சிப்பிப்பாறை நாய்களுக்கு ஜே! நாமக்கல் கிராமங்களின் வேட்டை வியூகம்



Sponsored



யிர்களை அழிக்கும் யானையை விரட்ட கும்கி யானையை வளர்ப்பது போல், இராசிபுரம் அருகே ஒரு கிராமமே வேட்டை நாயை வளர்த்து வருகிறது. மதுரை, திருநெல்வேலி ஆட்சியாளர்களால் விரும்பி வளர்க்கப்பட்ட சிப்பிப்பாறை நாய் இனம் தற்போது இராசிபுரம் அருகே பனமரத்துப் பட்டியில் வீடுகள் தோறும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த வகை நாய்கள் விலை கொஞ்சம் அதிகம். இவ்வளவு விலை கொடுத்து வளர்க்க என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள அக்கிராமத்துக்குச் சென்றோம்.

ஊருக்குள் செல்லும்போதே வீடுகளில் இருந்த நாய்களின் சத்தங்கள் `ஜாக்கிரதை' என்று எச்சரிப்பதாகவே இருந்தது. அவற்றின் குரைக்கும் விதமும் உருவமும் கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியது. அப்போது எதிர்பட்ட பெரியசாமி என்பவரிடம் இதுகுறித்து விசாரித்தோம்.

Sponsored


``இராசிபுரம் சுத்துப்பட்டுல பனமரத்துபட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, சித்த நாயக்கனூர்னு 200-க்கும் அதிகமான குக்கிராமங்கள் இருக்கு. இந்தக் கிராமங்களைச் சுத்தியிலும் மலைகள்தான். அதனால காட்டு விலங்குகள் நடமாட்டம் பகல் நேரத்துலேயும் அதிகமா இருக்கும். குக்கிராமங்கள்ல இருக்குற மக்கள் விவசாயம்தான் பார்த்துக்கிட்டு வர்றாங்க. மலைப் பகுதிகள்ல இருந்து வர்ற காட்டுப்பன்றி, நரி மாதிரியான விலங்குகளை விரட்ட வெடி வைச்சாலும் போக மாட்டேங்குது. மனுஷங்க விரட்டுனாலும் கடிக்க வருது. இதுபோக இருட்டுல திருட்டு பயலுக நடமாட்டமும் கொஞ்சம் இருக்கு. அதனால இந்தப் பகுதி மக்களுக்குத் திருட்டு பயம் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. வீட்டுக்கு வெளியே இருக்குற ஒரு பொருள், காலையில எழுந்திருச்சு பார்த்தா இருக்காது. போலீஸ்ல புகார் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு ரோந்து வந்துட்டுப் போயிடுறாங்க. அப்புறம் வர மாட்டேங்குறாங்க. அதனால எப்பவும் திருட்டு நிக்க மாட்டேங்குது. இதுக்கு முடிவு கட்ட  ஊரே ஒண்ணு கூடி வேட்டை நாயை வளர்க்குறதுன்னு முடிவு செஞ்சோம். அதுமூலமா எல்லாத்துக்கும் முடிவு வரும்னு நினைச்சோம்.

Sponsored


அதுக்காக நம்மோட பாரம்பர்ய நாட்டு இன நாய்களை மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்தோம். 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஜோடி வாங்கி வந்து அதை இனவிருத்தி செஞ்சு வீடுகள்ல வளர்க்கச் சொன்னோம். இன்னைக்கு நாய்களை நம்பித்தான் ராத்திரியில நிம்மதியா தூங்குறோம். திருட்டு பயம் இப்போ இல்லை. காட்டு விலங்குகளை விரட்டுறதுலேயும் நாட்டு நாய்கள் கில்லாடியா இருக்குது. அதனால விவசாயம் பார்க்குறவங்க, வேலைக்குப் போறவங்கனு எல்லாரும் நிம்மதியா இருக்கு" என்றார்.

பெரியசாமியுடன் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரும் சிப்பிப்பாறை நாயைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ``தென் இந்தியாவோட ஒரு  வகை நாய் இனம் சிப்பிப்பாறை. இது காட்டுப்பன்றி, மான், முயல்னு விலங்குகளை வேட்டையாடுறதுக்குப் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க. வீட்டுக் காவலுக்கும் அதிகளவுல இப்போ பயன்படுத்துறாங்க. மதுரைக்குப் பக்கத்துல இருந்த சிப்பிப்பாறையில மகாராஜா குடும்பம் வளர்த்துக்கிட்டு வந்தாங்க. திருநெல்வேலியை ஆட்சி செய்துக்கிட்டிருந்த ராஜாக்களும் சிப்பிப்பாறை நாய்களை வளர்த்தாங்க. அதனாலதான் பலசாலியான சிப்பிப்பாறை இனத்தை மதுரையில இருந்து 10 வருஷத்துக்கு முன்னாடி வாங்கிட்டு வந்தோம். இன்னைக்கு எல்லா வீடுகள்லேயும், தோட்டத்துலேயும் இந்த நாய்கள்தான் அதிகளவுல இருக்கு" என்றார்.

வேட்டை நாய்களைப் பற்றி கந்தசாமி என்பவர் சில தகவல்களைச் சொன்னார். ``எங்களோட முன்னோர், வேட்டையாடுறதை குலத்தொழிலா வெச்சிருந்தாங்க. அதுக்கு உதவியா வேட்டை நாய்களை வளர்த்தாங்க. ராத்திரியில, நாயோட பக்கத்துல இருக்குற கம்மாளப்பட்டி பகுதிக்குப் போயி, விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்துற பன்றிகளை வேட்டையாடுவோம். வேட்டையாடி வெற்றியோட வீடு திரும்புற எங்களை, பனமரத்துப்பட்டி பிரிவுல இருந்து, பாரப்பட்டி வரைக்கும் மேளதாளத்தோட, ஆரத்தி எடுப்பாங்க. வேட்டையில சிக்கின பன்றியை, குலதெய்வத்துக்குப் படையல் செஞ்சு வழிபடுவோம். அதை காசுக்கு விற்கமாட்டோம். இதனால, எங்களோட குடும்பம் விருத்தியடையும்ங்குற ஒரு நம்பிக்கை. இப்போ வேட்டையாட தடை இருக்குறதால இன்னைக்கு அந்தப் பழக்கம் இல்லை. அதனால காட்டு விலங்குகள்கிட்ட இருந்து பயிர்களைக் காப்பாத்தவும், திருட்டு நடக்காம இருக்கவும் தொடர்ந்து வளர்த்துக்கிட்டு வர்றோம்" என்றார்.

சிப்பிப்பாறை நாயைத் தவிர அவர்கள் யாரையும் நம்பி வாழவில்லை என்ற எண்ணம் தோன்றியபடியே அங்கிருந்து கிளம்பினோம்..



Trending Articles

Sponsored