மோடி புகழ்பாட, ஐஐடி நுழைவுத் தேர்வு குஜராத்தி மொழியில் நடத்தப்படுகிறதா?!Sponsoredஐஐடி - ஜே.இ.இ (IIT - JEE) தேர்வு எழுதுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் தேசிய தகுதித் தேர்வு நிறுவனம் (National Testing Agency). இந்தத் தேர்வு இந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழியில் நடத்தப்படும் என்று அறிவித்தது, மற்ற மாநில மொழிகளைப் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு, மத்திய மனிதவளத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர், `நீட் தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும்’ என்று அறிவித்தார். நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வை, தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மாரத்தி, தெலுங்கு, உருது எனப்  பத்து மாநில மொழிகளில் மாணவர்கள் எழுதினர். ஆனால், தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய தகுதித்தேர்வு நிறுவனம், ஐஐடி - ஜேஇஇ (IIT - JEE) முதன்மைத் தேர்வை இந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழியில் நடத்துவதாக அறிவித்துள்ளது. 

கல்வியாளர்களிடம் பேசியபோது, ``பிரதமர் மோடியின் புகழைப் பரப்பவே இதுபோன்ற நடவடிக்கையில் தேசிய தகுதித் தேர்வு நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஐ.ஐ.டி - ஜே.இ.இ (IIT - JEE) முதன்மைத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலேயே கேள்வித்தாள் இருந்தது. தற்போது குஜராத்தி மொழியை வேண்டுமென்றே நுழைத்திருக்கிறார்கள்" என்றனர். 

Sponsored


Sponsored


நீட் தேர்வுக்காகத் தொடர்ந்து போராடி வரும் டெக்ஃபார்  ஆல் (Tech4All) அமைப்பின் நிறுவனர் ராம்பிரகாஷ், ``கடந்த காலங்களில், எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக இரண்டு மொழியில் தேர்வு  நடத்தினர். தற்போது தொழில்நுட்பமும், எளிதில் ஒருங்கிணைக்கக்கூடிய சூழலில் மாநில மொழிகளில் எளிதில் தேர்வு நடத்தலாம். ஆனால், உயர் பதவியில் இருப்பவர்களின் மாநில மொழியில் மட்டும் தேர்வை நடத்துவது எந்தளவு நியாயம் என்று தெரியவில்லை.

தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ஜெர்மன் நாட்டிலும், இதர ஐரோப்பிய நாடுகளிலும் சொந்தத் தாய்மொழியிலேயே உயர்படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் தேவைக்கு தகுந்தாற்போல் மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்" என்றார். 

சமூகச் செயற்பாட்டாளர் நாராயணன், ``மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட புதிய அமைப்பே இதுபோன்று அறிவிப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு, தேசிய தகுதித் தேர்வு அமைப்பின் முதன்மை அலுவலகத்தை டெல்லி  மட்டுமல்லாது நான்கு மண்டலங்களிலும், மாநில அளவில் தனித்தனியாக ஓர் அலுவலகத்தையும் அமைக்க வேண்டும். தேர்வு சார்ந்த ஏதேனும் ஒரு பிரச்னை என்றாலும் டெல்லிக்குப் போய் கேள்வி கேட்கும்போது, சரியான விளக்கம் கிடைக்காது. இதுவே, தென்னிந்தியாவில் ஏதேனும் அலுவலகம் இருந்தால் கேள்வி கேட்க வாய்ப்பாக அமையும். மாநில அளவில் அலுவலகத்தை அமைக்கும்போது மட்டுமே கேள்வித்தாள் சார்ந்த விஷயத்திலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்வது சார்ந்த பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். இதை நடைமுறைப்படுத்தாமல், தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது சரியல்ல.

குஜராத்தி மொழியில் நடத்தும்போது தமிழ் மொழியில் தேர்வு நடத்துவதில் என்ன பிரச்னை. குறைந்தபட்சம் நீட் தேர்வு நடத்தப்படும் மாநில மொழிகளிலாவது ஐ.ஐ.டி - ஜே.இ.இ தேர்வை நடத்தலாம்" என்றார். 

கல்வியாளர் நெடுஞ்செழியன், ``பிரதமர், குஜராத்தின் மீது மட்டும் அதிகம் கவனம் செலுத்துகிறார். இதனால் குஜராத்தி மொழியின் மீது அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். குஜராத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பவர்கள் இரண்டரை லட்சம் பேர் இருப்பார்கள். மற்ற மாநிலங்களில் 20 லட்சம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பை முடிப்பார்கள். ஆனால், 20 லட்ச மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில்,  இரண்டரை லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதியுடன் பள்ளிப் படிப்பை முடிக்கின்றனர். மாணவர்களுக்கான சம உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு முறை  நடத்தப்படுவதும் சரியானது அல்ல. பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்கள் தங்களுடைய பாடத்திட்டத்தை முழுமையாகப் படித்து முடிக்காமலேயே நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் நுழைவுத் தேர்வு முடிவு வெளியாகும்போது  மாணவர்களின் மதிப்பெண் குறைந்தால் பன்னிரண்டாம் வகுப்புப்  பாடத்தின் மீதான கவனம் குறையும்.

நுழைவுத் தேர்வுக்குக் கட்டணமும் அதிகமாக உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் விண்ணப்பிக்க வைக்கலாம். இதுவே ஒரு வகை கட்டணக்கொள்ளைத்தான்" என்றார். Trending Articles

Sponsored