புரொஜெக்டர் இல்லாத திரையரங்கம் - சாம்சங்குடன் இணைந்து பி.வி.ஆர் முயற்சி



எவ்வளவோ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும் வெளிச்சம் எதுவும் இல்லாத ஓர் அறையில் புரொஜெக்டர் ஒளியில் நமக்கு அபிமான படத்தைப் பெரிய திரையில் பார்ப்பதே அன்று முதல் இன்று வரை திரையரங்குகளின் சிறப்பாக இருந்து வருகிறது. இப்படி நீண்ட நாள்களாக இருந்து வந்த புரொஜெக்டர் முறையை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பி.வி.ஆர் நிறுவனம். இந்தியாவின் முதல் LED திரையரங்கத்தை சாம்சங் நிறுவனத்தின் உதவியுடன் டெல்லியில் தொடங்கியுள்ளது.

Sponsored


திங்கள் அன்று டெல்லியில் திறந்து வைக்கப்பட்ட இந்தத் திரையரங்கம் சாம்சங் நிறுவனத்தின் ஓனிக்ஸ் சினிமா என்ற தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட LED திரையின் மூலம் படங்களைத் திரையிடும். வெகுசில நாடுகளில் மட்டுமே உள்ள இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் சரியான நிறங்களுடன் நல்ல தெளிவான, உயிரோட்டமுள்ள முறையில் படங்களைக் காணமுடியும் என சாம்சங் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் திரை HDR வசதி கொண்டதாக இருக்கும், இதன் மூலம் புரொஜெக்டர்கள் அளிப்பதைவிட 10 மடங்கு கூடுதல் பிரகாசத்துடன் படங்களை நாம் பார்க்கமுடியும். ஆடியோவிலும் 'ஓனிக்ஸ் சவுண்ட்' என்ற புதிய தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது இந்தத் திரையரங்கம். இது நடைமுறையில் இருக்கும் டால்பி தொழில்நுட்பங்களுக்கு நிகராக ஜே.பி.எல் நிறுவனமும், சாம்சங் ஆடியோ லேப்ஸும் இணைந்து வடிவமைத்ததாகும்.

Sponsored


Sponsored


இதைப் பற்றி பேசிய சாம்சங் இந்தியாவின் துணைத் தலைவரான புனீத் சேத்தி ``சினிமாவை மிகவும் நேசிக்கும் நாடு இந்தியா. இங்கு துடிப்பான ஒளியும், ஒலியும் கொண்டே படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை முடிந்தளவில் சிறப்பான முறையில் ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லத்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. உலகின் வெகுசில இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது இங்கும் பெரும் வரவேற்பு பெறும் என நம்புகிறேன்" என்று கூறினார்.இதை முதலில் இந்தியாவுக்குக் கொண்டுவந்துள்ளது தங்களுக்குப் பெருமை அளிப்பதாக பி.வி.ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு புரொஜெக்டர்களுக்குப் பழக்கப்பட்ட நம் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பது வரும் நாள்களில் தெரியும். நல்லதாக இருந்தால் நம்மூரிலும் விரைவில் இந்தத் தொழில்நுட்பத்தில் படங்கள் பார்க்கலாம்.



Trending Articles

Sponsored