``வாசனை கிடையாது... சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பும் கிடையாது!”- வருகிறது பசுமைப் பட்டாசு



Sponsored



கடந்தாண்டு தீபாவளியின்போது, பட்டாசு வெடித்ததால் டெல்லி மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் காற்றில் மாசு கலந்து, புகைமூட்டம் சூழ்ந்து பல நாள்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே, உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதைத் தற்காலிகமாக தடை செய்தது. இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதைச் சவாலாக ஏற்று, பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் பசுமைப் பட்டாசை அறிமுகம் செய்து கவனம் ஈர்த்துள்ளார் வேதியியல் ஆய்வாளர் சாம்ராட் கோஷ். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பிரபல ஆராய்ச்சி அமைப்பில் உதவிப் பேராசிரியராக பணிபுரிபவரிடம் பேசினோம். 

``நான் வேதியியலில் பி.எச்டி பட்டம் பெற்றவன். எனது பேராசிரியர் கே.சி.பாட்டில், வேதியியலில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். அந்த ஆராய்ச்சி முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பசுமை பட்டாசை உருவாக்கினேன். பிளாஸ்டிக் பாட்டிலில் வேதியியல் மருந்துக் கலவையை நிரப்பி அழுத்தம் ஏற்படுத்தினேன். பாட்டிலுடன் இணைந்த விசையை அழுத்தினால் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறும் தொழில் நுட்பத்தில் ராக்கெட்டைபோல் வானத்தில் பறந்து சென்று சத்தத்துடன் வெடிக்கும். மிகப்பாதுகாப்பானது. நான்கு வயது குழந்தைகூட இதை எளிதில் இயக்க முடியும். இதில் உபயோகிக்கும் வேதி மருந்துக் கலவை வீரியமற்றது. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் சத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும். 

Sponsored


வெடித்தபின் வெடிமருந்து வாசனையின்றி காற்றில் நறுமணம் கலந்து வீசுமாறு மருந்துக் கலவையைக் கவனத்துடன் தயாரித்தேன். இந்த நறுமணம் உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்காது. குப்பைகள் சேராது. சப்தம் காதுகளைப் பாதிக்காது. காயம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை. தரையில் வெடிக்கும் பட்டாசாகவும் பயன்படுத்தலாம். இதன் செய்முறையை விளக்கி முன்னோட்டம் பார்த்தபோது, மாணவர்கள், உடன் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் வியந்து பாராட்டினர். விளைநிலங்களில் பறவைகள் மற்றும் மிருகங்களை விரட்ட விவசாயிகள்  இதைப் பயன்படுத்தலாம். விமானம் டேக் ஆஃப் ஆகும்போது பறவைகள் எதிர்ப்படாமல் இருக்கவும் உபயோகிக்கலாம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, தூய்மையான, பாதுகாப்பான பசுமை பட்டாசை, பட்டாசு உற்பத்தியாளர்கள் எளிதில் தயாரிக்க முடியும். தமிழகத்தில் சிவகாசியைச் சுற்றி பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுவதை நான் அறிவேன். தீபாவளிக்கு முன் இந்தப் பசுமை பட்டாசை சந்தைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மும்முரமாக இருக்கிறேன்" என்கிறார் சாம்ராட் கோஷ்.

Sponsored




Trending Articles

Sponsored