`அப்பார்ட்மென்ட் வீடு வாங்கப்போறீங்களா?’ இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!



க்கள்தொகை நெருக்கம் மற்றும் விலைவாசி காரணமாக, பெருநகரங்களில் சொந்தமாகத் தனி வீடு என்பது, பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. அத்தகையோருக்கு, அடுக்குமாடிக் குடியிருப்புகளே (அப்பார்ட்மென்ட்) நம்பிக்கை அளிக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், தமிழ்நாடு தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த்.

* "நம் நிதிநிலை, கிடைக்கும் கடன் தொகை, அலுவலகத்திலிருந்து தூரம், பள்ளி மற்றும் கல்லூரி, மருத்துவமனை, மார்கெட், பேருந்து நிலையம் போன்ற இடங்கள், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு, குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மழையில்லாத நாள்களில் தண்ணீருக்கான மாற்று ஏற்பாடு, யூபிஎஸ் வசதி, சுற்றுச்சூழல் எனப் பல அம்சங்களையும் அலசியே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பார்ட்மென்ட் அழகாக இருப்பதைவிட, நம் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாக இருப்பதே முக்கியம்.

Sponsored


Sponsored


* பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பூங்கா, ஜிம், விளையாட்டு வசதி, ஸ்விம்மிங் பூல் போன்றவை இருப்பின், அந்த வசதிகளுக்கும் சேர்த்தே விலை நிர்ணயிக்கப்படும். எனவே, அங்கே குடியிருப்பைத் தேர்வுசெய்யும் முன்பு, அந்த ஆடம்பரங்கள் நமக்குத் தேவையா என்று பலமுறை யோசிக்க வேண்டும். 

Sponsored


* சிறியதோ, பெரியதோ... எந்த அடுக்குமாடிக் குடியிருப்பாக இருப்பினும் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிச்சயம் இருக்க வேண்டும். 

* சிறிய மற்றும் நடுத்தர பில்டர்களை ஒப்பிடும்போது, பெரிய பில்டர்களிடம் வாங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகமாக இருக்கும். ஏனெனில், அவர்கள் அதிகப் பொருள் செலவிலும் ஆடம்பர உள் கட்டமைப்புகளுடனும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதால், லாபத்தை அதிகப்படுத்தி விற்பனை செய்வார்கள். வாங்கப்போகும் அப்பார்ட்மென்ட் பில்டரின் முந்தைய கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளின் தரம் பற்றி அறிந்திருப்பது அவசியம். அவர்களின் ‘இணையதளம்’ மட்டும் பார்த்து நம்பாமல், அவர்கள் முடித்திருக்கும் முந்தைய புராஜெக்ட்டுகளை நேரில் சென்று பார்க்க வேண்டும்.

* ஒரு அப்பார்ட்மென்டில் ஆறு அல்லது அதற்குள்ளாகக் குடியிருப்பு வீடுகள் இருக்கும்பட்சத்தில், மாநகராட்சி போன்ற அந்தந்த உள்ளாட்சி அமைப்பிடம் பிளான் அப்ரூவல் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆறு வீடுகளுக்கும் மேலாக இருந்தால், சி.எம்.டி.ஏ-வின் அனுமதி வேண்டும். சில பில்டர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சி.எம்.டி.ஏ-விடம் அனுமதி வாங்கியதுக்கும் மேலாகக் குடியிருப்புகளைக் கட்டிவிடுவர். இந்தப் பிரச்னை தெரியாமலேயே சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கிவிடுவார்கள். குறிப்பிட்ட காலம் கழித்து, உள்ளாட்சி அமைப்பு அல்லது சி.எம்.டி.ஏ அமைப்பினர் ஆய்வுசெய்து நோட்டீஸ் அனுப்பும். எனவே, அப்ரூவல் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.

* வாங்கவிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான கட்டட அனுமதிச் சான்றிதழ், கண்டிஷன் பிளானின் நகல், இறுதி கம்ப்ளீஷன் சான்றிதழ்களை அனுபவமிக்க வழக்கறிஞரிடம் சரிபார்த்து, குடியிருப்பை வாங்கலாம்.

* அடுக்குமாடிக் குடியிருப்பின் முறையான பாதுகாப்பு வசதி, அவசரக் கால பாதுகாப்பு வசதிகளைச் சரிபார்க்க வேண்டும். வாங்கப்போகும் குடியிருப்புக்கு இன்ஷுரன்ஸ் செய்துகொள்வது நல்லது. பெரிய பில்டர்களாக இருந்தால், அவர்களே இன்ஷுரன்ஸ் செய்துகொடுப்பார்கள். பில்டர்கள் செய்துகொடுக்காவிடில், நாமேதான் இன்ஷுரன்ஸ் செய்துகொள்ள வேண்டும்.

* கட்டுமானப் பணியிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பில்டரிடம், முன்கூட்டியே டோக்கன் அட்வான்ஸாகப் பெரிய தொகையைப் பலரும் கொடுப்பார்கள். சிலர் பணம் வாங்கவே இல்லை என்று ஏமாற்ற வாய்ப்புள்ளது. எனவே, டோக்கன் அட்வான்ஸை பணமாகக் கொடுக்காமல், டிடி அல்லது செக் வழியே கொடுப்பது சிறந்தது. அதை 20 ரூபாய் பத்திரத்திலும் பதிவுசெய்யவும்.

* பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தரைதளத்தை வாகனங்கள் நிறுத்த ஒதுக்கி, முதல் மாடியிலிருந்து குடியிருப்புகளைக் கட்டியிருப்பார்கள். நடுத்தர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தரைதளத்தில் பாதி பகுதியை மட்டும் வாகன நிறுத்தத்துக்கும் மீதி பகுதியில் குடியிருப்பும் கட்டியிருப்பார்கள். பொதுவாக 75 சதுரமீட்டருக்கு அதிகமான பரப்பளவில் இருக்கும் குடியிருப்புகளில், கட்டாயம் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறை, குடியிருப்பவர்களிடம் கார், டூவீலர் போன்ற வாகனங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொருந்தும். இதேபோல, 75 சதுரமீட்டருக்கு குறைவான பரப்பளவில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்டாயம் டூவிலர் பார்க்கிங் வசதியை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

* அடுக்குமாடிக் குடியிருப்புகளில், பார்க்கிங் ஏரியாவுக்கு எனக் குடியிருப்பு வாசிகளிடம் தனியாகப் பணம் பெறக் கூடாது என உச்ச நீதிமன்றத்தின் ஆணையே இருக்கிறது. ஆனால், ‘எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் கார் பார்க்கிங் அனுமதி இலவசம்’ எனக் கூறி, மறைமுகமாகக் குடியிருப்பின் விலையிலேயே கூடுதல் விலைவைத்து விற்பனை செய்கிறார்கள். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு, குடியிருப்புகளை வாங்க வேண்டும்.

* ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் மாடியிலிருக்கும் வீடுகளைக் காட்டிலும், மேலே செல்லச் செல்ல அந்த வீடுகளின் விலை குறைந்துகொண்டே இருக்கும். இது, பில்டர் மற்றும் குடியிருப்பைப் பொறுத்து மாறுபடலாம்.

* பொதுவாக, ஒரு குடியிருப்பைக் கட்டுவதற்கான செலவிலிருந்து 25 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே லாபம் வைத்து விற்க வேண்டும். தற்போது, எந்த பில்டரும் அதைப் பின்பற்றுவது இல்லை. நீங்கள் வாங்கும் வீட்டின் விலை, அதன் அசல் மதிப்பிலிருந்து அதிகளவில் வேறுபட்டால் தவிர்த்துவிடவும்.

* ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் பில்டர், ஒவ்வொரு குடியிருப்புவாசிக்கும் அவர்களின் அப்பார்ட்மென்ட் வீட்டுக்கான பத்திரத்தை தனித்தனியே, ‘அன் டிவைடேட் ஷேர்’ முறைப்படி பதிவுசெய்து கொடுப்பார். கடைசியாக விற்கும் வீட்டை வாங்குபவருக்கு, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தாய் பத்திரத்தைப் பதிவுசெய்து கொடுத்துவிடுவார். எல்லாக் குடியிருப்புகளும் விற்றுவிட்டால், பில்டருக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடும். பிறகு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பானது, குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் பொதுவான சொத்து. எனவே, பராமரிப்புச் செலவு, பழுது பார்ப்பது போன்ற வேலைகளில் அங்கு வசிக்கும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்."



Trending Articles

Sponsored