"தண்ணீர் தனியார்மயம் ஆகலாமா?” - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 10Sponsored"தண்ணீர்தான் இன்றைய நவீனகாலத்தின் மிக முக்கியமான மூலப்பொருள். மக்களுக்கான அடிப்படைத் தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயம் ஆக்கவேண்டுமா என்ற கேள்வி எழுந்துகொண்டேயிருக்கிறது. இந்த விஷயத்தில் இரண்டு கண்ணோட்டங்கள் உள்ளன. தண்ணீர் பொதுச்சொத்து. அதை அனைவருக்குமானதாக, மக்களின் அடிப்படை உரிமையாகவே வைத்திருக்கவேண்டும். இது என்னைப் பொருத்தவரை மிகத்தீவிரமானது. அதற்கு அவசியமில்லை. அது சரியுமில்லை. இன்னொரு கண்ணோட்டம் உள்ளது. உணவுப் பொருட்களைப் போலவே தண்ணீரும் விற்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் அதுவே சிறந்ததென்று நான் நினைக்கிறேன்."

பீட்டர் ராபெக் லெட்மதே (Peter Brabeck-Letmathe) என்பவரால் மேற்கண்ட கருத்து 2008-ம் ஆண்டு சொல்லப்பட்டது. அவர் 1997 முதல் 2008 வரை நெஸ்ட்லே நிறுவனத்தின் சி.இ.ஓ-வாகப் பதவி வகித்தவர். தண்ணீர் மனிதர்களின் அடிப்படை உரிமை இல்லையென்று அவர் கூறுவதாகப் பல்வேறு தரப்புகளிலிருந்து குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் அவருக்கு எதிராக அப்போது கிளம்பின.

இது நடந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. அவரது கருத்துக்கு விரோதமின்றி நெஸ்ட்லே நிறுவனமும் நடந்துகொண்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் அதுவும் தண்ணீர் இருப்பு குறைவாகவுள்ள பகுதிகளில் அவர்களின் கைரேகைகள் பதிந்தன. அந்நிறுவனம் தன் அடுத்த குறியாக நிர்ணயித்திருப்பது, தென் அமெரிக்காவின் கௌரானி நீர்த்தேக்கம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கம்.

Sponsored


Sponsored


முந்தைய அத்தியாயங்கள்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இந்த நீர்த்தேக்கத்தை நெஸ்ட்லே நிறுவனமும் கொக்கோ கோலா நிறுவனமும் இணைந்து தனியார்மயமாக்கப் போவதாகத் தென் அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டன. அந்தச் செய்தியை அவ்விரு நிறுவனங்களுமே மறுத்தன. ஆனால், அதேசமயம் அவையிரண்டும் அந்நீர்த்தேக்கத்தின் நீர்வளத்தை ஆய்வுசெய்வதை ஒப்புக்கொண்டன. அது மக்களுக்குக் கிடைக்கும் நீரின் தரம், சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி இதைச் செய்வதாகக் கூறினார்கள். உலகின் இருபெரும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு எந்தவித லாபமும் தராத சமூக நலனை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்றுவதாகக் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு கடந்துபோக முடியாது. இரண்டு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளின் பிரேசில் அதிபர் மைக்கெல் டெமெர் (Michel Temer) உடனான சந்திப்பையும்கூட அந்நாட்டுச் சூழலியலாளர்களால் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியவில்லை. அவர்களின் சந்திப்பின் விவரங்கள் அதிபர் அலுவலக அதிகாரிகள் சிலர் மூலமாகப் பிந்தைய நாட்களில் கசிந்தன. பிரேசில், அர்ஜெண்டினா, பாராகுவே, உருகுவே போன்ற நாடுகளுக்கு நீராதாரமாக விளங்கும் கௌரானி நீர்த்தேக்கத்தின் பெரும்பகுதி பிரேசிலில்தான் உள்ளது. அதைத் தனியார் பயன்பாட்டுக்கு முற்றிலுமாக விடுவதற்கான நெறிமுறைகளை வகுத்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதோடு, அந்த நீர்த்தேக்கத்தை 100 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடப்போவதாகவும் சொல்லப்பட்டது. இது தற்போது அந்நாட்டுச் சூழலியலாளர்களின் மிக முக்கியப் பேசுபொருளாக உள்ளது. வெளிப்படையாக அந்நிறுவனங்கள் இதை மறுக்கின்றன. அரசாங்கத்துடனான அவர்களின் தொடர்பு தொடர்ச்சியாக இருந்துகொண்டிருந்தாலும் எந்தப் புதிய முயற்சிகளையும் செய்யாமல் காலம் தாழ்த்துவது அந்நாட்டு மக்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் தனியார் உடைமையாக்கப் படுவது குறித்த பேச்சுகள் தென் அமெரிக்காவில் இருக்கும் மற்ற நீராதாரங்களின் பாதுகாப்பின்மையாகப் பார்க்கப்படுகிறது.

சுமார் 12லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பிரேசிலில் மட்டுமே இந்த நீர்த்தேக்கம் பரவியுள்ளது. இதைத் தனியார் மயமாக்குவதால் எதிர்காலச் சந்ததியினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் சூழலியல் ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும் இதுதொடர்பாகத் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

"கோக்கும் நெஸ்ட்லேவும் கௌரானி நீர்த்தேக்கத்தை விலைக்கு வாங்கப் பார்க்கின்றன. இதை நிறுத்தியாக வேண்டும். இல்லையேல் பயங்கரமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்" என்கிறார் சுற்றுச்சூழல் சார்ந்த போராளிகளோடும், சூழலியல் என்.ஜி.ஓ-க்களோடும் இணைந்து இயங்கிவரும் ப்ளூ பிளானட் புராஜக்ட் (Blue Planet Project) என்ற அமைப்பின் தோற்றுனரும் நிறுவனருமான மாடே பார்லோவ் (Maude Barlow). 2016-ம் ஆண்டிலிருந்தே இதற்கான ஆதரவை அந்நாட்டு அரசாங்க உறுப்பினர்களிடம் இந்த நிறுவனங்கள் நாடிவருகின்றன. அவர்கள் நீர்நிலைகளில் குழாய்கள் அமைத்து அதன் நீரைப் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் உலகப் பொருளாதார மன்றத்திலும் ஜனவரியில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரேசில் அதிபருக்கும் நெஸ்ட்லே, கோக், ஆன்ஹூசெர் புஷ் (Anheuser-Busch), டோவ் கெமிக்கல் (Dow chemical) போன்ற நிறுவனங்களுக்கும் இடையில் அங்கு தனிப்பட்ட முறையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

2030 நீர்வளங்கள் மசோதாவில் இந்த நிறுவனங்களின் பங்கு குறித்து பிரேசில் டி ஃபாடோ (Brazil De Fato) என்ற பத்திரிகையில் அந்நாட்டில் நீர் உரிமைகளுக்காகப் போராடிவரும் ஃப்ராங்க்ளின் ஃப்ரெட்ரிக் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இதுவும் சில கேள்விகளை எழுப்புகின்றன. அந்த மசோதா அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் விநியோகத்தில் இணைந்து ஈடுபடுவது குறித்துப் பேசுகிறது. அதற்காக அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் முதன்மையானவை நெஸ்ட்லேவும், கொக்கோ கோலாவுமே. இது வளரும் நாடுகளின் நீர்வளத்தைத் தனியார்மயமாக்குவதை மறைமுகமாக ஆதரிக்கின்ற செயலாகும். நெஸ்ட்லேவின் இந்த முயற்சிகள் குறித்து 2016-ம் ஆண்டு செப்டம்பரிலேயே பார்லோவ் எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிப் பேசும்போது 2016-ம் ஆண்டில் ரியூட்டர்ஸ் இதழில் வெளியான ஒரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. பிரேசிலில் எண்ணெய், மின்சக்தி உரிமம், கட்டுமான முயற்சிகள் போன்றவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்போவதாக அதிபர் மைக்கெல் டெமெர் அறிவித்தார். அதேசமயம் அதோடு சேர்த்து போர்ட்டோ அலெக்ரே, சால்வடார், ஃப்ளோரியனாப்பளிஸ் (Florianopolis), ஃபோர்ட்டலெஸா போன்ற இடங்களிலிருக்கும் அரசாங்க விமான நிலையங்கள் செயல்படுவதற்கான உரிமங்களையும் தனியாருக்கு விற்கப்போவதாகத் தற்போது அறிவித்துள்ளார். மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளின் சாலை மேலாண்மையையும் விற்கத் திட்டமிட்டு வருகின்றது அந்நாட்டு அரசாங்கம். இவற்றுக்குத் தடையாக இருப்பது ஒன்றுமட்டுமே. மைக்கெல் டெமெருக்கு முந்தைய அதிபரான டில்மா ரூசெஃப் (Dilma Rousseff) வெளிநாட்டு முதலீடுகளுக்கு விதித்திருந்த சில பொருளாதாரக் கட்டுப்பாட்டுச் சட்டங்களே. அந்தச் சட்டத்திலிருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டால் இவற்றைச் சுலபமாகச் செய்துவிடலாம். அதற்கான முயற்சிகளைச் செய்துவருகிறார் டெமெர். விஷயம் என்னவென்றால் அதை அவர் தளர்த்தும்போது மேற்கூறிய உரிமங்களோடு சேர்த்துத் தனியார் மயமாக்கப்படும் பொதுச்சொத்துகளின் பட்டியலில் தற்போது கௌரானி நீர்த்தேக்கமும் சேர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 18 முதல் 23-ம் தேதிவரை பிரேசிலில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் உலகப் பொருளாதார மன்றம் உட்பட உலக வங்கி போன்ற பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் தண்ணீரை விற்பனைப் பொருளாக்குவது குறித்தும், அதை உலகச் சந்தையில் லாபகரமாகக் கொண்டுசேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவையனைத்தும் கௌரானியைத் தனியார் உடைமையாக மாற்றும் அபாயத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஏற்கனவே பன்னாட்டு நிறுவனங்கள் அதன் நீரைச் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்திக் கொண்டுதானிருக்கின்றன. அப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி மொத்த மனித இனத்துக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது நீர். அத்தகைய நீர்நிலை மொத்தமும் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டால்!

Photo Courtesy: Jenny Avins

பன்னாட்டு நிறுவனங்களின் தனியார்மய வியூகங்களை எதிர்த்துப் போராடுவதற்காகத் தற்போது அந்நாட்டுச் சூழலியல் ஆர்வலர்கள் குடிமக்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தனக்கென்னவென்று தயக்கத்தோடு தள்ளி நிற்கும்வரை இது மாறாது. அவர்கள் ஒதுங்கி நிற்கும்வரைப் பேராசை மிகுந்த தனியார்கள் (கார்ப்பரேட், சிறு முதலாளிகள் என இதில் வித்தியாசம் இல்லை) சுற்றுச்சூழலைச் சுரண்டிக் கொண்டேதானிருப்பார்கள். தற்கால மற்றும் எதிர்காலச் சந்ததிகளுக்கான விலைமதிப்பற்ற இயற்கை வளங்களைத் திருடுவார்கள். தண்ணீர், மக்களுக்காகவும் சுற்றுச்சூழல் நன்மைகளுக்காகவும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அந்தக் கடமையிலிருந்து அரசாங்கம் தவறும்பட்சத்தில் அந்தக் கடமை மக்களால் முன்னெடுக்கப்பட்டு அரசுக்கு உணர்த்தப்பட வேண்டும்.Trending Articles

Sponsored