விட்டுக்கொடுக்க மறுப்பது, பிடிவாதம்...அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க டிப்ஸ்! #GoodParenting



"என் குழந்தை சமத்து, அடமே பிடிக்காது'' எனச் சொல்லும் பெற்றோரை விரல்விட்டு எண்ணிவிடலாம். தூங்க, குளிக்க, சாப்பிட என எல்லாவற்றுக்கும் அடம்பிடிப்பது குழந்தையின் இயல்பு. ``என் குழந்தை அடம் பிடிப்பதே இல்லை'' என்கிற பெற்றோரை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். பெற்றோர் வளர்ப்பதிலும் கையாள்வதிலும்தான் இருக்கிறது. அடம்பிடிக்கும் குழந்தைகளின் பிடிவாதத் தன்மையை மாற்றுவதற்கான அடிப்படைத் தகவலைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், சியாமளா ரமேஷ் பாபு.

``குழந்தைகள் அடம்பிடிக்கும்போது, `நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். நாங்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டோம்' எனச் சில பெற்றோர் இருப்பார்கள். இது சரியான வழியல்ல. குழந்தையின் கோபத்தைக் கண்டுகொள்ளாத சூழலில், உங்கள் கவனத்தை ஈர்க்க அழுது முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது பிடிவாதத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றுவிடும். அதற்காக, குழந்தைகளுக்குச் சமமாகக் கத்திக்கொண்டு மல்லுக்கு நிற்கவும் கூடாது. இதுபோன்ற சூழலில், அவர்களின் கவனத்தை வேறு வகையில் திசைதிருப்புங்கள். பொறுமையாக உங்கள் எண்ணத்தை நிலைநிறுத்துவது அவசியம்.

Sponsored


ஒரு செயலைச் செய்ய அடம்பிடிக்கும் குழந்தையிடம் (குறிப்பாக, சாப்பிட மறுக்கும்போது) `நீ சாப்பிட்டால் சாக்லெட் தருவேன் பிஸ்கட் தருவேன்' என்பதற்குப் பதில், `நீ சாப்பிட்டால் கூடுதலா ஒரு கதை சொல்வேன், கட்டியணைத்து இரண்டு முத்தம் தருவேன்' என உணர்வின் வெளிப்பாட்டை வெகுமதியாகக் கொடுத்துப் பழக்குங்கள். இது, அடம்பிடிக்கும் குணத்தைக் குழந்தையிடமிருந்து விலக்கும்.

Sponsored


Sponsored


பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைக் கையாளும்போது, `வாங்கிக்கொடுக்க முடியாதுன்னா முடியாதுதான்' என இறுக்கமான முகத்துடன் சொல்லாதீர்கள். அவர்கள் கேட்பதை ஏன் வாங்கித் தர மறுக்கிறீர்கள், அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை அரவணைத்துச் சொல்லுங்கள்.

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது, ``நீ இப்படிச் செய்யவே மாட்டியே. இன்னைக்கு என்ன ஆச்சு?" எனக் கேளுங்கள். குழந்தை மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துங்கள். இப்படிச் சொல்லும்போது, அவர்களும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வார்கள். தன்னம்பிக்கையுடனும் வளர்வார்கள்.

வீட்டுக்கு வந்த விருந்தினரிடம் உங்கள் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்துகிறேன் என ஆடச் சொல்லி, பாடச் சொல்லிக் காட்சிப் பொருளாக்க வேண்டாம். அது, குழந்தைகளுக்குக் கூச்சத்தையோ, தன்னம்பிக்கை இல்லாத மனநிலையையோ ஏற்படுத்தும். அவர்கள் தங்களால் செய்ய முடியாது என்பதையும் பிடிவாதத்துடன் வெளிப்படுத்துவார்கள். அதுபோன்ற சூழலில் கட்டாயப்படுத்தாமல் அவர்களின் மனநிலையிலிருந்து யோசித்துப் பார்ப்பது அவசியம். ``உன்னை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். பாராட்டுவதற்காகத்தான்" எனச் சொல்லிப் பாருங்கள். அப்போதும் செயல்பட மறுத்தால், அவர்களின் இயல்புக்கு விட்டுவிடுங்கள்.

கேட்டதுமே ஒரு பொருளை வாங்கிக்கொடுக்காமல், சற்றுத் தாமதித்தே கொடுங்கள். கேட்ட எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்காமல், சிலவற்றை இல்லை எனச் சொல்லுங்கள். அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குப் பொறுமையாகப் பழக்குங்கள்.

வீட்டுக்குப் புதிதாக யார் வந்தாலும் சில குழந்தைகள் தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கும். அதுபோன்ற நேரத்தில், அவமானமாக எண்ணி குழந்தையைக் கண்டிப்பது தவறு. விருந்தினர் சென்ற பிறகு, சரியான அணுகுமுறையை நிதானமாகச் சொல்லிக் கொடுங்கள்.

பிறரை அடிப்பது, தன் விளையாட்டுப் பொருள்களை யாருக்கும் பகிர மறுப்பது, நாம் சொல்வதை காதிலேயே வாங்காமல் இருப்பது, முன்பின் அறியாதவர்கள், பெரியவர்களை மரியாதையின்றி விளிப்பது போன்ற தன்மைகளைப் போக்க, அம்மாவும் அப்பாவும் மன உறுதியோடு பொறுமையாகக் கையாள்வதன் மூலம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

பிறரின் பாராட்டுச் சான்றிதழ் பெறுவதற்காக, நம் குழந்தைகளின் பிடிவாதத் தன்மையை இரவோடு இரவாக மாற்றிவிட முடியாது. அதற்காக உங்கள் குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும்.

நம் குழந்தையின் பிடிவாத குணத்தைத் திருத்தும் முயற்சியில், ``பக்கத்து வீட்டு குட்டிப் பையன் அவன் அம்மா அப்பா சொல்றதை கேட்கறான்" என அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். இது, நிச்சயம் குழந்தையின் அடம்பிடிக்கும் குணத்தை அதிகரிக்கவே செய்யும். குழந்தையின் பிடிவாத குணத்தை வலுவாக்கி, ஒப்பிடப்பட்ட குழந்தை மீது விரோதத்தை வளர்க்கும். 

குழந்தையைக் கையாளும் விதம் பற்றிய தன் கருத்தைப் பகிர்கிறார் நடிகை அபிதா...

``எனக்கு ரெண்டும் பொண்ணுங்க. பெரிய பொண்ணுக்கு 7 வயசு. சின்னப் பெண்ணுக்கு மூன்றரை வயசு. அவங்க எது கேட்டு அடம்பிடிச்சாலும், பொறுமையாகப் பதில் சொல்வேன். கேட்டதுமே ஒரு பொருளை  வாங்கிக் கொடுத்தால் அதன் மதிப்பையும், பணத்தின் அருமையையும் புரிஞ்சுக்க முடியாது. அதனால், கேட்கும் பொருள் அவர்களுக்கு அவசியமா என யோசிப்பேன். அவசியம் எனத் தெரிந்தால், `நல்ல மார்க்  எடு' என்பது போன்ற சின்னச் சின்ன டார்கெட் கொடுத்து வாங்கிக்கொடுப்பேன். ஆரம்பத்திலேயே இந்த முறைக்குப் பழக்கப்படுத்தினால், ஆசைப்படும் பொருளை அடைய, சிலவற்றைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிடும். அதனால், உடனே கேட்டு அடம்பிடிக்க மாட்டாங்க. அப்படியே அடம்பிடிச்சாலும் என் பொறுமையால் வென்றுவிடுவேன்.''



Trending Articles

Sponsored