்சலனம் நிறைந்து மிதந்து கிடக்கும் இரவுகள் அற்புதமானவை. இரவுகள் ரகசியமானவையும்கூட. கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் இரவுகள் கற்பனையின் உலகம் என்றுதான் கூற வேண்டும். சில நாட்டுப்புறக் கலைகள் இந்த இரவில்தான் நடத்தப்படுகின்றன. அப்படி ஓர் இரவில்தான் சென்னையில் `தெருக்கூத்து' நடந்தது. 

``சென்னையின் அண்ணாநகர்ப் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயிலில் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாகத் தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டுவருகிறது'' என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள். அந்த இரவைத் தனதாக்கிக் கலைஞர்கள் கூத்துக்கட்டினார்கள்.

தெருக்கூத்து சுமார் 8 மணி நேரம் வரை நிகழ்த்தப்படும். ஒரு குழுவில், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் எனச் சுமார் 15 பேர் இருப்பர். அரிதாரம் பூசிக்கொண்டு ஆடியும், துதிகளைப் பாடியும், இடையிடையே நகைச்சுவையாகக் கருத்துகளைச் சொல்வதும் இதன் வடிவமாகும். இதைக் `கட்டியங்காரன்' வழிநடத்துவார். பல இதிகாசப் புராணங்களைப் பாடலாகப் பாடி மக்களுக்கு எடுத்துரைப்பதே இதன் நோக்கம். இதன்படி மகாபாரதப் போர் முடிந்த பிறகு நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்டதுதான் `பப்ரு வாகனன்' தெருக்கூத்து.

Sponsored


சரி, பப்ரு வாகனன் யார், போருக்குப் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா என்னதான் கதை, இதோ...

Sponsored


``துரியோதனனுக்கும் பாண்டவருக்கும் ஏற்பட்ட சண்டையில் துரியோதனக் கூட்டம் அழிந்துவிடுகிறது. பிறகு, நாட்டை பாண்டவர்கள் ஆண்டு வருகின்றனர். நாட்டு மன்னனாக இருந்தால் நாட்டைச் சுற்றி, நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் தர்மமகாராஜா நாட்டைச் சுற்றி வருகிறார். அப்போது குருக்ஷேத்திரம் என்ற போர் நடந்த இடத்தைப் பார்க்கும்போது, எங்கும் உதிரம் சிந்திக் கிடக்கிறது. இதைப் பார்த்ததும் பிரம்மகீர்த்தி பிடித்துவிடுகிறது தர்மருக்கு. இதை, பாண்டவர்களின் தாத்தா வேதவியாசர் தர்மரிடம் கூறுகிறார். பிறகு, ``இதற்கு யாகம் செய்ய வேண்டும்'' என்றும் கூறுகிறார்.

பத்ராவதி நாட்டில் யவர்னாசுரனிடம் உள்ள பஞ்சவர்ணக் குதிரையைக் கொண்டுவந்து பட்டம் கட்டி, ``இந்தக் குதிரையைப் பார்த்தவர்கள் பொன், பொருள் தரலாம். இதன் மீது ஏறி சவாரி செய்தால், கரம்-சிரம் வெட்டப்படும்'' என்று எழுதி அனுப்பினர். இதை அர்ஜுனன் பின்தொடர்ந்து செல்கிறார். 

அர்ஜுனனுக்கு எட்டு மனைவிகள். அவர்களுள் ஒருவர்தான் சித்திராங்கதை. இவருக்குப் பிறந்தவர்தான் பப்ரு வாகனன். இவரை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் உள்ள கோட்டையில் வளர்த்தெடுக்கிறாள் தாய் சித்திராங்கதை. தனக்கு 18 வயதானதும் கோட்டையிலிருந்து வெளியே வந்துவிடுகிறான் பப்ரு வாகனன். வெளியே சுற்றும்போது கானகத்தில் பஞ்சவர்ணக் குதிரையைக் காண்கிறான். இந்தக் குதிரை அவனைக் கவர, அதைப் பப்ரு வாகனன் பிடிக்கிறான். பிடித்ததும் அதில் எழுதியுள்ளதைப் படிக்கிறான். எவ்வளவு தைரியமானவனாக இருந்தால் இதைப் எழுதியிருப்பான் என நினைத்து, குதிரையைக் கட்டிவிடுகிறான். அர்ஜுனன் வந்து பார்த்ததும் இருவருக்கும் சண்டை நடக்கிறது. அர்ஜுனன் இதில் தோற்க ``உன்னுடைய தந்தை யார்” என்கிறார்.

பப்ரு வாகனன் குழம்பிப்போக, ``அப்படியெல்லாம் ஒன்றும் எனக்குத் தெரியாது'' என்கிறான். ``என் அம்மா உத்தமியாக இருந்தால், இவன் சாக வேண்டும்; இல்லையெனில் நான் சாக வேண்டும்'' என்கிறான் பப்ரு வாகனன். சண்டையில் அர்ஜுனனின் தலை கீழே உருண்டது. 

பப்ரு வாகனன் அம்மாவிடம் சென்று, ``என்னுடைய தந்தை யார்'' என்று கேட்க, அம்மாவோ, அவர் காசிக்குச் சென்றதாகக் கூறுகிறாள். இதை நம்பாத பப்ரு வாகனன், உடனே கோபத்தில் தன்னை மாய்த்துக்கொள்ளச் செல்கிறான். மகனை இழக்க மனமில்லாத தாய், எல்லாவற்றையும் மகனிடம் கூறுகிறாள். ``ஏன் திடீரென இதை கேட்கிறாய்'' என்று அவள் கேட்க, பப்ரு வாகனன் நடந்தவற்றையெல்லாம் கூறி, வெட்டிய தலையை எடுத்துக் காண்பிக்கிறான். ``இவர்தான் உன் தந்தை'' என்று கூற, பப்ரு வாகனன் அதிர்ச்சியடைந்தான்.

பாஞ்சாலியைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் கூற, பகவானை வணங்கச் சொல்லிவிட்டு போய்விடுகிறாள். மற்ற மனைவிகளும் வர, சித்திராங்கதையை அனைவரும் அடிக்கின்றனர். உடனே, பகவான் தோன்றி ``நாகலோகம் சென்று நாகத்தீர்த்தம் எடுத்துவந்து உடம்பில் தெளித்தால் அர்ஜுனன் மீண்டும் உயிர்பெறுவார்'' என்கிறார். தீர்த்தம் கொண்டுவரப்பட்டுத் தெளிக்கப்பட்டதும் அர்ஜுனன் மீண்டுவருகிறார். மீண்டதும் எல்லாம் தெரியவருகின்றன.

பகவானிடம் அர்ஜுனன், ``நான் ஏன் மாண்டேன்'' என்று கேட்க, ``13-ம் நாள் சண்டையில் பீஷ்மாச்சாரியைக் கொன்றாய் அல்லவா, அவர் இறக்கும்போது `அம்மா' எனக் கத்திவிட்டு இறந்தார். அவருடைய அம்மா கங்கை. அவள் இட்ட சாபத்தால்தான் உன் தலை பூமியில் உருண்டது” என்று கூறினார்.

இந்தச் சாபத்தால்தான் இந்தக் கூத்தே நடக்கிறது - இதுதான் பப்ரு வாகனன் என்ற தெருக்கூத்தின் கதை. இதில் தர்மர் மிகவும் சாந்தமானவர் என்பதால், அமைதியான முகத்துக்குரிய அரிதாரம் பூசியும்; பீமன் கோபமானவர் என்பதால் கோப முகத்துக்கான அரிதாரம் பூசியும் கூத்தை எடுத்துச் சென்றனர். பிறகு, காட்சிகளுக்கு ஏற்ப சகாதேவன், பப்ரு வாகனன், அர்ஜுனன், பஞ்சவர்ணக் குதிரை, சித்திராங்கதை, பாஞ்சாலி ஆகியோர் வந்து செல்வர். கட்டியங்காரன் இதை வழிநடத்திச் செல்வார். 

நிலவுடனும் விண்மீன்களுடனும், மழைச்சாரல்களால் மலர்ந்த மண்வாசனையோடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெருக்கூத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். அந்த இரவு, பப்ரு வாகனனையும் அர்ஜுனனையும் நினைவுபடுத்தியபடி விடிந்தது.Trending Articles

Sponsored