மனிதக் கழிவு அகற்றும் எந்திரனுக்கு தேசம் முழுக்க மவுசு!



னிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை மாற்ற வேண்டும் எனக் கால் நூற்றாண்டு காலமாக குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் விதமாகச் சாக்கடையைச் சுத்தம்செய்யும் ரோபோவைக் கண்டுபிடித்து அதை தேசம் முழுக்க விநியோகித்து வருகின்றனர் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள்.

மனித இனம் வளர்ச்சியடையும் வேகத்தைவிடப் பல மடங்கு வேகமாகக் குப்பைகளும், கழிவுகளும் குவிந்துகொண்டே போகின்றன. அதிலும் சென்னைப் போன்ற பெரிய மாநகரங்களில் திடக் கழிவுகள் மிரட்டுவதை விட கழிவு நீரின் மிரட்டல் அதிகம். இன்றைய காலத்தில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும்கூட, இன்றும் இவற்றைச் சுத்தம் செய்வது மனிதர்கள்தாம். இது மனித மாண்புக்கே எதிரான பணி என்பது ஒருபக்கம்; மனித உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் பணி என்பது மறுபக்கம். இந்த இரண்டு சிரமங்களையும் கடந்துதான் தொழிலாளிகள் கழிவுகளை அகற்றிவருகின்றனர். இந்தத் துயரத்தை நிறுத்துவதற்காக, மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக் கூடாது எனச் சட்டம் இயற்றியதாய்க் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், இவர்கள் துயர் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் இந்தப் பிரச்னைக்குத் தங்கள் பொறியியல் கல்வி மூலம் தீர்வளித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த 8 பொறியியல் பட்டதாரிகள்.

Sponsored


Sponsored


மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் மனிதர்கள் குறித்து பொதுவெளியில் உணர்ச்சி பொங்க பேசுவதுடன் தங்கள் கடமையை பலர் முடித்துக்கொள்வார்கள். ஆனால் அதையும் தாண்டி யோசித்தது கேரள அரசு. ரோபோ தயாரிக்கும் இளைஞர்களை ஊக்குவித்தது. இறுதியில் தாங்கள் நினைத்ததை சாதித்திருக்கின்றனர் இந்த 8 இளைஞர்கள். இன்ஜினியரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்து பல புராஜக்ட்களை உருவாக்கியவர்கள் சாக்கடைக் கழிவுகளை அள்ளுவதற்கு ரோபோவைக் கண்டுபிடிக்க மிகவும் மெனக்கெட்டார்கள். பின்பு  ``ஜென்ரோபோடிக்ஸ்" என்ற கம்பெனியை உருவாக்கி சாக்கடையைச் சுத்தம்செய்யும் ``பெருச்சாளி" (Bandicoot) என்ற ரோபோவைக் கண்டுபிடித்தார்கள். இன்று கேரளா மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் இந்த ரோபோவை அனுப்பிவைக்கிறார்கள். இந்த ரோபோவின் தேவை அதிகமாக இருப்பதால் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

Sponsored


ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் கோ-பவுண்டர் அருண் ஜோர்ஜ், ``மலப்புரம் மாவட்டத்தின் குற்றிப்புறம் எம்.இ.எஸ். இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன். கல்லூரியில் ரோபோட்டிக் சார்ந்த பல புராஜக்ட்களை நாங்கள் டீமாகச் செய்திருக்கிறோம். அயன்மேன் திரைப்படத்தில் வருவது போன்று ஒரு ரோபோ தயாரித்தோம். அந்த ரோபோ மூலம் மாற்றுத்திறனாளிகள் நடப்பதற்கு உதவிகரமாக இருப்பது போன்ற மருத்துவம் சார்ந்த உதவிகளுக்கு அந்த ரோபோ பயன்படும். 2015- 2016-ம் கல்வி ஆண்டில் கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது பல நிறுவனங்களில் எங்களுக்குப் பணி கிடைத்தது. நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஐ.டி சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்தோம். அங்கு கேரள ஐ.டி செயலாளர் சிவசங்கரனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எங்கள் பழைய தயாரிப்புகளை ஏற்கெனவே அறிந்திருந்தார். அப்போதுதான் அவர் சாக்கடை சுத்தம் செய்வதற்கான ரோபோ கண்டுபிடிக்கலாமே என்ற எண்ணத்தை விதைத்தார். கல்லூரி நண்பர்கள் 8 பேர் சேர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விளைந்தோம். சாக்கடை குறித்தும், அதில் ஏற்படும் பிரச்னைகள், மனிதர்கள் சாக்கடையை அள்ளுவது குறித்தும் விரிவாகப் படிக்க ஆரம்பித்தோம். பாதாளச் சாக்கடைத்திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள் முதல் சாக்கடையைச் சுத்தம் செய்யும் கூலித் தொழிலாளர்கள் வரை நாங்கள் சந்தித்துப் பேசினோம். அதன்மூலம் சாக்கடை சுத்தம்செய்வது சமுதாயத்தின் மிகப் பெரிய பிரச்னை என்பதை உணர்ந்துகொண்டோம்.

நாங்கள் வேறு கம்பெனிகளில் வேலை செய்துகொண்டே பகுதி நேரத்தில் சாக்கடை அள்ளும் ரோபோ தயாரிக்கலாம் என முதலில் நினைத்தோம். சாக்கடை சுத்தம் செய்யும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்ததால் எங்கள் பணிகளை உதறிவிட்டு நண்பர்கள் 8 பேர் சேர்ந்து திருவனந்தபுரத்தில் இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியை 2017-ல் தொடங்கினோம். பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 2018 பிப்ரவரி மாதம் இந்த ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்தினார். கேரளத்தின் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய பெரிய நகரங்களில் இப்போது இந்த ரோபோக்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் கும்பகோணம் நகராட்சியிலும் கடந்த ஜூன் மாதம் செயல்படுத்தினோம். தஞ்சாவூர் சப் கலெக்டர் பிரதீப் குமார் எங்களை அழைத்து இந்த ரோபோவை அங்கு செயல்படுத்தினார். கடந்த மாதம் ஆந்திர மாநிலத்துக்கு இந்த ரோபோவை டெலிவரி செய்துள்ளோம். இன்னும் நிறைய இடங்களிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

சாக்கடை சுத்தம் செய்வதற்காக ஏற்கெனவே பல இயந்திரங்கள் இருக்கின்றன. மனிதன் சாக்கடைக்குள் இறங்கிதான் அந்த இயந்திரங்களைச் செயல்படுத்த முடியும். நாங்கள் கண்டுபிடித்த ரோபோ சாக்கடை மூடியைத் திறப்பது முதல் சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளைச் சரிசெய்யும் பணிவரை அனைத்தையும் செய்கிறது. சாதாரணமாக சாக்கடை மூடிகளைத் திறப்பதற்கே தொழிலாளிகள் சிரமப்படுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். சுமார் 150 கிலோ எடைகொண்ட சாக்கடை மூடியை ரோபோமூலம் அகற்றலாம். இந்த ரோபோவில் கன்ட்ரோல் யூனிட், ரோபோட்டிக் யூனிட் என இரண்டு யூனிட்டுகள் உள்ளன. 6 கேமராக்கள் மற்றும் நவீனக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரோபோவின் கைகள் சாக்கடைப்பகுதிக்குள் சென்று அடைத்திருக்கும் கழிவுகளை அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பக்கெட்டில் சேர்க்கும். கேமராக்கள் மூலம் சாக்கடைக்குள் நடக்கும் பணிகள் குறித்த வீடியோக்களை கன்ட்ரோல் பேனலில் பார்க்கலாம்.

சாக்கடைக்குள் இருக்கும் வெப்பநிலை, அங்குள்ள காற்றின் நச்சுத்தன்மை குறித்தும் அறிந்துகொள்ள உதவும் கருவிகளும் ரோபோவின் கைகள்போன்ற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் டிஸ்பிளேயில் பார்த்து நாம் அறிந்துகொள்ள முடியும். கேமரா முதல் அனைத்துக் கருவிகளிலும் வாட்டர்புரூஃப் டெக்னாலஜி பயன்படுத்தியுள்ளோம். பெட்ரோல் மூலம் இந்த ரோபோ இயங்குகிறது. எடை குறைவான அதே சமயம் மிகவும் பலமான கார்பன் நானோ பைபர் மூலம் இந்த ரோபோவைத் தயாரித்துள்ளோம். மொத்தம் 60 கிலோ எடைகொண்ட இந்த ரோபோவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதில் கொண்டு செல்வதற்காக 4 வீல்கள் பொருத்தியுள்ளோம். வேறு வாகனங்களில் இணைத்து எளிதில் இழுத்துச்செல்லும் வசதியும் ஏற்படுத்தியிருக்கிறோம்.

ஒரு ரோபோவின் விலை, ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து 22 லட்சம் ரூபாய் ஆகிறது. ஒருவருடம் வாரன்டியும் வழங்குகிறோம். முற்றிலும் மனிதர்கள் சாக்கடையில் இறங்கி பணிசெய்வதை ஒழிக்கும் விதமாக இந்த மிஷின் தயாரிக்கப்பட்டுள்ளது. ரோபோ வந்ததால் கூலித் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, இந்த ரோபோவை இயக்கும் விதத்தைத் தொழிலாளர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். ஒரு வாரத்தில் தொழிலாளர்களுக்கு இந்த ரோபோ குறித்து முழுவதும் கற்றுக்கொடுத்துவிடுவோம். கன்ட்ரோல் பேனலில் அந்தந்த மாநில மொழியில் செயலிகள் உள்ளன. அதிலும் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மாநில மொழிகளில் விளக்கிக் கூறும் வழிகாட்டி செயலியையும் நிறுவியிருப்பதால் மிக எளிதாக இந்த ரோபோவை இயக்கலாம். ஒரு ரோபோவை இயக்க 2 பேர் தேவை. கன்ட்ரோல் பேனலை இயக்க ஒருவரும், சாக்கடைகளை அள்ளிக் கொண்டுவரும் ரோபோவுக்கு உதவ ஒருவரும் தேவை. இந்த ரோபோவை அதிகமாக உற்பத்தி செய்ய கேரள அரசு எங்களுக்குக் கடன் வழங்குகிறது. அதுபோன்று எங்கள் நிறுவனத்தை அமைப்பதற்கான இடத்தையும் கேரள அரசு வழங்கியது" என்றார்.



Trending Articles

Sponsored