பைக் ஸ்டார்ட் ஆகவில்லையா... எதையெல்லாம் செக் செய்யவேண்டும்? #Tips



ஜாலியாக டூருக்குக் கிளம்பினாலும் சரி, தினமும் ஆபீஸுக்குக் கிளம்பினாலும் சரி, போகும் வழியில் பைக் எங்கேயாவது நின்றுவிட்டால் கடுப்பின் உச்சத்துக்குச் சென்று பைக்கை உதைக்க ஆரம்பிக்காதீர்கள். இமயமலையைச் சுற்றி வந்த ரைடராக இருந்தாலும், இந்திய ராணுவத்தின் மெக்கானிக்காக இருந்தாலும், பைக் பிரேக்-டவுன் சம்பவத்தை நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். பைக் இன்ஜின் ஸ்டார்ட் ஆகவில்லை அல்லது பைக் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட்டால் என்ன செய்வது எனப் பார்ப்போம்... 

பேட்டரியை செக் செய்யவும் 

Sponsored


Sponsored


பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், பெரும்பாலும் அதற்கு பேட்டரிதான் காரணமாக இருக்கும். செல்ஃப் ஸ்டார்ட் அடிக்கும்போது மோட்டாரில் இருந்து வழக்கத்துக்கு மாறாக `விர்ர்ர்' எனச் சத்தம் வரும். ஹார்ன், ஹெட்லைட் போன்றவை குறைந்த ஒளியைத் தரும். அப்படியிருந்தால் பைக்கின் பேட்டரி வேலை செய்யவில்லை என அர்த்தம். பேட்டரியைத் திறந்து டிஸ்டில்டு வாட்டர் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். இல்லையென்றால், உடனே டிஸ்டில்டு வாட்டரை ஊற்றி பைக்கை ஸ்டார்ட் செய்யலாம். அப்படியும் வேலைக்கு ஆகவில்லை என்றால், ஆம்ப் மீட்டர் வைத்து பேட்டரியை செக் செய்யவேண்டும். 12 வோல்ட்டுக்குமேல் பவர் இருந்தால் பேட்டரியில் பவர் உள்ளது என அர்த்தம். 11 வோல்ட் இருந்தால் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். 9 வோல்ட் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் பேட்டரியை மாற்றவேண்டும். 

Sponsored


பெட்காக் 

பைக் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம் `பெட்காக்.' பைக்கை ரிசர்விலும் மெயினிலும் வைத்து ஓட்டுவோமே அந்த ரெகுலேட்டர் பெயர்தான் `பெட்காக்'. பெட்காக்கில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டிருந்தால் பெட்ரோல் சப்ளை தடைப்பட்டு இன்ஜினுக்கு பெட்ரோல் சரியாகக் கிடைக்காது. அதனால் பைக் ஸ்டார்ட் ஆகாது. பெட்காக் திருகுவதற்குக் கடினமாக இருந்தாலோ அல்லது பெட்ரோல், பேட்டரி சரியாக இருந்தும் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் பெட்காக்கில்தான் பிரச்னை. பெட்காக் துருப்பிடிப்பதால் இந்தப் பிரச்னை ஏற்படும் அல்லது பெட்காக்கில் இருக்கும் ஃபில்டர் கிலாக் ஆகிவிட்டால் இந்தப் பிரச்னை ஏற்படும். பைக்கில் பெட்ரோல் அடைப்பு இருக்கிறதென்றால், பெட் க்ளாக்கை சிலமுறை தட்டினால் அடைப்பு க்ளியராகி பைக் ஸ்டார்ட் ஆக வாய்ப்பிருக்கிறது. அப்படி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், பெட்ரோல் லைனைக் கழட்டிவிட்டு பேனாவோ அல்லது சேஃப்ட்டி பின்னையோ வைத்து அடைப்பை எடுத்துவிடலாம். 

கிளட்ச் ஸ்விட்ச் 

கிளட்சைப் பிடித்தால் மட்டுமே பைக் ஸ்டார்ட் ஆகும். இதற்குப் பெயர்தான் `கிளட்ச் ஸ்விட்ச்'. ஸ்கூட்டர்களில் இதை `பிரேக் ஸ்விட்ச்' என்பார்கள். பிரேக்கைப் பிடித்தால்தான் ஸ்டார்டர் வேலைசெய்யும். இந்த ஸ்விட்சில் பழுதிருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது. கியர் பைக்காக இருந்தால் பைக்கை நியூட்ரலில் போட்டு ஸ்டார்ட் செய்துவிடலாம். ஸ்கூட்டராக இருந்தால் கிக்கர் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கிளட்ச் ஸ்விட்ச் 100 ரூபாய் மட்டுமே. மெக்கானிக்கிடம் பைக்கைக் கொண்டுபோனால், 10 நிமிடத்தில் மாற்றிக் கொடுத்துவிடுவார். 

நியூட்ரல் 

கிளட் ஸ்விட்ச்போல மாடர்ன் பைக்குகளில் நியூட்ரல் ஸ்விட்ச் வருகிறது. நியூட்ரல் ஸ்விட்ச் வேலை செய்யவில்லை என்றால், கியர் நியூட்ரலில் இருந்தாலும் `நியூட்ரல் இல்லை' என்றே காண்பிக்கும். இதனால் பைக் ஸ்டார்ட் ஆகாது. கிளட் ஸ்விட் சரியாக இருந்தால் பைக்கை கியரில் போட்டு நியூட்ரல் ஸ்விட்சைக் கடந்து பைக்கை ஸ்டார்ட் செய்துவிடலாம். கிளட்ச் ஸ்விட்சும் கோளாறாகத்தான் இருக்கிறதென்றால், நியூட்டர் ஸ்விட் லைனைக் கழட்டிய பிறகு பைக்கை ஸ்டார்ட் செய்யலாம். 

இன்டேக் அல்லது எக்ஸாஸ்ட்டில் கோளாறு 

பைக்கின் இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் பைப்பில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், காற்று சரியாக உள்ளே செல்லாமல் அல்லது வெளியேறாமல் பேக் பிரஷர் உண்டாகி இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது. அதனால், எக்ஸாஸ்ட் பைப்கை செக் செய்யவேண்டும். எக்ஸாஸ்ட் பைக் சரியாக இருந்தால் கார்புரேட்டரில் இருந்து வரும் ஏர்பாக்ஸை செக் செய்யவேண்டும்.

பெட்ரோல் 

பெட்ரோல் இல்லாமல் பைக் நிற்பது சகஜம். அதிலும், லிட்டருக்கு 84 ரூபாய் பெட்ரோல் விலை என்பதால், மாத இறுதியில் பெட்ரோல் போட காசு இல்லாமல் `முடிந்தவரைப் போவோம்' எனும் மனநிலை வந்துவிடுகிறது. ஆபீஸுக்கு வந்துவிட்டு சாயங்காலம் பைக்கை எடுக்கும்போது ஸ்டார்ட் ஆகவில்லையா, முதலில் பெட்ரோல் இருக்கிறதா எனப் பாருங்கள். வெள்ளிக்கு இணையாக உயர்ந்துகொண்டிருக்கிறது பெட்ரோல் விலை. பெட்ரோல் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள். 

ஸ்பார்க் பிளக் 

ஸ்பார்க் பிளக் ஒயர் லூஸாக இருந்தாலோ அல்லது ஸ்பார்க் பிளக்கில் அதிக தூசு இருந்தாலே பைக் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் இருக்கும். மேலே சொன்ன எல்லாமே சரியாக இருக்கிறது என்றால், ஸ்பார்க் பிளக்கில் கனெக்‌ஷன் லூஸாக இருக்க வாய்ப்புள்ளது.  ஸ்பார்க் பிளக் ஒயரைக் கழட்டிவிட்டு மீண்டும் சரியாகப் பொருத்தினால் பைக் ஸ்டார்ட்டாகிவிடும். ஸ்பார்க் பிளக் ஸ்பேனர் இருந்தால் பிளக்கைக் கழட்டி சுத்தம் செய்துவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். ஸ்பார்க் பிளக்கை மீண்டும் சரியாகப் பொருத்தவேண்டும். இல்லையென்றால் பைக் ஸ்டார்ட் ஆகாது. 

இன்ஜின் கில் ஸ்விட்ச் 

கில் ஸ்விட்சை பலரும் பயன்படுத்துவதே இல்லை. பைக்கை ஆன்-ஆஃப் செய்யும்போது இன்ஜின் கில் ஸ்விட்ச்சை ஆஃப் செய்து பழகாமல், திடீரென ஒரு நாள் பைக் ஆன் ஆகவில்லை என்று நண்பர்களைக் காக்கவைத்து பல்பு வாங்கிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். பெரும்பாலும் நாம் வாங்கும் முதல் பைக்கில் பலமுறை பல்ப் வாங்கியிருப்போம். அதனால், கொஞ்சம் கவனம் தேவை. 

என்ன சொல்கிறார் மெக்கானிக்?

பைக் மெக்கானிக் சிலரிடம் விசாரித்தோம். மேலே சொல்லப்பட்ட பிரச்னைகளைத் தவிர மெக்கானிக்குகள் முதலில் பார்ப்பது...

  1.  பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், கிக்கர் அடித்துப்பாருங்கள். ஃப்ரீயாக கிக் ஆனது என்றால், வால்வ் நடுவழியில் மாட்டி நின்றிருக்கும். அந்தச் சமயத்தில் பைக்கை முதல் கியரில் போட்டு, தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்தால் சரியாகிவிடும்.
  2. கிக்கர் டைட்டாக இருக்கிறது என்றால், ஸ்பார்க் பிளக்கைக் கழட்டி பார்க்கவேண்டுமாம். ஸ்பார்க் பிளக்கில் கரென்ட் சரியாக வரவில்லை என்றால் ஸ்பார்க் பிளக்கில் பிரச்னை. கரென்ட் சரியாக வருகிறது என்றால் பிளக் ஒயரில்தான் பிரச்னை எனக் கண்டுபிடித்துவிடலாம். ஒயரில் பிரச்னை என்றால் சில சமயம் ஒயரை இழுத்துப் பிடித்தால் ஸ்பார்க் பிளக் சரியாக வேலைசெய்யத் தொடங்கிவிடும்.
  3.  எல்லாமே சரியாக உள்ளன. ஆனால், பிரச்னை மட்டும் தீர்ந்தபாடில்லை என்றால், காயிலை செக் செய்யவேண்டும். பைக்கில் மொத்தம் மூன்று காயில் வருகிறது. ஸ்டார்ட்டிங் காயில், இக்னிஷன் காயில்,  CD காயில். இதில் ஏதாவது ஒரு காயிலில் கோளாறு இருந்தால்கூட பைக் ஸ்டார்ட் ஆகாது.
  4.  காயில் சரியாக உள்ளது என்றால், இக்னிஷன் ஸ்விட்ச் வேலைசெய்கிறதா எனப் பார்க்கவேண்டும். இக்னிஷன் ஸ்விட்ச் ஒயரை எலி கடித்துவைத்துவிடும். அதனால் பேட்டரியின் மின்சாரம் கிடைக்காமல் பைக் ஸ்டார்ட் ஆகாது. ஸ்டார்ட் ஆகிவிட்டு இன்ஜின் ஸ்டாப் ஆகியிருந்தால் கார்புரேட்டரில் பிரச்னை இருக்கும். இல்லையென்றால், பல நாளாக ஏர் ஃபில்டர் மாற்றாமல் இருந்திருப்பீர்கள். அதை மாற்றினால் பைக் ஸ்டார்ட்டாகிவிடும்.

அவசரத்துக்கு பைக்கை நாமே சரிசெய்துகொள்ளலாம். அவசரம் எதுவும் இல்லாத வேளையில் நல்ல மெக்கானிக்கிடம் பைக்கை சரிசெய்யக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருங்கள்.



Trending Articles

Sponsored