``நியாண்டர்தால் அம்மா, டெனிசோவன் அப்பா!" - முதல் கலப்பினத் தலைமுறை டென்னி



Sponsored



னித இனத்தின் பரிணாமப் பாதையில் பல்வேறு இனங்கள் இருந்தன. பெரிய கரிய உருவங்கள் அனைத்துமே யானைதான். இருப்பினும் அவற்றின் தோற்றம், வளர்ச்சி, வாழிடம் ஆகியவற்றை வைத்து அவை பல துணை இனங்களாக (Sub species) வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதைப் போலவே மனித இனத்திலும் ஹோமோ எரக்டஸ் (Homo erectus), ஹாப்பிட் (Hobbit), நியாண்டர்தால் (Neanderthals), டெனிசோவன் (Denisovan) மற்றும் தற்போதைய மனித இனமான ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) என்று பல்வேறு மனித இனங்கள் உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டிருந்தன. அவர்களில் பல இனங்கள் அடுத்தடுத்து வந்த காலநிலை மாற்றங்களையும், சில மனித இனங்களின் அபரிமிதக் கலாசார வளர்ச்சிகளிலும், சூழலியல் மாறுபாடுகளிலும் பிழைத்திருக்க முடியாமல் அழிந்துபோயின. சில இனங்கள் தங்களுக்குள் தொடர்பேற்பட்டு ஒரே இனமாகக் கலந்து புது தலைமுறைகள் உருவாகிவிட்டன. பரிணாமத்தின் பாதையில் இதுபோன்ற பல செயல்கள் நிகழ்ந்து தற்போதைய மனித இனங்கள் உருவாகியுள்ளன.

இப்போதிருக்கும் மனித இனங்களை ஹோமோ சேபியன்ஸ் என்று நாம் அழைக்கிறோம். இந்த ஹோமோ சேபியன்ஸ் இனமே டெனிசோவன் இனத் தந்தைக்கும் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் இடையிலான காதலால் உருவானதே என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

சைபீரியாவிலிருக்கும் கற்காலக் குகைகளை ஆய்வுசெய்து கொண்டிருந்தபோது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெண்ணின் எலும்புகள் கிடைத்தன. 90,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அவரின் எலும்புகளை ஆய்வு செய்ததில் இதுவரை அறியப்படாத விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். அந்தப் பெண்ணின் மூதாதைகள் இரண்டு வேறுபட்ட மனித இனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளார்கள். இந்த மாதிரியான இனக் கலப்புகளே தற்போதைய மனித இனத்தைத் தோற்றுவித்திருக்கலாம் என்ற யூகங்களும் கோட்பாடுகளும் அறிஞர்களால் சொல்லப்பட்டு வந்தன. முதல்முறையாக அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இனக்கலப்பில் உருவான முதல் தலைமுறையைக் கண்டுபிடித்துள்ளது தொல்லியல் துறை.

Sponsored


Sponsored


Photo Courtesy: Bence Viola/Max Planck Institute for Evolutionary Anthropology

ஜெர்மனியைச் சேர்ந்த சில தொல் மரபியலாளர்கள் அந்தப் பெண்ணின் எலும்புகளை ஆய்வுசெய்துள்ளார்கள். மானுடவியலின் பரிணாமப் பாதையில் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய ஒரு காலகட்டத்தில் பிறந்தவளைத்தான் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம் என்று அவர்களுக்கு அப்போது புரியவில்லை. ஆல்டாய் (Altai mountains) மலைத்தொடர்களில் வசித்துவந்தவர்களே டெனிசோவன் இன மனிதர்கள். அவர்கள் வாழ்ந்த ஒரு குகையை ஆய்வுசெய்தபோதுதான் இந்தப் பெண்ணின் எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நாம் 2008-ம் ஆண்டுதான் கண்டுபிடித்தோம். அதுவும் அங்கு கிடைத்த ஒரேயொரு விரல் எலும்பை வைத்து. ஆல்டாய் மலைத்தொடர் நியாண்டர்தால் இன மனிதர்களின் வாழிடமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, டெனியின் எலும்புகள் கிடைத்த குகைகளில்கூட அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் முன்பே கிடைத்துள்ளன. ஆம், டெனிசோவன் இனத் தந்தையைக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை நாம் செல்லமாக டென்னி (Denny) என்றே அழைப்போம்.

மனிதகுலத்தின் ஆதி இனங்கள் பலவற்றுக்குள் ஏற்பட்ட கலப்புகளின் சான்றாக விளங்குகிறாள் டென்னி. அவள் ஓர் உதாரணம் மட்டுமே. அதைப்போலவே பல்வேறு நிகழ்வுகள் பல இனக்கலப்புகளை ஏற்படுத்தியிருக்கும். டென்னியின் எலும்புகளோடு மொத்தமாக 2000 எலும்புத் துண்டுகளை அவர்கள் சேகரித்திருந்தார்கள். அவற்றைக் கதிரியக்க ஆய்வுகளுக்கு உட்படுத்தினார்கள். அதன்மூலம் தாயின் மரபணு மாதிரிகள் அதிகமாக இருந்தது தெரியவந்தது. அதேசமயம் தந்தையான நியாண்டர்தால் மனிதனின் மைட்டோகாண்டிரியல் மரபணுக்களும் டென்னிக்கு இருந்தன. அதாவது உடலிலிருக்கும் அணுக்களுக்கு உள்ளிருக்கும் மரபணுக்களை இவ்வாறு அழைப்பார்கள். தந்தையையும் தாயையும் தெரிந்துகொண்ட அளவுக்கு டென்னியின் மூதாதைகளை அவர்களால் மேற்கொண்டு புரிந்துகொள்ள முடியவில்லை.

தொடர்ச்சியாகப் பல மாறுபட்ட ஆய்வுகளை நடத்தியதில் சில ஆழமானத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலம் நியாண்டர்தால், டெனிசோவன் இன மனிதர்களின் மரபணுக்களோடு, டென்னியின் எலும்புகளில் தற்போதைய ஆப்பிரிக்க மனித இனத்தின் மரபணுக் கூறுகளும் சிறிய அளவில் அதில் இருந்துள்ளது. மரபணுவில் 40% டெனிசோவனும், 40% நியாண்டர்தாலும் இருந்துள்ளன. பாலின மரபுத்திரிகளை (Sex chromosomes) ஆய்வு செய்ததில் அந்த மரபணு மாதிரிகள் ஆணிலிருந்து கிடைத்ததா பெண்ணிலிருந்து கிடைத்ததா என்பதைக் கண்டுபிடித்தார்கள். எலும்பின் தன்மையிலிருந்து டென்னி இறக்கும்போது அவளுக்கு வெறும் பதின்மூன்று வயதே நிரம்பியிருக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிந்துகொண்டார்கள். இரண்டு மனித இனங்களின் மரபணுக்கள் சரிசமமாக இருக்கிறது. இதில் இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை டென்னியின் பெற்றோர்களே டெனிசோவன்-நியாண்டர்தால் இனக் கலப்பில் பிறந்தவர்களாக இருக்கலாம். அதனால்கூட அவளுக்கு இத்தகைய மரபணு மாதிரி அமைந்திருக்கலாம்.

இந்தச் சந்தேகத்திலிருந்து தெளிவுபெறுவதற்காக டென்னியின் மரபணுக்களை மேற்கொண்டு ஆராய்ந்தார்கள். அவளுக்கு இந்த மரபணுக்கள் எங்கிருந்து கிடைத்தன. பெற்றோரிடமிருந்தா அல்லது மூதாதைகளிடமிருந்தா என்பதைப் பற்றி ஆராய்ந்தார்கள். அதிலிருந்து அவளுக்கு இந்த மரபணுக்கள் நேரடியாகத் தன் பெற்றோரிடமிருந்தே கிடைத்துள்ளது தெளிவடைந்துள்ளது. ஆகவே, டென்னிதான் மனித இனங்களில் பிறந்த முதல் ஹைப்ரிட் (Hybrid). கலப்பினத்தில் பிறந்த முதல் தலைமுறை. ``இது மானுடவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிப் பாடங்களை மாற்றவேண்டுமென்று நான் நினைக்கிறேன்" என்கிறார் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் போண்டஸ் ஸ்கோக்லன்ட் (Pontus Skoglund).

டென்னிக்குப் பிறகான காலத்தில் வாழ்ந்தவர்களின் எலும்புகளும் ஆராய்ச்சிகளில் சேகரிக்கப்பட்டன. அவற்றில் செய்யப்பட்ட ஆய்வுமூலமாக அதிகமானவர்கள் இனக்கலப்புகளில் பிறந்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. டென்னிக்குப் பிறகு அவளைப் போலவே பல்வேறு இனக்கலப்புகள் நடந்துள்ளன. நியாண்டர்தால், டெனிசோவன் எலும்புகளை ஆராய்ந்ததில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஒரேயினத்தின் மரபணுக்களோடு பிறந்த மனிதர்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. மற்றவை அனைத்துமே இனக்கலப்புகளில் பிறந்தவர்களுடையது. இங்கு அறிவியல்பூர்வமாக இன்னுமொரு கேள்வி எழுகிறது. இந்த இரண்டு மனித இனங்களும் இனக்கலப்பில் ஈடுபட்டிருந்தால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவர்களின் தனித்தன்மை எப்படி பாதுகாக்கப்பட்டிருக்கும்? ஆனால், பாதுகாக்கப்பட்டுள்ளதே அது எப்படி? அதற்கும் டென்னியே ஆதாரமாக விளங்குகிறாள். இந்த இரண்டு இனங்களின் இணைப்பால் ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு, மரபணுப் பரிமாற்றங்கள் சரியாக நிகழாமை போன்ற பல்வேறு காரணங்களால் நீண்ட ஆயுளோடு வாழவில்லை. அதனால்தான் கலப்பினப் பிறப்பு தொடங்கியதாகச் சொல்லப்பட்ட காலங்களில் நமக்குக் கிடைத்த வளர்ந்த மனிதர்களின் எலும்புகள் இந்தத் தனித்தன்மையைக் காட்டியுள்ளது. அவர்களுக்கு மரபணுப் பன்மை குறைவாகவே இருந்துள்ளது. அந்தப் பன்மை பெருகுவதற்கான தன்மையை அடையச் சில ஆண்டுகள் ஆகியுள்ளது. இரண்டு வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்குள் உருவான காதல் அவர்களுக்கு வருங்காலத்தில் மரபணுப் பன்மையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் காலப்போக்கில் அது புதிய இனமாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தக் கலப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகளே இல்லாமல் வாழ்ந்தவர்களும் இருந்துள்ளார்கள். நியாண்டர்தால் மக்கள் அதிகமாக யூரேசியாவின் மேற்குப் பகுதிகளில்தான் வாழ்ந்துள்ளார்கள். டெனிசோவன் மக்கள் ஆல்டாய் மலைத்தொடர்களில் அதிகமாக வாழ்ந்துள்ளார்கள். இங்கு நியாண்டர்தால் மனிதர்களின் வாழிடமும் இருந்துள்ளது. ஆகவே, இங்கிருந்தவர்களுக்கு மட்டுமே டெனிசோவன் மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அதுவும்கூட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இவ்விரண்டு இனங்களும் தனித்தன்மையோடே இருந்ததற்கான காரணமாக இருக்கலாம். காலம் செல்லச் செல்ல இவர்கள் மேற்கொண்ட பயணங்கள் இருவருக்குமான தொடர்பை விரிவுபடுத்தியிருக்கும். அது மேற்கொண்டு இரண்டு இனங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தி புதிய இனத்தின் தோற்றத்தை ஊக்குவித்திருக்கும். டெனிசோவன் குகையிலிருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து கிடைத்த நியாண்டர்தால் மனிதப் படிமங்களின் மரபணுக் கூறுகளுக்கும் டென்னியின் தாய்வழி மரபணுக் கூறுகளுக்கும் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கும்போது இந்தச் சந்தேகங்கள் எழுகின்றன.

யூரேசியாவிலிருந்து நியாண்டர்தால் மனிதர்கள் பயணித்து ஆல்டாய்வரை வந்திருக்க வேண்டும். இங்கு வந்தவர்களில் டென்னியின் மூதாதைகளும் இருந்திருப்பார்கள். நியாண்டர்தால் அம்மாவுக்கும் டெனிசோவன் தந்தைக்கும் பிறந்த டென்னியை எந்த வகை மனித இனத்துக்குள் வகைப் படுத்துவதென்ற கேள்வி ஆய்வாளர்களிடத்தில் எழுந்துள்ளது. கலப்பினம் என்று சொல்வதற்குக் கொஞ்சம் தயங்குகிறார்கள். பல்வேறு கலவைகளில் கிடைத்தவைதானே நமது அறிவும், திறன்களும். இப்போது அந்தக் கலவையையே அவமானமாக நினைத்துப் பிரிந்து கிடக்கும் நம்மிடத்தில் இயற்கை சொல்லவருவது ஒன்று மட்டுமே.

``நான் புதைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் எண்ணிலடங்காதவை".



Trending Articles

Sponsored